முஸ்லிம் பிரதிநிதித்துவமும் அரசியல் சமநிலையும்

“புதிய தேர்தல்களின் மூலம் நாம் அறிந்து கொள்கின்ற ஒரேயொரு விடயம் என்னவென்றால், அதற்கு முன்னைய தேர்தல்களில் இருந்து வாக்காளர்களாகிய நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதாகும்” என்று ஜேர்மனின் முக்கியமான தத்துவஞானி ஒருவர் கூறினார். ஒன்றரை நூற்றாண்டு கடந்து விட்ட போதும் நமது நிதர்சன நிலைமை இதுவாகத்தான் இருக்கின்றது.

குறிப்பாக, கடந்தகால தேர்தல்கள், அதில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் சமூகம் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அந்தப் பட்டறிவின் அடிப்படையில் தெரிவுகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம்;.

முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுக்காக அவர்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டாமல், பொருத்தமான பிரதிநிதிகளை தெரிவு செய்யாமல், கடந்த காலத்தில் விட்ட தவறுகளை தேர்தல்களின் ஊடாக மீளவும் புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு மக்கள் கூட்டமாகவே முஸ்லிம் சமூகம் இருப்பதாகத் தோன்றுகின்றது. இந்த நிலைமை மாற வேண்டும்.

ஆனால், இதனை அரசியல்வாதிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அறிவுடமைச் சமூகமாக, தலைமைகளை கேள்வி கேட்கும் வாக்காளர்களாக, தமது எம்.பி.க்களை தட்டிக் கேட்கும் தைரியமுள்ள ஆதரவாளர்களாக மக்கள் உருவாகுவதை அரசியல்வாதிகள் விரும்புவதும் இல்லை. எனவே முஸ்லிம் அரசியல் கலாசாரத்தில், அதன் போக்கில் மாறுதல்கள் வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகின்ற சாதாரண முஸ்லிம் மக்களிடமிருந்தே இந்த மாற்றம் உருவாக வேண்டியுள்ளது.

கவனிக்க வேண்டியவை

அந்த வகையில், ஆகஸ்ட் 5 இல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் சில விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, கடந்த இரு தசாப்தங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் யாரை மீண்டும் எம்.பி.யாக தெரிவு செய்ய முடியும் என்பதை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாவதாக – புதுமுகங்களாகவும், வாக்குச் சேகரிப்பதற்கான ‘போடுகாய்களாகவும்’ களமிறக்கப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம் சமூகத்தை பிரதிவிம்பப்படுத்த தகுதியானவர்கள்தானா? என்பதை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்விடத்தில் கட்சி, ஊர் என்பதற்கப்பால் சிந்திக்க வேண்டும்.

அதேபோன்று, அண்மைக்காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் முஸ்லிம் சமூகம் எடுத்த நிலைப்பாடுகள்,  கிடைத்த அனுபவங்கள், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்ட பெருந்தேசியத்தின் போக்கு, எல்லா ஆட்சியிலும் சிறியதும் பெரியதுமாக மேலெழ முனையும் இனவாதம், கடந்த சில வருடங்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற புதுவித நெருக்கடிகள் பற்றியெல்லாம்… ஒரு சமூகமாக முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

இவற்றிற்கு மேலதிகமாக மிக முக்கியமாக மேலும் இரு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது. முஸ்லிம் சமூகம் சார்பான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எண்ணிக்கை மற்றும் தர அடிப்படையில் உறுதிப்படுத்துவதும், அரசியல் சமநிலையைப் பேணும் விதத்தில் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதும் ஆகும்.

சாதாரணமான காலத்திலேயே கணிசமான முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகம் பற்றிச் சிந்திப்பதற்கு நல்லநேரம் பார்க்கின்றவர்களாக இருக்கையில், தேர்தல் பிரசார பரபரப்பில் இதையெல்லாம் சிந்;திக்க நேரம் ஒதுக்குவார்கள் என நம்ப முடியாது. எனவே, கடவுளை நம்பும் பக்தர்கள் போல அரசியல்வாதிகளை கண்மூடித்தனமாக நம்புகின்ற பேர்வழிகள் எக்கேடு கெட்டுப் போனாலும், எதிர்காலம் பற்றிய அக்கறையுள்ள ஒவ்வொரு பொதுமகனும் இது விடயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டியது கால நியதியாகும்.

முஸ்லிம் கட்சிகள்

இந்தத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் நாடு முழுவதும் 7452 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களுள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்தும், சொந்தக் கட்சிகளில் தனித்தும் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகச் சொல்ல முடியும்.

தேசிய மட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளான பொதுஜனப் பெரமுண, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தும்  களமிறங்கியுள்ளன. இதில் இரு அணிகளுக்கு இடையில் பலத்த போட்டி நிலவும். தனியாக ஒரு கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காமல் விடலாம் என்பதுடன், ஆட்சியமைப்பதற்கு கூட கூட்டுச்  சேர்க்க வேண்டிய நிலையும் வரலாம் என்பதே இப்போதைய அனுமானமாகும்.

இப்படியிருக்க, றவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒவ்வொரு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றன. புத்தளம் மாவட்டத்தில் பொதுச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகின்றன. ஏனைய மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவின் தொலைபேசிச் சின்னத்திலேயே இவ்விரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கி;ன்றன.

புத்தளத்தில் ஏற்பட்ட ஒன்றிணைவை, முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹக்கீமினாலும் றிசாட்டினாலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. அவர்களது வியூகங்கள் அல்லது கீழ்மட்ட அரசியல்வாதிகள் அதற்கு தடையாக அமைந்தன என்றும் சொல்ல முடியும்.

இதேவேளை, ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியானது பொதுஜனப் பெரமுணவுடன் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசிக் கட்டத்தில் வேட்பாளர் இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளால் சொந்தச் சின்னமான ‘குதிரையில்’ அக் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. பொலனறுவை, அம்பாறை (திகாமடுல்ல), திருமலை மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை இக்கட்சி தாக்கல் செய்திருந்த நிலையில் திருமலை வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுநீதிமன்ற விசாரணையில் இருக்கின்றது.

கடந்த உள்ளுராட்சி தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்னதாக எம்.ரி.ஹசன்அலி, பசீர் சேகுதாவூத் ஆகியோரினால் பொறுப்பேற்கப்பட்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதற்குப் புறம்பாக, பிரபலம் குறைந்த சிறு கட்சிகள் மற்றும் பல்வேறு சுயேட்சைக் குழுக்களிலும், நேரடியாக பெரும்பான்மைக் கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆக மொத்தத்தில் வடக்கு, கிழக்கில் 3 அல்லது 4 முஸ்லிம் கட்சிகளிடையேயான விட்டுக் கொடுப்பும் கனவாகிப் போன கதையும் இருக்கின்றது.

வெற்றியின் சவால்கள்

இந்தப் பின்னணியில், இத் தேர்தலைப் பொறுத்தமட்டில் நினைத்த வெற்றியைப் பெறுவது என்பது எல்லா முஸ்லிம் கட்சிகளுக்கும் ஏனைய பெரும்பான்மைக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் முன்னரை விடவும் மிகவும் சவாலானதாக இருக்கும். “நாங்கள் மாவட்டத்தை வெற்றி கொள்வோம், எங்களது கட்சிக்கு 3 அல்லது 5 எம்.பி.க்கள் கிடைக்கும்” என்று அவர்கள் தேர்தல் பிரசாரங்களில் கணக்குக் காட்ட முடியும். ஆனால், நிஜத்தில் 95 சதவீதமான முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றிக்கு அவர்கள் ‘தீயாய் வேலை செய்ய’ வேண்டியிருக்கின்றது.

மக்கள் சார்பு அரசியலில் அரசாங்கங்களின் தோல்வி, முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கான அரசியலைச் செய்யத் தவறியமை, வாக்குக் கேட்பதற்கான பேசுபொருள் கைவசம் இல்லாமை, முன்னைய சில எம்.பிக்களில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட  வெறுப்பு, அநேக பிரதேசங்களில் அதிகமான கட்சிகளும் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றமை, இதனால் முஸ்லிம் அணிகளுக்கு இடையில் வாக்குச் சண்டையும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்குள்ளேயே விருப்புவாக்குகளுக்கான குத்துவெட்டுக்களும் இடம்பெறுகின்றமை என பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லலாம்.

எது எவ்வாறாயினும், இந்த தடைகள், சவால்களை எல்லாம் தாண்டி அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதே தேர்தல் முறைமையே தொடர்;ந்தும் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்தும் விதத்திலான திருத்தங்கள் கொண்டு வரப்படுவதற்கான நிகழ்தகவுகள் நிறையவே உள்ளன. எனவே முஸ்லிம் சமூகம் இந்த வாய்ப்பை காத்திரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முக்கியமான பாராளுமன்றம்

புதிய பாராளுமன்றம் நிறுவப்பட்ட பின்னர் நாட்டின் அரசியலமைப்பிலும் சட்டவாக்கங்களில் மாற்றங்கள் நிகழ்த்தப்படும் எனவும் முக்கியமான அரசியல் தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரசியலமைப்பில் மற்றுமொரு திருத்தம், எம்.சி.சி. உடன்படிக்கை, தொல்பொருள் மையங்களை பாதுகாத்தல், காணி விவகாரம் உள்ளடங்கலாக முஸ்லிம்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல பல நகர்வுகள் மேற்கொள்ளப்படும் வாய்ப்புள்ளது. ஆதலால், உருப்படியான முஸ்லிம் பிரதிநிதிகளில் வகிபாகம் பாராளுமன்றத்தில் அவசியமாகின்றது.

கடந்த காலங்களில் சுமார் 20 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். பிரதானமான 3 முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்தன. அதன் தலைவர்கள் உள்ளடங்கலாக பல முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் கோலோச்சினர். ஆனால், முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள், உரிமைகளில் எதற்கு திருப்தியான தீர்வை அவர்களால் பெற்றுத் தர முடிந்தது? என்ற ஒரு நியாயமான கேள்வி இவ்விடத்தில் எழத்தான் செய்கின்றது.

அது உண்மைதான் ! 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘முஸ்லிம் சமூகத்திற்கான’ அரசியலைச் செய்யவில்லை. பலபக்கமும் அவர்கள் சிந்தித்தனர். ‘நலன்களின்-மோதல்’ ஏற்பட்டதால் கடைசியில் தமக்கு பாதுகாப்பான வலயத்திற்குள்ளான அரசியலை அவர்கள் செய்தார்கள் என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். இந்த இடத்திலேயே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ‘தராதரம்’ குறித்தும் முஸ்லிம் சமூகம் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது.

தரமான எம்.பி.க்கள்

இம்முறை நிலவுகின்ற களநிலவரப்படி பார்த்தால், விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழேயே முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடுமோ என்ற அச்சம் அரசியல் நோக்கர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. எனவே, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, மூன்றிலிரண்டு பங்கு முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களில் உள்ளவர்களுக்கும் உள்ளது. ஆனாலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் இது விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம், முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்ல என்பதை கவனிக்க வேண்டும். அதிகமானவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக சமூக சிந்தனையற்ற, உதவாக்கரை வேட்பாளர்களையும், பல தடவை மக்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளையும் தெரிவு செய்து விடக் கூடாது. எண்ணிக்கையை உறுதிப்படுத்துகின்ற சமகாலத்தில் அவர்கள் உரிய தராதரம், நற்பண்புகள், சமூக அக்கறை போன்றவற்றைக் கொண்ட தரமான மக்கள் பிரதிநிதிகளா  என்பதை உரசி பார்க்க வேண்டியது இன்றியமையாதது.

இதேவேளை மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் சமநிலையைப் பேணுவதும் அவசியமாகவுள்ளது. ஆங்கிலத்தில் மிகப் பிரபலமான ஒரு முதுமொழியான “ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்காதே” என்ற வாசகத்தை கல்விமானும் அரசியல்வாதியுமான ரீ.பி.ஜாயா ஒரு தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார். சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது வசதிக்கேற்றாற்போல் இந்த வாசகத்தை வலியுறுத்துவதுண்டு.

ஆயினும், ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கக் கூடாது என்பதையும் எல்லாக் கூடைகளிலும் பகிர்ந்து வைக்கின்ற வேளையிலும் ஒவ்வொரு முட்டையும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் பல தடவை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கின்றோம்.

ஆகவே, இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பதை இப்போதைக்கு அறுதியாகச் சொல்ல முடியாதிருக்கையில், எல்லாக் கூடைகளிலும் தரமான முட்டைகளை தெரிவு செய்து (பதவியில்) வைப்பது குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது அரசியல் சமநிலைக்கு இது மிக அவசியமானதும் கூட.

சமநிலை பேணுதல்

நாம் பலமுறை முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டபடி, இலங்கையின் ஆட்சியாளர்கள் எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்திலேயே முஸ்லிம்கள் நோக்க வேண்டும். யாரையும் பகிரங்கமாக வெறுக்கவோ, யாரையும் அளவுக்கதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. ஏனென்றால், எந்தப் பெருந்தேசியக் கட்சியும் சிங்கள மக்களை பகைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சார்பாக நிற்கப் போவதில்லை. எனவே, நாம் ஏன் அவர்களுக்காக சுயமிழந்து போக வேண்டும்? அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் செயற்பாடு அவ்விதம் இருக்கவே முடியாது.

இலங்கையில் 16 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் வாக்குகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு வாக்காளர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். இதில் சிங்கள, தமிழ் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படக் கூடிய முஸ்லிம் வாக்குகளாக சில இலட்சங்களை கழித்தாலும், 10 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் முஸ்லிம் வேட்பாளர்களை மையமாகக் கொண்டிருக்கின்றன என்று எடுத்துக் கொள்வோம்.

ஆனால், அண்மைக்காலங்களில் நாம் அந்த வாக்குகளை ஒன்றுதிரட்டி முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை பெருந்தேசியத்திற்கு காட்டவில்லை. அதற்காக, இனவாதம் பேசி வாக்குகளை பிரிப்பது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. மாறாக, முஸ்லிம்களின் வாக்குகள் ஒன்றுசேர்ந்தால் ஒரு ஆட்சியைக் கூட தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் அளவுக்கு வியூகங்கள் வகுக்கப்படவில்லை. இன்னுமின்னும், பெருந்தேசியக் கட்சிகளுக்கு முகவர்களாக, கிளைக் கட்சிகளாக இருந்து முட்டுக் கொடுக்கின்ற போக்கையே காண முடிகின்றது.

சரி அப்படியானால், இங்கு அரசியல் சமநிலை பேணப்பட வேண்டும். யார் ஜனாதிபதியாக இருந்தாலும், எந்தப் பெரும்பான்மைக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் முஸ்லிம் சமூகம் தனது வகிபாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், எல்லாத் தரப்பில் உள்ள தரமான முஸ்லிம் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்.

அத்துடன், தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கிற்கும் இடையிலும் முஸ்லிம் அரசியலில் இன்னுமொரு விதமான ஒரு சமநிலை காணப்படவும் வேண்டும். அந்தந்த பிராந்தியங்களில் வாழும் மக்களின் பிரத்தியேக அபிலாஷைகளை பேசுவதற்கும் அதற்காக குரல்கொடுப்பதற்கும் இது அடிப்படையானதாக அமையும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

கூட்டுப் பொறுப்பு

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் (ஆளும் மற்றும் எதிர்தரப்புகளில்) அதில் முஸ்லிம்களின் அரசியல் சமநிலையைப் பேணும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதுடன், முஸ்லிம் சமூகம் சார்பான எம்.பி.க்களின் எண்ணிக்கையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இதில் ஒரேயொரு நிபந்தனை தெரிவு செய்யப்படும் எம்.பி.க்கள் தரமானவர்களாக, தகுதிவாய்ந்தவர்களாக, சீரழிந்த முஸ்லிம் அரசியலை சீர்படுத்தும் வல்லமை பொருந்தியவர்களாக இருப்பது அதைவிட இன்றியமையாதது ஆகும்.

எனவே இது விடயத்தில் அரசியல் தலைமைகள் மட்டுமன்றி, புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூம்; தொடக்கம் அரசியல் அறிவுள்ள பாமர மக்கள் தொட்டு கடைநிலை வாக்காளன் வரை ஒவ்வொரு அவதானமாகச் செயற்பட வேண்டும். பள்ளிவாசல்கள் போன்ற மத நிறுவனங்கள் தேர்தல் காலத்தில் மட்டும் களத்திற்கு வந்து, ஒருபக்கச் சார்பான நிலைப்பாடுகளை எடுக்காமல் ‘சரியான தெரிவுகளை’ மேற்கொள்வதற்கு மக்களை வழிப்படுத்துகின்ற பணிகளைச் செய்வதே சிறப்பு. அதைவிடுத்து, அரசியலுக்காகவும் அரசியல்வாதிகளுக்காகவும் யாரும் சண்டையிட்டுக் கொள்ளத்  தேவையில்லை.  

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘வியூகங்கள்’ எப்பேர்ப்பட்டவையாக இருந்தாலும், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பின் போது சரியான தெரிவை மேற்கொள்வதற்கான ‘விவேகத்துடன்’ செயற்பட்டால், இன்னுமொரு முறை ஏமாறுவதை தவிர்க்கலாம்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page