இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு எதிராக 7 தீர்மானங்களுடன் பொதுபலசேனா : முஸ்லிம்களை கண்டிக்கு செல்ல வேண்டாமென ஜம்இய்யதுல் உலமா

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு  7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ள மாநாட்டியிலேயே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

இதே வேளை முஸ்லிம்கள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் , கண்டி நகர் ஊடாக பயணம் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  சபை கேட்டுக் கொண்டுள்ளது. 

இம்மாநாடு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவிக்கையில்,

நாளை மறுதினம்  பிற்பகல் 2 மணிக்கு கண்டி – போகம்பர மைதானத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் காலை 9 மணியளவில் கண்டி – தலதா மாளிகையில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதோடு, இதில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு கட்சி பேதமின்றி சகல அரசியல் தலைவர்களுக்கும் பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதோடு, அனைத்து இன மக்களையும் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதின் கீழ் நெறிப்படுத்துவதாகும். எனவே இதற்கு அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பு வழகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்னரே அரசாங்கமும், ஏனைய தரப்புக்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து கவனம் செலுத்தின. ஆனால் பொதுபல சேனா அமைப்பு இதனை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தது. 

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று இனியொரு பயங்கரவாத் தாக்குதல் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் பொதுபல சேனா தொடர்ந்தும் செயற்படும். அதற்கான முதல் நடவடிக்கையாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page