மக்களே! அலட்சியம் வேண்டாம், கவனமாக இருப்போம்!

ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களில் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மீரிகம, குருணாகல், கட்டான, திவுலப்பிட்டிய, மொனராகலை, யாழ்ப்பாணம், சீதுவ, ஜா – எல, மகர ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 321 பேர் கொரோனா தொற்று தொடர்பில், இனங்காணப்பட்டுள்ளனர்.

பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் இத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எண்ணிக்கை அதிகரிக்குமானால் முழு நாடும் முடக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மக்கள் பெருமளவு பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஓர் குறிப்பிட்ட இடமன்றி, பல்வேறு பிரதேசங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை பலரையும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.

இலங்கையிலே, கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் திவுலப்பிட்டிய சம்பவம், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இல்லாது செய்துள்ளது.

ஏற்கனவே வெலிசறை கடற்படை முகாம், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் என்ற இரு சம்பவங்களே கொத்தணி முறையில் கொரோனா வைரஸ் பரவல் இனங்காணப்பட்டு அது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதேவேளை, விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமானால் கொரோனா தொற்றுப்பரவும் சாத்தியம் அதிகரிக்கும் என்றும், மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. எனினும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமலேயே கொரோனா தொற்று உருவாகியுள்ளது.

இது சமூகப்பரவலாக மாறுமானால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று உருவாகியது என்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

உண்மையில் அதன் மூலத்தை கண்டறிவதன் மூலமே நிலமையை ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.

அத்துடன் கொரோனாவுடன் வாழக்கற்றுக்கொள்ள வேண்டுமென ஏலவே உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மீண்டும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தக்கொடிய நோயை எதிர்கொள்வது அவசியம். உலக நாடுகளே கொரோனாவினால் கதிகலங்கிய கடந்த சில மாதங்களில் இலங்கையில் மக்கள் சகஜமாக தங்கள் கடமைகளை மேற்கொண்டு வந்தனர்.

சமூக இடைவெளி குறித்தே சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பிலே சிந்திக்கவில்லை. எனினும் தற்பொழுது நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.

எனவே, சகலரும் முன்னரையும் விடவும் அதிகமாக சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டும். மாறாக நாம் அலட்சியமாக இருந்தால் முழு நாடுமே ஸ்தம்பிக்கும் நிலைமை உருவாகும்.

ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நடந்துகொள்வது அவர்களின் பொறுப்பாகும். மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும் அநாவசியமான பயணங்களை தவிர்க்கவும் வேண்டியது அவசியம்.

அனைத்திற்கும் மேலாக எவருக்கேனும் நோய் அறிகுறி காணுமிடத்து உடனடியாக வைத்தியசாலையை அணுகுவது அவசியம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் வீரகேசரி பத்திரிகை