தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணதமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்படாமை மிகவும் பாரதூரமானதாகும். 

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட நிலைமையை விட இது அதிக பாதிப்புக்களைக் கொண்டதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்தே தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்ட நோயாளர்களில் அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்த பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இதுவரையில் இனங்காணப்படவில்லை. எனவே அவருக்கு சமூகத்திலிருந்து தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று எம்மால் கற்பனை செய்ய முடியும். இது பாரதூரமானதாகும்.

இவர் தொழில் புரிந்த ஆடை தொழிற்சாலையில் சுமார் 1700 பேர் தொழில் புரிகின்றனர். 1700 தொழிலாளர்களைக் கொண்ட இந்த தொழிற்சாலையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் தொழில் புரிபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாததால் 1700 பேருக்கும் அச்சுறுத்தல் நிலைமையே உள்ளது.

குறித்த பெண் தொழில் புரிந்த ஒரு பகுதியில் மாத்திரம் அதாவது அவருடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியவர்கள் 783 பேர் ஆவர். இது கந்தக்காடு பிரதேசத்தில் ஏற்பட்ட நிலைமை விட பாரதூரமானதாகும். கணிப்பீடுகளிகளின் அடிப்படையில் பார்க்கும் போது 99 இல் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றால் இது மிகவும் மோசமான நிலைமையாகும்.

Read:  மீண்டும் ரணில் !!

எஞ்சியுள்ள 1600 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படும் ? இவர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் பரவலடைந்துள்ளனர். மினுவாங்கொடை பகுதியிலுள்ளவர்கள் மாத்திரம் இங்கு தொழில் புரியவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த பெண்ணுடைய சொந்த இடம் மினுவாங்கொடை அல்ல. ஹபராதுவை அவரது சொந்த இடமாகும். எனவே மினுவாங்கொடை என வரையறுக்காமல் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்றார். 

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEவீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)