பிரான்ஸில் இலங்கைத் தமிழ் குடும்பத்தின் படுகொலை – வெளியானது புகைப்படம்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐந்து பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள இருவீட்டார்கள் ஒன்றாக இருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்து தப்பிவந்த பிள்ளை ஒன்று தங்களது மாமா எங்களை கொடூரமாக தாக்குவதாகவும், சுத்தியலை கொண்டு தாக்குவதாகவும் பொதுமகன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த பிள்ளை இரத்த காயங்களுடனே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கைக்குழந்தை, நான்கு வயது குழந்தை, 14 வயதுக்கு உட்பட்ட இருவர், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் என ஐந்து பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவரும் கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“நேற்று தான் குடும்ப சகிதம் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், தங்களின் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை” எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குடும்பத்தினர் மிகவும் அமைதியானவர்கள் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.