ராஜபக்ஷக்களின் பிரச்சாரமே மீண்டும் கொரோனா வைரஸ் பரவக் காரணம் – அநுரகுமார

பிரசார கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விதிமுறைகள் விதித்த போது அவர் மீதும் ஆணைக்குழு மீதும் ராஜபக்ஷக்கள் அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். 

மக்கள் மத்தியில் கொரோனா கட்டுப்படுத்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இவர்கள் முன்னெடுத்த பிரசாரங்களின் காரணமாகவே நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  

ராஜபக்ஷக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே கொரோனா பற்றி மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்சம் இல்லாமல் போனமைக்கான காரணமாகும். 

நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சாதாரண மக்கள் இறந்தால் நெருங்கிய உறவினர்கள் கூட சடலத்தை பார்க்க முடியாதவாறு 24 மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

 ஆனால் தொண்டமானுடைய சடலம் 5 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்த நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் அங்கு தொற்றுக்குள்ளான நபர் இனங்காணப்பட்ட பின்னர் 300 இற்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ராஜபக்ஷக்கள் கூறியமையின் காரணமாகவே அதன் ஆபத்து பற்றி மக்கள் அச்சமற்று செயற்பட்டமைக்கு காரணம்.

இது வரையில் இனங்காணப்பட்ட பரலை விட இது பெருமளவு அதிக தொகையாகும். இந்த மத்திய நிலையத்திலிருந்து வெளியில் சென்ற பலர் பொது போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர். 

எனவே ஒரு அபாயமான நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொண்டு கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது சிறந்த தீர்மானமாகும்.

ஆனால் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நாட்டு தலைவர்கள் மாத்திரமல்ல. இதனால் பொது மக்களுடைய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவிக்க வேண்டியதில்லை. 3 – 4 நாட்களேனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் எந்த அதிகாரத்திற்காக எவ்வாறு செயற்பட்டாலும் மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். -வீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page