அக்குறணை பிர.சபை எல்லைக்குள் சட்ட விரோத கட்டங்களை அப்புறப்படுத்த வந்தால்… பிர.சபை தலைவர் இஸ்திஹார்

அக்குறணை நகரம்‌ உட்பட அக்குறணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்‌ சட்டவிரோத கட்டடங்கள்‌ இருப்பதாக இணங்காணப்பட்டு அவற்றை உடனடியாக இடித்து அப்புரப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்கள்‌ அறிவுறுத்தல்‌ விடுத்தால்‌ அதனை உடனடியாக நிறைவேற்றிட தான்‌ கடமைப்பட்டுள்ளதாகவும்‌ அதனை நிறைவேற்றுவதும்‌ நடைமுறைப்படுத்துவதும்‌ தனது முக்கிய பணியும்‌ கடமையுமாகுமென அக்குறணை பிரதேச சபை தலைவர்‌ ஐ.எவ்‌. இப்திகார்‌ தெரிவித்தார்‌.

கடந்த 20ஆம்‌ திகதி கண்டி பூவெலிகட பகுதியில்‌ ஐந்து மாடி கட்டடமொன்று இடிந்து விழுந்து மூன்று உயிர்களை காவுகொண்டதன்‌ விளைவாக மத்திய மாகாண ஆளுநர்‌ லலித்‌ யூ கமகேவின்‌ விசேட பணிப்புரைக்கிணங்க கண்டி மாநகரில்‌ சட்டவிரோத கட்டடங்கள்‌ விடயமாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளின்‌ மூலம்‌ கண்டி மாநகரில்‌ சுமார்‌ 250இற்கும்‌ மேற்பட்ட சட்டவிரோத கட்டடங்கள்‌ இருப்பதாகவும்‌ அவற்றை உடனடியாக இடித்து அகற்ற வேண்டிய அவசியம்‌ பற்றியும்‌ இந்தக்‌ கட்டடங்களுக்கு அனுமதிகள்‌ வழங்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்‌ வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌, அக்குறணை நகரம்‌ உட்பட அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள்‌ சம்பந்தமாக வினவியபோதே அக்குறணை பிரதேச சபை தலைவர்‌ ஐஜ.எவ்‌.இப்திகார்‌ மேற்கண்டவாறு தெரிவித்தார்‌.

“அக்குறணை பிரதேச செயலக பிரிவுக்குட்‌பட்ட சட்டவிரோத கட்டடங்கள்‌ என்பது நான்‌ பதவிக்கு வரும்‌ முன்பே நிர்மாணிக்கப்பட்டவை. நான்‌ இப்பிரதேச சபையின்‌ தலைவராக பதவியேற்றதன்‌ பின்பு நிர்மானப்‌ பணிகள்‌ உட்பட சகல நடவடிக்கைகளும்‌ பிரதேச சபையின்‌ சட்டவரைவுக்குள்ளும்‌, உள்ளூராட்சி மன்ற விதிமுறைகளுக்கு மாற்றம்‌ இல்லாதவாறும்‌ எனது பணிகளும்‌ உத்தரவுக்ளும்‌ முறையே நடந்துள்ளன. கடந்த கால அக்குறணை வெள்ள அனர்த்தம்‌ பல ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்று வருவதும்‌ இதற்கு விடிவுகளை காண்பதற்கு முன்னைய ஆட்சியாளர்கள்‌ நடவடிக்கை எடுக்கப்படாமையின்‌ காரணமாக என்மீது குற்றம்‌ சுமத்துவது எவ்வகையிலும்‌ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தற்போது கடந்த 20ஆம்‌ திகதி பூவெலிகட சம்பவத்திற்கு முன்பதாகவே ஜனாதிபதியின்‌ விசேட செயலணி இப்பகுதியில்‌ சட்டவிரோத கட்டடங்கள்‌ சம்பந்தமாகவும்‌ அக்குறணை நகர அபிவிருத்தி சம்பந்தமாக விசேட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே. குறித்த ஜனாதிபதி செயலணியும்‌ மத்திய மாகாண ஆளுநர்‌ லலித்‌ யூ கமகேவின்‌ ஆய்வுகளும்‌ அக்குறணை நகர்‌ உட்பட அக்குறணை பிரதேச சபை எல்லைக்குள்‌ சட்டவிரோத கட்டடங்கள்‌ மற்றும்‌ நிர்மாணப்‌பணிகள்‌ இருப்பதாக சுட்டிக்காட்டி அவை அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தல்களும்‌ பணிப்புரைகளும்‌ வழங்கப்பட்டால்‌ அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்திட உள்ளூராட்சி மன்றம்‌ என்ற வகையில்‌ நாம்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.

இந்த அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தும்போது நான்‌ முன்னர்‌ கூறியதுபோன்று எந்தவித தராதரமும்‌ பாராது அவற்றை நிறைவேற்றிட ஒரு போதும்‌ தயங்கப்போவதில்லையென்றும்‌ அரச கட்டளையை நிறைவேற்றுவது தனது பாரிய பொறுப்பென்றும்‌” அவர்‌ மேலும்‌ தெரிவித்தார்‌.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter