சகல அரபு மத்ரஸாக்களிலும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர் ஹலீம்

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களிலும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாச்சாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

அரபுக் கல்லூரிகளில் தொழில் நுட்ப கல்வி அறிவையும், உயர் பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொள்வதற்கான திட்டங்கள், புதிய ஒழுங்கு விதி முறைகளுடன் உள்வாங்கப்பட்டுள்ளன. தீவிரவாத்தை ஊக்குவிக்கக் கூடிய செயற்பாடுகள் கொண்ட எந்த அம்சங்களும் பாடவிதானத்தில் இடம்பெறாமல் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் வழிகாட்டலுடன் இவை முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில் யார் என்ன சொன்னாலும் எதிர் வரும் காலங்களில் வெளியாகும் மௌவிமார்கள் அறிவுத் துறையில் ஓர் உன்னதமான வளர்ச்சியையும், மேம்பாட்டையும் ஒருங்கே கொண்டவர்களாக உருவாக்கப்போவது உறுதி எனவும் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் மேலும் தெரிவித்தார்.

அரபுக் கல்லூரிகள் தொடர்பாகவும் மற்றும் ஹஜ் விவகாரம் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் சட்ட மூலத்தை உருவாக்கி அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முஸ்லிம் சமய கலாச்சார மற்றும் தபால் துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதிய தீர்மானங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை, மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

அரபுக் கல்லூரிகளைக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து செயற்படுவது தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் என்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த மே மாதம் இடம்பெற்றது. இதன் போது சகல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அரபுக் கல்லூரிகளைக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும் அதேவேளை இந்த வேலைத் திட்டத்தை முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுப்பதற்கு எல்லா முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் ஏகமானதாக இணக்கம் தெரிவித்துள்ளார்கள். (ஸ)

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு