சுதந்திரக் கட்சியை மைத்திரிபால துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டார் – சந்திரிக்கா ஆவேசம்

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

மறைந்த பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை கம்பஹாவில் உள்ள ஹொரகொல்ல பண்டாரநாயக்க நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமைதாங்கினார். மத சடங்குகள் நிறைவுபெற்ற பின்னர் பண்டாரநாயக்கவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ரனதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசியலமைப்பின் 20வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுதந்திரக் கட்சியை குடும்ப சொத்தாக கருதவில்லையெனவும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கட்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததாக கூறியுள்ளார்.

எனினும், மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா