இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

கட்டுரை உள்ளடக்க தலைப்புக்கள்

 • பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.
 • குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம்.
 • குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
 • குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?
 • தஹ்னீக்.
 • பெயர் சூட்டுதல்.
 • அகீகா.
 • முடியின் எடைக்கு நிகரான வெள்ளியை கொடுக்க வேண்டுமா?
 • பால்புகட்டுதல்.
 • கத்னா செய்தல்.
 • பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்.
 • குழந்தை பாசம் பெற்றோர்களை வழிகெடுத்துவிடக் கூடாது.
 • நீதமாக நடக்க வேண்டும்.
 • குழந்தைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 • வீரர்களாக வளர்க்க வேண்டும்.
 • சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
 • குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
 • செலவு செய்வது கடமை.
 • வீண்விரயம் செய்வது கூடாது.
 • தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்ல வேண்டும்.
 • சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்.
 • விளையாட அனுமதிக்க வேண்டும்.
 • விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்.
 • அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்.
 • தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்.
 • பிள்ளைகளை சபிக்கக்கூடாது.
 • கல்வி கற்றுத்தர வேண்டும்.
 • உபதேசம் செய்ய வேண்டும்.
 • ஒழுங்கு முறைகளை கற்றுத்தர வேண்டும்.
 • மார்க்க அறிஞர்கராக மாற்றலாம்.
 • பயிற்சி அளிக்க வேண்டும்.
 • காது மூக்கு குத்தலாமா?
 • தாயத்து தொங்க விடக்கூடாது.
 • ஓதிப்பார்க்கலாம்.
 • மகன் திருந்தாவிட்டால்…

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆவதும் தீயவர்களாக ஆவதும் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.

பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிமாக இருந்தால் குழந்தைகளும் பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்ட குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்லக் குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும்.

“ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1359)

எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மிடத்தில் இவையெல்லாம் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.

குழந்தைகளை பெற்றெடுப்பது பெரிய விஷயமல்ல. ஏனென்றால் ஆடு மாடு கோழி குதிரை இன்னும் கோடிக்கணக்கான உயிரினங்களும் குட்டியிடத்தான் செய்கின்றன. பெற்றெடுத்தக் குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையுள்ளது.

பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.

திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் முறையை இந்நூல் விவரிக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் இதைப் படித்துணர்ந்து இதனடிப்படையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையை கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்தக் காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தயாரானார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். (அல்குர்ஆன் 37 : 102)

குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும்

பெற்றோர்கள் வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் பெற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மத் 10202)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.

எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” என்று (ஸக்கரிய்யா) கூறினார். (அல்குர்ஆன் 19 : 6)

ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். (அல்குர்ஆன் 3 : 38)

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25 : 74)

நம்பிக்கை இழந்து விடக்கூடாது

குழந்தை பிறக்காதவர்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.

குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49)

இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.

ஸக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! (அல்குர்ஆன் 19 : 4)

பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16 : 58)

பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81 : 8)

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்” என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் 5127)

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “”இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 1418)

“யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 5995)

குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம்

பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்வது இறைநிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதை தடைசெய்துள்ளார்கள். மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன. (அல்குர்ஆன் 6 : 137)

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன் 6 : 140)

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6 : 151)

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன் 17 : 31)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் (60 : 12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். (அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) நூல் : புகாரி 5975)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 6857)

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

கருவில் குழந்தை உருவாகுவதை தடுப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் “அஸ்ல்’ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்துகொண்டிருந்தோம். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : புகாரி 5209)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்… அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் 2606)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்துகொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை. (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் 2610)

மேலுள்ள செய்திகளை கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியேத் தீரும் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி 2542)

தற்காலிகமாக குழந்தை உருவாவதை தடுத்துக்கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வதை சிறந்தது கிடையாது என்று நபியவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும்.

தற்காலிக குடும்பக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்தி தற்காலிகமாக குழந்தை பிறப்பதை தவிர்த்துக்கொள்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்த பின் பெற்றெடுத்தக் குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யமாட்டார்கள்.

அதிகமானக் குழந்தைகளை பெற்றெடுப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட ஒன்றாகும். அதிகக் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களை திருமணம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வேண்டாமென்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் தடுத்தார்கள். (குழந்தையை பெற்றெடுக்க) அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். (குழந்தையை பெற்றெடுக்க) அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி) நூல் : நஸயீ 3175)

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதால் அவற்றை அடிப்படையாகக்கொண்டு இதை செய்துவருகிறார்கள். ஆனால் அந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக இருக்கிறது.

ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹசன் ரளியல்லாஹு அன்ஹு,அவர்களை பெற்றெடுத்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹசன் ரளியல்லாஹு அன்ஹு,அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள் என்று ஒரு ஹதீஸ் திர்மிதியில் 1436 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இது ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் வழியாக வருகிறது. இவர் பலவீனமானவர் என்று இப்னு முயீன் என்ற அறிஞரும் எதற்கும் தகுதியில்லாதவர் என்று இமாம் அஹ்மத் அவர்களும் இவரது தகவல் மறுக்கப்பட வேண்டியது என்று இமாம் புகாரி அவர்களும் இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று இப்னு சஃத் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மேலும் இதேச் செய்தி இமாம் பைஹகீ அவர்கள் எழுதிய ஷஸ்ரீஃபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை காசிம் பின் முதய்யப் என்பவரும் முஹம்மத் பின் யூனுஸ் என்பவரும் அறிவிக்கிறார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் என்று இமாம்கள் கூறியுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் குழந்தையின் காதில் பாங்கும் இகாமத் சொல்வதென்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத அனாச்சாரமாகும்.

தஹ்னீக்

குழந்தை பிறந்த உடன் பேரித்தம்பழத்தை மெண்டு அதன் வாயில் தடவும் வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸ‏இபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உமிழ் நீரே ஆகும். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 3910)

எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரித்தம்பழத்தை மெண்டு அதன்வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார். (அறிவிப்பவர் : அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5467)

பெயர் சூட்டுதல்

குழந்தை பிறந்தவுடன் அடுத்ததாக அக்குழந்தைக்கு ஒரு நல்லப் பெயர் சூட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோம். அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைத்தாலும் சிலர் மோசமானப் பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள்.

இதனால் எந்த பாதிப்பும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படாது என்று நினைக்கின்றார்கள். உதாரணமாக மைதீன் பிச்சை, சீனி, பக்கீர், நாகூரா, ஆத்தங்கரையா, காட்டுபாவா போன்ற விகாரமானப் பெயர்களை வைக்கின்றார்கள். இன்னும் பொருள் தெரியாத பல பெயர்களையும் சூட்டுகிறார்கள்.

இது போன்றப் பெயர்களை சூட்டப்பட்டவர்கள் பள்ளிக் கல்வியை கற்கும் போது சக நண்பர்களால் கேலிசெய்யப்படுகிறார்கள். பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது.

அப்பெயரை மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். இதற்காக அதிகமாக பொருட் செலவும் உடல் உழைப்பும் செய்ய நேரிட்டாலும் சகித்துக் கொண்டு பெயரை மாற்றிக் கொள்கிறார்கள்.

இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது விரும்பத்தக்கது அல்ல.

சிறந்த பெயர்களை வைப்போம்

பொதுவாக எல்லா விஷயங்களையும் அழகுற செய்ய வேண்டும். இந்த விதியை அவசியம் பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 147)

அல்லாஹ்வின் பெயருடன் அப்து (அடிமை) என்ற வார்த்தையை சேர்த்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4320)

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 20704)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை. (வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும். (அறிவிப்பவர் : புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத் 3419)

மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் நல்லப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

நபிமார்களின் பெயர்களை வைக்கலாம்

எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு “இப்ராஹீம்’ எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள். (அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல் முஸ்லிம் : 4342)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். (அறிவிப்பவர் : யூசுஃப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 15809)

பெயரில் இணைவைப்பு இருக்கக்கூடாது

அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்) ஷாஜஹான் (உலகின் அரசன்) ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்து சூட்ட வேண்டும். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6205)

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷஸ்ரீரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு ஷஸ்ரீரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷ‏ஸ்ரீரைஹ் (ஷஸ்ரீரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். (அறிவிப்பவர் : ஹானிஃ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 5292)

அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர்வைத்தார்கள். (அறிவிப்பர் : அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 16944)

கெட்டவர்களின் பெயரை சூட்டக்கூடாது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : உமர் பின் ஹத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 104)

தீயவர்களின் பெயர்களை சூட்டுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை மேலுள்ள ஹதீஸின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட சில பெயர்களை சூட்டக்கூடாது

சில பெயர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். (அறிவிப்பவர் : சமுரா பின் ஜஸ்ரீன்தப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4328)

எங்களில் ஓருவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் காசிம் என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்) உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என குறிப்புப் பெயரால் அழைத்து மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு அபுல்காசிம் என பெயர் இருப்பதே இதற்குக் காரணம்) என்று சொன்னோம். ஆகவே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (சென்று இதைத்) தெரிவித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமது மகனுக்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டுக என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6186)

அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு “முஹம்மத்’ என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4324)

மேலுள்ள இரண்டு ஹதீஸ்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குறிப்புப் பெயரான அபுல்காசிம் என்றப் பெயரை யாரும் சூட்டக் கூடாது என்று அறிவிக்கின்றது.

பெயர் மாற்றம் செய்யலாம்

மோசமான அர்த்தங்களைக் கொண்டப் பெயர்களை சூட்டக்கூடாது. பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர்களை மாற்றிவிட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைத்துக்கொள்ளலாம்.

முஸய்யப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்டப் பெயரை நான் மாற்றமாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம் (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. 9அறிவிப்பவர் : முஸைய்யப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6190)

ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6192)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 4301)

ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.

ஆசியா (آسٍيَة) என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும். இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்கு தடையில்லை.

அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து) என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள். (அறிவிப்பவர் : உஸாமா பின் அஹ்தரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 4303)

பெயர்வைக்கும் காலம்

மர்யமே அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகின்றான். மர்யமின் மகனான ஈஸா என்னும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும் மறுமையிலும் தகுதிமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக. (அல்குர்ஆன் 3 : 45)

ஸகரிய்யாவே ஓரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை. (என இறைவன் கூறினான்.) அல்குர்ஆன் 19 : 7)

முதல் வசனத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறக்கப் போவதை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மலக்குமார்கள் கூறுகிறார்கள். அப்படி கூறும் போது ஈஸா என்றப் பெயரையும் சேர்த்து கூறுகிறார்கள். இரண்டாம் வசனத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் குழந்தை பிறக்கப் போவதாக அல்லாஹ் சுபச்செய்தி கூறுகின்றான். பிறக்கப் போகும் குழந்தைக்கு அல்லாஹ் யஹ்யா என்று பெயரும் சூட்டுகின்றான். குழந்தை பிறக்கும் முன்பே பெயர் சூட்டலாம் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அவர் ஈன்றெடுத்த போது “என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்துவிட்டேன் எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். “ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன் 3 : 36)

குழந்தை பிறந்தப் பிறகும் பெயர் சூட்டலாம் என்பதை மேலுள்ள வசனத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : சமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 19327)

இந்த ஹதீஸில் ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்படும் என்று வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்து ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம்.

ஆலிம்கள் தான் பெயர் வைக்க வேண்டுமா?

ஆலீம்கள்தான் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பெற்றோர்களே குழந்தைக்கு பெயர்வைக்க அதிக தகுதியானவர்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களின் தாயார் தான் பெயர் வைத்தார்கள். ஆலிம்கள் தான் பெயர்சூட்ட வேண்டும் என்றிருந்தால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் அன்று பெரும் ஆலிமாகவும் நபியாகவும் விளங்கிய ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று பெயர்வைக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் சுயமாகவே தன் விருப்பப்படியே பெயர்வைத்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைக்கும் பெருமானாப்ர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரிடவில்லை. சஹாபாக்கள் தாங்களாகவே பெயர் சூட்டினார்கள். நபியவர்கள் இதைத் தடுக்கவில்லை.

அகீகா

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். (அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5472)

எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.

ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹசனுக்கும் ஹுஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 2458)

பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும். (அறிவிப்பவர் : சமுரா பின் ஜஸ்ரீன்துப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 2455)

மேலும் அலி ரளியல்லாஹு அன்ஹு, ஃபாதிமா ரளியல்லாஹு அன்ஹாஆகிய இருவருக்கும் பிறந்த ஹசன் மற்றும் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, அவர்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ஆகிய இருவருக்காக) அகீகா கொடுத்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 4142)

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜஸ்ரீப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! (அல்குர்ஆன் 22 : 28)

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.

பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

பிராணியின் எலும்பை உடைக்கலாமா?

அகீகாக் கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். எனவே பிராணியின் எலும்பை உடைப்பதற்கு தடையேதும் இல்லை.

ஹசன் ஹுஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முஹம்மத் பின் அலீ என்பவர் அறிவிக்கிறார். இவர் நபி vஅவர்களை சந்திக்கவில்லை. இவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மத்தியில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

பெயர் வைத்தலும் முடியயை களைதலும்

அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : சமுரா பின் ஜஸ்ரீன்துப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 2455)

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்

குழந்தையின் முடியை களையும் போது பாதியை மளித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மளிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நஸயீ 4962)

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹசன் ரளியல்லாஹு அன்ஹு, அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது. (அறிவிப்பவர் : அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹுஸைன் அவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹுஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.

பால்புகட்டுதல்

பிறக்கும் குழந்தைகளுக்காகவே அல்லாஹ் ஏற்படுத்திய அற்புதம் தாய்ப்பாலாகும். முறையாக தாய்ப்பால் புகட்டப்பட்டக் குழந்தைகள் பிற்காலத்தில் அதிக நோய் எதிப்புச் சக்தியை பெற்றவர்களாகவும் திடகார்த்தம் உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் நோஞ்சான்களாகவும் நோய்களின் பிறப்பிடமாகவும் மாறுகிறார்கள்.

இதை புரிந்து கொள்ளாமல் தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு கெட்டுவிடும் என்று நினைத்து சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. அழகு என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது அழியத்தான் போகிறது. குழந்தையின் நலனில் அக்கரையுள்ள தாய்மார்களாக இருந்தால் கண்டிப்பாக தாய்ப்பால் தராமல் இருக்கமாட்டார்கள்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வருடம் முழுமையாக பால்புகட்ட வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன் 2 : 233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். (அல்குர்ஆன் 31 : 14)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 46 : 15)

பால் குடியை மறப்பது இரண்டு ஆண்டுகள் என்று 31 : 14 வசனம் கூறுகிறது. ஆனால் 46 : 15 வசனத்தில் பால் குடி மறப்பதும், கர்ப்பமும் சேர்த்து முப்பது மாதங்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கணக்குப்படி கர்ப்ப காலம் பத்து மாதத்தைக் கழித்தால் பால் குடி மறத்தல் 20 மாதங்கள் தான் ஆகின்றன.

எனவே பால் குடி மறத்தல் 2 வருடங்கள் என்பதும் 20 மாதங்கள் என்பதும் முரணாகவுள்ளதே என்று சிலர் நினைக்கலாம்.

கருவில் சுமார் பத்து மாதம் குழந்தை இருந்தாலும் அது மனிதன் என்ற நிலையையும், தன்மையையும் மூன்று மாதங்கள் கழித்தே அடைகிறது. எனவே மனிதனாகக் கருவறையில் சுமந்தது ஆறு முதல் ஏழு மாதங்களே. எனவே இவ்விரண்டு வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை அல்ல.

கத்னா செய்தல்

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5889)

பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.

இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கத்னா செய்தல் ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : சத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 19794)

இந்த ஹதீஸில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் பலவீனமானவர். இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் வலிமையானவர் இல்லை என்று யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

பைஹகீ இமாம் அவர்கள் தொகுத்த அஸ்ஸஸ்ரீனனுல் குப்ரா என்ற நூலில் இதே ஹதீஸ் இப்னு சவ்பான் என்பவர் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சவ்பான் பலவீனமானவர். மேலும் இச்செய்தயில் அல்வலீத் பின் வலீத் என்வரும் இடம்பெருகிறார். இவரும் பலவீனமானவர். இந்த ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்துவிட்டு இது பலவீனம் என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஏழாவது நாள் அன்று கத்னா செய்வது நபிவழியா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாவது நாள் அன்று கத்னா செய்தார்கள் என்று ஒரு ஹதீஸை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸஸ்ரீனனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இச்செய்தியில் முஹம்மத் பின் அல்முதவக்கில் என்பவர் இடம்பெறுகிறார்கள். இவர் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளார்கள். இச்செய்தியை வலீத் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளரிடமிருந்து இவரைத் தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

எப்போது கத்னா செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட வயதிற்குள் கத்னா செய்ய வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. கத்னா செய்வதினால் ஏற்படும் பல நன்மைகளை கவனித்துப் பார்க்கும் போது சீக்கிரமாக கத்னா செய்வது நல்லது என்று தெரிகிறது.

குழந்தைக்கு அளவிற்கு அதிகமாக நகம் வளரும் போது உடனே அதை அகற்றிவிடுகிறோம். ஆணுறுப்பின் முன்பகுதி தோலும் தேவையில்லாத ஒன்று தான். எனவே நகத்தை உடனடியாக அகற்றிவிடுவது போல் ஆணுறுப்பின் முன்தோலை அகற்றி சீக்கிரமாக கத்னா செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

கத்னா செய்தால் விழா எடுக்க வேண்டுமா?

கத்னா செய்வதற்காக பெரும் பொருட் செலவில் விருந்துகளை ஏற்பாடு செய்து கத்னா செய்யப்பட்டவர்களை பூமாலைகளால் அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு இஸ்லாத்தில் எள்ளவு கூட அனுமதியில்லை.

ஒரு நபிவழியை செய்வதற்கு இவ்வளவு ஆடம்பரங்களை செய்து பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். நகத்தை வெட்டுவதும் அக்குள் முடிகளை களைவதும் கத்னாவைப் போன்று ஒரு சாதாரண சுன்னத்தாகும். ஆனால் யாரும் நகத்தை வெட்டுவதற்கு விழாக் கொண்டாடுவதில்லை. முடிகளை களையும் போது அதை ஊருக்கெல்லாம் பகிரங்கப்படுத்துவதும் இல்லை. மறைக்க வேண்டிய விஷயத்தை பரப்புகின்ற அசிங்கத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதையும் ஊர் முழுவதும் பரப்புகிறார்கள். சடங்கு மஞ்சள் தண்ணீர் ஊத்துதல் என்று பலவிதமான மாற்றார்களின் வழிமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இதை செய்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை விட்டும் நாம் அனைவரும் விலக வேண்டும்.

பிள்ளைகளை கொஞ்ச வேண்டும்

பெற்றொரின் பாசம் கிடைக்காத குழந்தைகள் சந்தோஷமில்லாமல் அமைதியற்ற நிலைக்கு ஆளாகுகிறார்கள். எனவே குழந்தைகளின் மீது பெற்றோர்கள் கட்டாயம் பாசத்தை பொழிய வேண்டும். குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுதல் கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்தலாம்.

ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (அறிவிப்பவர் ; ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 5998)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ

பின் ஹாபிஸ் அத்தமீமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5997)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, “இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள். (அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6003)

குழந்தை பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக்கூடாது

சில பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான விருப்பதிற்கு கட்டுப்பட்டு மார்க்கம் தடுத்தக் காரியங்களை செய்துவிடுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களுக்கு சோதனையாகவும் அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் திருப்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8 : 28)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 64 : 14)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63 : 9)

குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும்

குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடப்பது பெற்றோரின் மீது கடமை. பல குழந்தைகள் இருக்கும் போது ஒருவருரை மட்டும் நன்கு கவனிப்பதும் கேட்பதையெல்லாம் ஒருவருக்கு மட்டும் வாங்கித் தருவதும் ஒருவரிடத்தில் மட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதும் குற்றமாகும். இதனால் பிஞ்சு மனம் கடுமையான நோவினைக்குள்ளாகும்.

நீ தான் எனக்குப் பிடித்தவன். நீ தான் அறிவாளி. அவன் முட்டாள் என்பதைப் போன்ற ஏற்றத்தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளை குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்” என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். (அறிவிப்பவர் : ஆமிர் பின் ஷர்ஹபீல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் ; புகாரி 2587)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்” என்று கூறினார்கள் என்று புகாரி (2650) வது செய்தியில் உள்ளது.

குழந்தைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்

குழந்தைகள் விஷயத்தில் அக்கரை காட்டாமல் அழுக்கான ஆடையில் அசிங்கமானத் தோற்றத்தில் அவர்களை தெருக்களில் திரிய விடும் தயார்மார்கள் சிலர் இருக்கிறார்கள். பின்வரும் ஹதீஸ்களை கவனத்தில் வைத்து இனிமேலாவது தங்கள் குழந்தைகளை பார்ப்பதற்கு அழகானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 147)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லா செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும் ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : மாலிக் பின் நள்லா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1929)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைவிரிக் கோலமாய் இருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரது முடி (சீவப்படாமல்) பிரிந்திருந்தது. தனது முடியை படிய வைக்கும் பொருளை இவர் பெற்றுக்கொள்ளவில்லையா? (என்று கண்டித்துக்) கூறினார்கள். அழுக்கு படிந்த ஆடையில் இன்னொரு மனிதரைக் கண்டார்கள். தன் ஆடையைக் துவைத்துக்கொள்வதற்கு இவருக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று (கடிந்துக்) கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவுத் 3540)

வீரர்களாக வளர்க்க வேண்டும்

பேய் வருகிறது. பூச்சாண்டி வருகிறான் என்றெல்லாம் கூறி சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவர்கள் பெரியவர்களாக ஆன பின்பும் பேய் பற்றிய பயம் அவர்களை விட்டும் அகலுவதில்லை. வீரதீர சாகசங்களை செய்ய விடாமல் பயம் அவர்களைத் தடுத்துவிடுகிறது.

வீரத்துடன் வளர்க்கப்பட்டக் குழந்தைகள் யாருக்கும் அஞ்சாமல் நியாயத்திற்காகப் போராடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் தனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் போது துவண்டுவிடாமல் பெற்றோருக்கு பக்கபலமாக இருந்து உதவியும் செய்வார்கள். நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளை இவ்வாறு தான் வளர்த்தார்கள்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2664)

சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

சிறுவர்கள் பசியை பொறுக்கமாட்டார்கள். முதலில் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். எனவே உணவு பரிமாறும் போது முதலில் சிறியவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப்பட்டால், “இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) “முத்’து மற்றும் “ஸாஉ’ ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக” என்று பிரார்த்தித்து விட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2660)

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). (அல்குர்ஆன் 2 : 128)

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) (அல்குர்ஆன் 14 : 40)

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25 : 74)

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2 : 124)

செலவு செய்வது கடமை

கஞ்சத்தனம் செய்யாமல் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது தந்தையின் மீது கடமை. சில பெற்றோர்கள் தேவையில்லாத செலவுகளை செய்கிறார்கள். வீண்விரயம் செய்வது கூடாது.

அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. (அல்குர்ஆன் 2 : 233)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1819)

ஒரு மனிதன் தன் குடும்பத்திற்காக செலவிடும் எந்தத் தொகையும் வீணாக போவதில்லை. அல்லாஹ்விடம் நன்மையை நாடி செலவு செய்தால் கண்டிப்பாக இறைவன் அதற்குக் கூலி தருகிறாப்ன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும். (அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 55)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசு (தீனார்) அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும். (அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3936)

நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கின்ற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3936)

வீண்விரயம் செய்வது கூடாது

செலவு என்ற பெயரில் வீண்விரயம் செய்வது கூடாது. வீண்விரயம் செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 2512)

தனது வருமானத்திற்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கி தாரளமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 65 : 7)

தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது சிறந்தது

குழந்தைகளின் வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களை சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3936)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கிறான்” என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1817)

சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்

சிறுவர்கள் பெரியவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். என்றாலும் சலாம் கூறும் முறையை சிறுவர்களுக்கு கற்றுத்தருவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலில் சிறுவர்களுக்கு சலாம் கூறினார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது குழந்தைகள் இதைப் பார்த்து மற்றவர்களை சந்திக்கும் போது முந்திக்கொண்டு சலாம் கூறுவார்கள்.

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : புகாரி 6247)

விளையாட அனுமதிக்க வேண்டும்

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமானது. விளையாடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சியுறுகிறார்கள். சுறுசுறுப்புடனும் ஆரோக்யத்துடனும் திகழ்கிறார்கள். சிறுவர்கள் விளையாடுவதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி (6130)

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5074)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்” என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.

நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். “அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4626)

இடஞ்சல் தரும் விளையாட்டுகளுக்கு அனுமதிக்கக்கூடாது

விளையாட்டு என்றப் பெயரில் மற்றவர்களுக்கு இடஞ்சல் தருவதை பெற்றோர்கள் சம்மதிக்கக்கூடாது. நமது குழந்தைகளால் யாரேனும் அவதியுற்றால் அப்போது அவர்களை கண்டிக்கத்தவறக்கூடாது. பிறருக்கு சிரமம் தருகின்ற அடிப்படையில் விளையாடுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்துவந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது ; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5479)

விளையாட்டுக் கருவிகளை வாங்கித்தர வேண்டும்

சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தரும் போது மகிழ்ச்சியடைவார்கள். இதனால் பெற்றோரின் மீதான பாசம் அவர்களுக்கு அதிகரிக்கும்.

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை எங்கள் சிறுவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1960)

அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்

அந்தரங்க உறுப்புக்களை சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24 : 58)

தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்

பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தினால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்காமல் இருந்துவிடக்கூடாது. பெரும்பாலான குழந்தைகள் கெட்டுச் சீரழிந்ததற்கு பெற்றோர்களின் அளவுகடந்த பாசம் தான் காரணம். பிள்ளைகளை கண்டிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைத் தான் செய்கிறோம் என்பதை பெற்றொர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். (அல்குர்ஆன் (66 : 6)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். (அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 2409)

பெற்றோர்களின் அலட்சியப்போக்கினால் பிள்ளைகள் தவறானப் பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனைத் தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33 : 67)

சிறுவர்கள் மார்க்கம் தடுத்தக் காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

ஆரம்பித்திலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல் செயல்பாடு ஆகியவற்றில் கலந்துவிடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக்கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும்.

தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் ரளியல்லாஹு அன்ஹு, ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1485)

பிள்ளைகளை சபிக்கக்கூடாது

பிள்ளைகள் தவறு செய்யும் போது தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைபிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது “நோன்புப் பெருநாள்’ தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 304)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5062)

அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர் “ஷஃ’ என அதை விரட்டிவிட்டு, “உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?” என்று கேட்டார்கள். “நான்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5736)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் “ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) “அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், “இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு “இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, “குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, “(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், “தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3436)

கோபத்தில் குழந்தைக்கு எதிராக தாய் கேட்கின்ற பிரார்த்தனையை அல்லாஹ் உடனே அங்கீகரித்துவிடுகின்றான். மேற்கண்ட செய்தியில் ஜஸ்ரீரைஜ் என்வரின் தாய் “இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கோபத்தில் பிரார்த்தித்துவிடுகிறார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டு விடுகிறான். மிக கவனமாக வார்த்தைகளை வெளியில் விட வேண்டும்.

கல்வி கற்றுத்தர வேண்டும்

குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்வது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான அம்சம். மார்க்கக் கல்வி உலகக்கல்வி ஆகிய இரண்டையும் குழந்தைகள் பெறுவது அவசியம.

கல்வியற்றக் குழந்தைகள் நாகரீகம் தெரியாமலும் நல்லவற்றிலிருந்து தீயதை பிரித்தரியாமலும் வளர்கின்றன. இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு கல்வி உதவியாக இருக்கிறது.

கல்விக்கூடத்திற்கு செல்லமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் அடித்தாலாவது அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

மார்க்கக் கல்வியை அறிந்துகொள்வதற்கு காலை மாலை மத்ரஸாக்களுக்கு அனுப்பலாம். கல்வியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது. ஆனால் கல்வியைப் பெற்றவன் உயர்ந்தவன் என்றும் கல்வி அற்றவன் தாழ்ந்தவன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள். (அல்குர்ஆன் 39 : 9)

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 58 : 11)

உலகக்கல்வி மார்க்கல்வி என்று இஸ்லாம் தனித் தனியாகப் பிரிக்கவில்லை. மாறாக பலனுள்ளக் கல்வி பலனற்றக் கல்வி என்று இருவகையாகப் பிரிகிறது. உலகக்கல்வியை பலனுள்ள வகையில் பயன்படுத்தினால் அதன் மூலமும் இறைவனை நெருங்க முடியும்.

மனிதன் நேர்வழி பெறுவதற்கு உலக்கல்வி மட்டும் போதாது. இன்றைக்கு உலகக்கல்வியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற எத்தனையோபேர் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்களிடத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பது தான்.

எனவே உலகக்கல்வியுடன் மார்க்க அறிவை சேர்த்து கற்றுத்தரும் போது தான் பலனுள்ளக் கல்வி கிடைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 3358)

உபதேசம் செய்ய வேண்டும்

பிஞ்சு உள்ளத்தில் முதன் முதலில் விதைக்கின்ற கருத்துக்கள் பெரும் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை நம் குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய பாணியிலே சொல்லிக்கொடுக்க வேண்டும்.

முக்கியமாக இணைவைப்பு என்றால் என்ன? அது எவ்வளவு பெரிய பாவம்? இணைவைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு பெரியது? அவனது கருணை எவ்வளவு மகத்தானது? நாம் யாரிடத்தில் கையேந்த வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வளவு உயர்வாக நேசிக்க வேண்டும்? என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு முதலில் விளக்கிச் சொல்ல வேண்டும்.

மனிதனிடத்தில் இருக்க வேண்டிய நற்குணங்களையும் இருக்கக்கூடாத தீய குணங்களையும் எடுத்துக்கூறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்.

நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.

“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன் 2 : 132)

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர். (அல்குர்ஆன் 2 : 133)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31 : 13)

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

“நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்). (அல்குர்ஆன் 31 : 16)

முத்தான உபதேசங்கள்

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அற்புதமான உபதேசங்களை செய்துள்ளார்கள. இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.

சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத்தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப்பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவிதேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவிதேடு.

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏடுகள் காய்ந்துவிட்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 2440)

இமாம் பைஹகீ அவர்கள் எழுதிய அல்களாஉ வல்கத்ரு என்ற நூலில் இந்த ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் தொடரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக நடக்க வேண்டும் என்பதன் பொருள் அவனது கட்டளைகளை செயல்படுத்த வேண்டும் அவன் தடுத்தவைகளை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.

சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை எளிதில் விளங்கிக்கொள்வதற்காக சுருக்கமாக கேள்வி பதில் கோணத்தில் புத்தகங்கள் உள்ளது. பெற்றோர்கள் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.

பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்

பெற்றோர்களை மதித்து நடக்குமாறு கூறும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். (அல்குர்ஆன் 4 : 36)

“என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 17 : 23)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 2653)

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5973)

அன்னையரைப் புண்படுத்துவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : முஃகீரா பின்ஷஸ்ரீஅபா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5975)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பிறகு, உன் தந்தை” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5971)

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5970)

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)” என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு” என்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5972)

குகையில் மாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் பெற்றோர்களிடத்தில் நல்லவிதமாக நடந்துகொண்டதால் அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்று புகாரியில் 5974 வது ஹதீஸ் கூறுகிறது. இது போன்ற சம்பவங்களைக் கூறி உபதேசம் செய்யலாம்.

நபித்தோழர்களின் வாழ்க்கையில் நடந்த படிப்பினை தரும் சம்பவங்களை கதைகள் சொல்வது போல் கூற வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை குழந்தைகள் விரும்புகின்ற விதத்தில் சிறிது சிறிதாக எடுத்துரைக்க வேண்டும்.

ஒழுங்கு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்

நேரம் கிடைக்கும் போது தூங்குவதின் ஒழுக்கங்கள் சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக கற்றுத்தர வேண்டும். அவர்கள் தவறுதலாக செய்யும் போது சரியான வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. (அறிவிப்பவர் : உமர் பின் அபீ சலமா (ரலி) நூல் : புகாரி 5376)

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்ரளியல்லாஹு அன்ஹு) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்துகொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : முஸ்அப் பின் சஃத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : புகாரி 790)

மார்க்க அறிஞர்களாக மாற்றலாம்.

இஸ்லாமிய ஒழங்கு முறைகளை கற்றுக்கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் போது காலப்போக்கில் அச்சிறுவர்கள் பெரியவர்களுக்கே ஒழுங்கு முறைகளை கற்றுத்தரும் ஆசானாக மாறிவிடுவார்கள். உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சிறுவராக இருந்த அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிந்துவைத்திருந்தார்கள்.

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து, “நான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னார்கள். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சென்று “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தெரிவித்தேன். (அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி 6245)

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாலிபராக இருந்த போது அவர்களை விட வயதில் மூத்தவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து கல்வியில் பொறாமைப்படும் அளவிற்கு இளம் வயதிலே நிறைவான மார்க்க அறிவை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு பெற்றிருந்தார்கள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டு விட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி….. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)” என்னும் (திருக்குர்ஆனின் 110-வது “அந் நஸ்ர்’) அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக்காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து’ என்பதில் உள்ள “வெற்றி’ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்’ என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4294)

திருக்குர்ஆனை மனனம் செய்ய வைத்தல்

அல்லாஹ்வுடைய வசனத்தை மனனம் செய்யாத உள்ளம் பாலடைந்த வீட்டைப் போன்றது. பாலடைந்த வீட்டிலே விஷ ஜந்துக்கள் தான் குடியிருக்கும். அது போன்று நமது குழந்தைகளின் உள்ளம் ஆகிவிடக்கூடாது.

சிறுவயதிலேயே குர்ஆன் ஓதக்கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து மனப்பாடம் செய்ய வைப்பதைப் போல் குர்ஆனில் உள்ள சூராக்களையும் இயன்ற அளவு மனனம் செய்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் சிறுவர்கள் குர்ஆனில் அதிகமானதை மனனம் செய்து வைத்திருந்தார்கள்.

“நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே “அல் முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்” என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம், ” “அல்முஹ்கம்’ என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள் ” “அல்முஃபஸ்ஸல்’தான் (“அல்முஹ்கம்’)” என்று (பதில்) சொன்னார்கள். (அறிவிப்பவர் : சயீத் பின் ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : புகாரி 5036)

மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (அறிவிப்பவர் : அமர் பின் சலிமா (ரலி) நூல் : புகாரி 4302)

துஆக்களைக் கற்றுத் தர வேண்டும்

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த எந்த நேரங்களில் பிரார்த்திக்க வேண்டும். எதை கேட்க வேண்டும் என்பதையெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இவற்றை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறுவராக இருந்த ஹசன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குனூத்தில் ஓத வேண்டிய துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். அதை அவர்கள் மறந்துவிடாமல் மற்றவர்களுக்கு கூறியதால் இன்றைக்கு அந்த துஆவை ஓதும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

வித்ரில் நான் ஓத வேண்டிய வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அல்லாஹும்மஹ்தினீ ஃபீ மன் ஹதய்த. வஆஃபினீ ஃபீ மன் ஆஃபய்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லைத. வபாரிக் லீ ஃபீமா அஃதய்த. வகினீ ஷர்ர மா களைத. ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க. வ இன்னஹு லா யதுல்லு மவ் வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த (என்பதே அந்த வார்த்தைகளாகும்).

பொருள் : இறைவா நீ நேர்வழிகாட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழிகாட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக்கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படமாட்டாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா நீயே பாக்கியசாளி. நீயே உயர்ந்தவன். (அறிவிப்பவர் : ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 426)

குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கின்ற நேரத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் போன்று மாறிவிட வேண்டும்.

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி.

பொருள் : “இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்று கூறிவிட்டு, “இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்” என்றும் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் மய்மூன் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : புகாரி 2822)

சிந்திக்கத் தூண்ட வேண்டும்

ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அறிவு வளரும் என்று சொல்வார்கள். குழந்தைகளிடத்தில் கேள்விகளைக் கேட்டு பதிலை வரவழைக்கும் போது அவர்கள் அறிவாளியாகிறார்கள். இவ்வாறு செய்வதால் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டு சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தகைய வழிமுறையை கையாண்டு கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 131)

குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக பெற்றோர்களிடம் வருவார்கள். அப்போது பெற்றோர்கள் அதை ஊதாசீனப்படுத்திவிடாமல் சந்தோஷத்துடன் அதற்கு முறையான அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.

நான் என் தந்தையிடம் என் தந்தையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்ர் (ரலி) உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோருக்கும் பின்னாலும் கூஃபாவாகிய இங்கே அபூதாலிபின் மகன் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னாலும் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் நீங்கள் தொழுதுள்ளீர்கள். இவர்கள் (தொழுகையில்) கூனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு என் தந்தை எனது அருமை மகனே (இத) புதிதாக உருவாக்கப்பட்டதாகும் என்று கூறினார். (அறிவிப்பவர் : அபூ மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : திர்மிதி 368)

பயிற்சி அளிக்க வேண்டும்

பருவ வயதை அடையும் போது தான் தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள் கடமையாகும். என்றாலும் அதற்கு முன்பே வணக்க வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு பயிற்சி கொடுக்கும் போது மார்க்க சட்டத்திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகவும் விருப்பமானதாகவும் மாறிவிடும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் தொழுகை நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் வழக்கம் இருந்துள்ளது.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களை அழைத்து, “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, “பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 862)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1960)

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்! (அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1858)

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு” என விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 2596)

காது மூக்கு குத்தலாமா?

காது மூக்கு குத்தக்கூடாது என்று தெளிவாக எந்த ஒரு தடையும் வரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளை கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

“அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4 : 119)

இயற்கையாக அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தடைசெய்துள்ளார்கள்.

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5931)

காதுகளிலும் மூக்கிலும் துளையிடும் போது அழகான தோற்றம் வரும் என்று நாம் நினைப்பதால் தான் காது மூக்கு குத்திக்கொள்கிறோம். இவற்றில் துளையில்லாமல் பிறக்கும் மனிதன் அழகான தோற்றமுள்ளவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். (அல்குர்ஆன் (95 : 4)

மிக அழகாக படைப்பது தன்னுடைய தன்மை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் (23 : 14)

“அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு “பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? (அல்குர்ஆன் (37 : 125)

காது மற்றும் மூக்கில் துளையிடுவது இறைவனுடைய படைப்பில் குறைகாணுவதைப் பிரதிபலிப்பதால் இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டம் தெரியாத நேரத்தில் குத்திக்கொண்டவர்கள் துளையை அடைக்க வேண்டியதில்லை. அதில் ஆபரணங்களை இட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் சஹாபிய பெண்கள் காதுகளில் தோடுகளை அணிந்திருந்ததார்கள். காது குத்துவதால் ஏற்பட்ட துளையை அடைக்க வேண்டுமென்றோ அத்துளையில் ஆபரணங்களை அணியக்கூடாது என்றோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்களுக்குக் கூறவில்லை. மாறாக ஒப்புதல் வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 98)

தாயத்தை தொங்க விடக்கூடாது.

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது பெற்றோர்கள் அவர்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் சென்று தாயத்து என்றக் கருப்புக் கயிறை வாங்கி குழந்தைகளின் மேல் மாட்டிவிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை அற்பக் கயிற்றின் மீதும் இறந்தவர்கள் மீதும் வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.

கயிறுக்கோ இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள். இவரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணைவைத்துவிட்டான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 16781)

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ் வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, “எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். (அறிவிப்பவர் : அபூ பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3005)

நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்

நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி நூல் : புகாரி (5741)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி (4439)

ஓதிப்பார்க்கும் முறை

திருக்குர்ஆனுடைய குறிப்பிட்ட சில சூராக்களை ஓதி குழந்தைகளின் உடம்பில் ஊதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவாறு மட்டுமே ஓதிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் சேர்த்துவிடக்கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் “குல் ஹுவல்லாஹு அஹத்’, “குல் அஊது பிரப்பில் ஃபலக்’, “குல் அஊது பிரப்பின் னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 5017)

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். ஸாபித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள். ஸாபித் ரஹ்மதுல்லாஹி அலைஹி, “சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.) (அறிவிப்பவர்: அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : புகாரி 5742)

சூரத்துல் பாத்திஹாவை வைத்தும் ஓதிப்பார்க்கலாம். புகாரி (5736)

இணைவைப்பு இருக்கக்கூடாது

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (எங்களிடம்), “நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பித்தல் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக், நூல் : முஸ்லிம் 4427)

மகன் திருந்தாவிட்டால்…

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள்.

இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் கெட்டவனாக இருந்தான். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவன் கட்டுப்பட மறுத்தான். இறைநிராகிப்பாளனாக மரணித்தான். இந்த வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.

“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப் பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 11 : 42)

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.

“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11 : 45)

நம்மையும் நமது குழந்தைகளையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவானாக.

Check Also

நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், …

You cannot copy content of this page

Free Visitor Counters