ரோஹாவின் இறுதிச் சடங்கிற்குச் செல்லும் அனைவரும் கொல்லப்படுவார்கள். ‘குடு அஞ்சு’ FB மூலம் எச்சரிக்கை

பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் கொனாகேவிலே ரொஹா என்பவர் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று கொல்லப்பட்டது அறிந்ததே..

 படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில்  குறித்த நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வேளை,   பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

குறித்த நபர் பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கபட்ட நிலையில், பாதாள உலகக் கும்பலின் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான  குடு அஞ்சு என்ற அமல் சின்ஹாரா டி சில்வா தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை  வெளியிட்டுள்ளார்.

குடு அஞ்சுவின் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுக்கும், நேற்று கொல்லப்பட்ட  குடு ரோஹாவின் பாதாள உலகக் கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக ஏற்பட்ட மோதலால் இரு கும்பல்களின் உறுப்பினர்களும் அவ்வப்போது கொல்லப்பட்டதுடன், குடு அஞ்சுவின் சகோதரரும் ரோஹா தரப்பால் சில காலத்துக்கு முன் கொல்லபட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடு  ரோஹா மரணம் அடைந்ததில், தற்போது இத்தாலியில் வசிக்கும் குடு அஞ்சு பேஸ்புக் பதிவுகள் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதேவேளை, குடு  ரோஹாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும்  அனைவரையும் கொலை செய்வதாக தனது பேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ளார்.

Read:  மீண்டும் ரணில் !!

குடு  ரோஹாவின் உடலை ரத்மலான பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரக்கூடாது என்றும் அவரது உடல் மருத்துவமனையில் தகனம் செய்ய வேண்டும் என்றும் பாதாள உலகத் உறுப்பினர் குடு அஞ்சு தெரிவித்துள்ளார்.

முன்னதாக குடு  ரோஹாவைக் கொல்லும்  எவருக்கும் ரூ .30 மில்லியன் வழங்கப்படும் என்று அமல் சின்ஹாரா டி சில்வா என்ற குடு அஞ்சு முன்பு தனது பேஸ்புக் கணக்கில் தெரிவித்து இருந்ததாக  போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.