கொழும்பு ‘லைட் ரயில்’ திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு!

உத்தேச கொழும்பு லைட் ரயில் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி.ஜெயசுந்தர போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பி.பி.ஜெயசுந்தர, 

லைட் ரயில் திட்டமானது மிகவும் விலை உயர்ந்தது ஆகும். அத்துடன் அது நகர்ப்புற கொழும்பு போக்குவரத்து உட்கட்டமைப்புக்கு பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வு அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த திட்டம் கடந்த அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.

கொழும்பு கோட்டையிலிருந்து மலாபே வரை 16 ரயில் நிலையங்களுடன் 17 கி.மீ நீளமுள்ள இலகுரக ரயில் போக்குவரத்து முறை மூலம் போக்குவரத்து திறனை அதிகரிப்பது இந்த திட்டத்தின் நோக்கம் இருந்தது.

இந்த நோக்கத்திற்காக ஜப்பானில் இருந்து கடன் பெறப்பட்டது.

எனினும் இந்த திட்டத்திற்கு பதிலாக பிறிதொரு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.