மத்ரஸாக்களை வைத்து, சிலர் வியாபாரம் செய்கின்றனர் – ஹலீம்

மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் மத்ரஸாக்கள்  பதிவு என்பது ஒரு பதிவிலக்கத்தை  வழங்கும் நிலையிலே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பதிவிலக்கத்தை பெற்றுக்கொண்டு அரசின் பதிவு செய்யப்பட்ட மத்ரஸா என்று கூறிக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். எனவே, பௌத்த மதத்திலுள்ள பிரிவெனாக்கள் போன்று ஒரு சட்டத்தை உருவாக்கி மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற சட்டமூலத்தை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளேன் என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக நான்காவது முறையும் பதவியேற்ற அமைச்சர் ஹலீமை வரவேற்கும் முகமாக கண்டி மாவில்மடையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,  

1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைக்காக பாரிய அளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்நாடுகளில் வாழும் பெண்கள் அணியும் ஆடை கலாசாரத்தை எமது நாட்டுக்கும் அறிமுகப்படுத்தினர். இது இஸ்லாம் மார்க்கத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட ஆடை  அல்ல. முன்னைய காலத்துப் பெண்கள் இவ்வாறான உடைகளை அணியவில்லை. சாரிகளை அணிந்து அதனால் தமது தலையை மறைத்துக் கொண்டனர் என அவர் தெரிவித்தார்.