குட்டை ஆடை அணியும் பெண்களுக்கு எதிராக கம்போடியாவில் புதிய சட்டம்!

கம்போடியாவில் சமீபகாலமாக பெண்கள் சரிவர ஆடைகளை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டில் பெண்களுக்கு எதிராக கம்போடிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணியும் பெண்களுக்கு எதிராக சட்டமொன்றை அமல் படுத்த கம்போடியா அரசாங்கம் நடவடிக்கை யெடுத்துவருகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம், சமூக ஊடகங்களில் ஆடை விளம்பங்களை மேற்கொண்ட பெண்ணொருவர் மீது ஆபாசம் மற்றும் அநாகரீகமான வெளிப்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது,  கருத்து தெரிவித்திருந்த கம்போடியாவின் பிரதமர் ஹன் சென், “இது நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மீறும் செயல். இதுபோன்ற நடத்தைகளே பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாகின்றன” என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பெண்களின் ஆடை தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் கம்போடியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்போடிய பெண்கள் பலர் நீச்சல் உடை மற்றும் குட்டை பாவாடையுடன்  படமெடுத்து #mybodymychoice என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 இந்த சட்டத்துக்கு கம்போடியாவின்  மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருமென்று கூறப்படுகிறது.

SOURCEBBC World News