கொரோனா பரவ காரணம், தப்லீக் ஜமாத். இந்திய உள்துறை அமைச்சு எழுத்து மூலம் அறிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ், பல இடங்களில் பரவியதற்கு காரணம் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்தான் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக திங்கட்கிழமை பதில் அளித்துள்ளார். அதில், டெல்லி காவல்துறை தெரிவித்த தகவலின்படி, கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பல்வேறு துறைகள் வெளியிட்ட வழிகாட்டுகல்கள், உத்தரவுகளை மீறி மூடப்பட்ட பகுதியில் மிகப்பெரிய கூட்டம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்காக திரட்டப்பட்டது.

அதில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முக கவசங்கள் அணிவதோ, கை சுத்திகரிப்பான்களோ சரியாக பயன்படுத்தப்படவில்லை. இதுவும் கொரோனா வைரஸ் பலருக்கு பரவ காரணமானது.

கடந்த மார்ச் 29ஆம் தேதி டெல்லி நிஜாமுதீன் தலைமையகத்தில் இருந்து டெல்லி காவல்துறையால் 2,361 பேர் வெளியேற்றப்பட்டனர். 233 பேர் காவல்துறையால் கைது செய்யப்ட்டனர். எனினும், ஜமாஅத் தலைமை நிர்வாகி மெளலானா மொஹம்மத் சாத் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கிறது என்று கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையால் அனுமதியின்றி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை கூட்டியது, வெளிநாட்டினரின் இந்திய வருகையின்போது முறையான விசா அனுமதி பெறாமல் மாநாட்டில் பங்கேற்றது, தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் பார்வையாளர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால்தான் வைரஸ் நாடு முழுவதும் பரவியது போல பலவிதமாக செய்திகள் வெளிவந்தன. பல வெளிநாட்டினரும் இவ்வாறு சுற்றுலா விசாவில் வந்து தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட பலருக்கும் டெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள உயர் நீதிமன்றம் பிணை வழங்கி அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க இந்திய உள்துறைக்கு உத்தரவிட்டிருந்தன.

மேலும், தப்லீக் ஜமாஅத் இயக்கத்தினரால்தான் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியது போல செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடு மூலமே பலருக்கும் வைரஸ் பரவியதாக இந்திய உள்துறை மாநிலங்களவையில் கூறியிருக்கிறது. Posted in:

SOURCEBBC News