கண்டியில் பல கட்டடங்கள் தாழிறங்கும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

கண்டி – புவெலிகட பிரதேசத்தில் நேற்று கட்டடம் தாழிறங்கிய இடத்தில் மேலும் சில விரிசல்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பகுதியில் வாழும் மக்கள் மற்றும் உரிய பிரிவுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவு சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி – புவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடம் தாழிறங்கியமைக்கான காரணம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இன்று அங்கு சென்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் ஆபத்து உள்ளமையினால் உரிய பிரிவுகள் மூலம் பரிந்துரை பெற்று கட்டடம் நிர்மாணித்தால், அந்த அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கட்டடம் தாழிறங்கிய பிரதேசம் பழைய மலை பகுதி எனவும் அது கட்டடம் நிர்மாணிப்பதற்கு பொருத்தமான இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மண் அடுக்குகளில் விரிசல் ஏற்படக்கூடும் எனவும், சரிவுகளில் உள்ள கட்டடங்களின் மீது மழை நீர் விழுவதால் இவ்வாறான தாழிறக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

Previous articleஅம்பிட்டிய சுமணரத்தன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி சிறைப்பிடித்ததால் பரபரப்பு.
Next articleவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது