பெரும்பாலானவர்களின் விருப்பம் சிறுபான்மையினருக்கு அழிவாகிவிடக் கூடாது – எச்சரிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய 

பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுதான் உண்மை எனக் கருதி செயற்படுவது ஜனநாயகம் அல்ல. பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு மட்டுமே சரியானது சிறுபான்மையின் நிலைப்பாடு தவறு என்று கருதியமையே மூன்றாம் உலக நாடுகளின் அழிவுக்கு காரணமாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

எமது நாட்டில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகம் என்பது பிரயோசனமற்றது என்று கூறுகிறார்கள். அதே போன்று மக்கள் பிரதிநிதிகள் பிரயோசனமற்றவர்கள் என்று கூறுகின்றனர். 

மாகாணசபை உறுப்பினர்கள் இன்றி மாகாணசபைகள் இயங்குகின்றன. 6 மாதம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அற்ற பாராளுமன்றம் காணப்பட்டது. அவ்வாறெனில் எதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஏதேனுமொரு ஆட்சி இடம்பெறுகிறது என்றால் அது சர்வாதிகார ஆட்சியாகவே காணப்படும். 

பரம்பரை ஆட்சி முன்னெடுக்கப்படுவது அரசர் காலத்திலாகும். தற்போது பெரும்பாலான நாடுகள் அவற்றிலிருந்து வெளியேறி ஜனநாயக ஆட்சியையே நடத்துகின்றன.

ஜனநாயகத்தை வெறுப்போரும் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவோரும் துரோகிகளாவர். 

இலங்கையின் முதலாவது அரசியலமைப்பிலேயே இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்றே கூறப்பட்டுள்ளது. 

ஒரு நாட்டில் நிறைவேற்றதிகாரம் , சட்டவாக்கசபை மற்றும் நீதிமன்றம் என்ற மூன்றும் வெவ்வேறாக இல்லை என்றால் அது ஜனநாயக நாடு அல்ல.

ஜனநாயகம் என்று பெரும்பாலானவர்களின் விருப்பம் அல்ல. பெரும்பாலானவர்களின் விருப்பம் சிறுபான்மையினருக்கு அழிவாகிவிடக் கூடாது. அவர்களது விருப்பங்களையும் அறிந்து , அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் முன்வரக்கூடிய மக்கள் எமது நாட்டுக்கு தேவை. 

மூன்றாம் உலக நாடுகளின் அழிவிற்கு காரணம் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் தான் உண்மை என்ற நிலைப்பாட்டில் அதற்கேற்ப முழு நாட்டையும் ஆட்சி செய்தமையாகும் என்றார். 

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு
SOURCEவீரகேசரி பத்திரிகை