‘புதிய அரசியலமைப்பின் உருவாக்கமே எமது நிலைப்பாடு’: அஸ்கிரிய பீடம்

20 ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற சில விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கத்துக்குள்ளும் இது தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனவே முழுமையான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

ஜே.ஆர்.ஜயவர்தனவினுடைய ஆட்சி காலத்தைப் போன்று நிறைவேற்றதிகாரத்தை மையப்படுத்தியதாகவே 20 ஆவது திருத்தம் அமைந்துள்ளது. மீண்டும் தனி நபரொருவருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கும் யோசனையை ஏற்றுக் கொள்கின்றீர்களா என்று வினவிய போதே  அநுநாயக்க மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி தனிநபராக இருந்தாலும் அவர் தேர்லின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார். ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்களே வழங்குகின்றனர். மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கு அவருக்கும் நிச்சயம் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதே போன்று  மக்கள் பிரதிநிதிகள் 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்திற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதிகாரத்திற்காக இரு தரப்பும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் சுமூகமான முறையில் உரிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

20 ஆவது திருத்தம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டதன் பின்னரே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் பிரதமரால் மீளாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய வர்த்தமானியை வெளியிடுவதாக அரசாங்கத்தின் ஒருதரப்பு கூறுகிறது. 20 இல் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்று பிரிதொரு தரப்பு கூறுகிறது.

இரட்டை குடியுரிமை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட சில விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். இரட்டை குடியுரிமையை கொண்ட ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகலாம் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டால் அது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும். எனவே 20 ஐ உருவாக்கியவர்களே அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அல்லது பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை  ஏற்று புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும்.

எவ்வாறிருப்பினும் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தமது ஆட்சி காலத்தில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதையே வழமையாகக் கொண்டுள்ளன. இவ்வாறு ஆட்சி மாறும் போது அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து கொண்டிருப்பதை விட முழுமையான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆளுந்தரப்பில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இறுதியில் பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தீர்மானத்தையே எடுப்பார்கள். வேறுபட்ட கருத்துக்களை கூறினாலும் கட்சி தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு ஏனையோர் தலையசைக்கும் கலாசாரமே இலங்கை அரசியலில் பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய வர்த்தமானி வெளியிடப்படும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் திருத்தங்களுடன் புதிய வர்த்தமானியை வெளியிட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்களாயின் அது சிறந்ததாகும் என்றார். 

SOURCEவீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)
Previous articleநாளை முதல் கடுமையாக்கவுள்ள வீதி ஒழுங்கு முறைகள். விபரமாக…
Next articleகண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்த அனர்த்த நிகழ்வின் புகைப்படங்கள்.