முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ அரசுடன் பேசத் தயார்: நசீர் அஹமட் SLMC

முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளதாக அக்கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய தேசிய அரசியல் களம் மிகவும் மாறுபட்டதாக உள்ளது. அதனை நாம் சரியாக கையாள வேண்டிய நிலையில் உள்ளோம். அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில் எமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் மிகவும் முக்கிய விடயமாகின்றது.

ஆகவே அந்த விடயங்கள் தொடர்பாக நாம் யாருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் தற்போதுள்ள ராஜபக்ஷ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

அதேநேரம், அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு எமது ஆதரவினையும் தெரிவிப்பததோடு எமது சமூகத்திற்கு பாதகமான விடயங்களை எதிர்ப்பதற்கு பின்னிற்கவும் போவதில்லை. ஜனநாயக கட்டமைப்பான எமது கட்சியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படலாம்.

ஆனால் எமக்கு ஆணை வழங்கும் மக்களின் நிலைப்பாடுகள், கட்சியின் பெரும்பான்மை அங்கீகார தீர்மானங்களுக்கு அமைவாகவே அனைத்து செயற்பாடுகளையும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் என்றார்.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்
SOURCEவீரகேசரி பத்திரிகை (ஆர்.ராம்)