akurana isthihar

மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர், நாம் ஒரு ஆசனத்தை பெறுவது உறுதியாகியுள்ளது. -இஸ்திஹார் இமாதுதீன்-

குறுகிய கால அரசியல் பயணத்தில் அக்குறணை பிரதேச சபையின் தலைவராக மாறினீர்கள். கடந்த இரண்டரை வருட கால ஆட்சிக் காலப்பகுதியில் நீங்கள் ஆற்றிய பணிகளை குறிப்பிட முடியுமா?

ஆம், கடந்த இரண்டரை வருடங்களில் அக்குறணை பிரதேச சபை எதிர்கொண்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றோம். குறிப்பாக, இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலம் நிலவிய திண்மக் கழிவு அகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணமுடிந்துள்ளது. இதன் மூலம் அக்குறணை பிரதேசம் சுத்தமாக காணப்படுவதுடன், திண்மக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதாலும், மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாலும் யஹலகஹமுள்ள பிரதேச மக்களும் நிம்மதியாக வாழ்கின்றனர்
இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எனது சக உறுப்பினர்கள், அலுவலக ஊழியா்கள், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், அரச திணைக்கள அலுவலர்கள் பலரும் ஒத்துழைப்பை நல்கினர். இங்கு சில அமைச்சர்கள் இச்செயற்றிட்டத்துக்கு நிதியுதவி அளிப்பதாக வாக்களித்த போதும் அவர்களால் அவ்வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இதற்கடுத்ததாக பிரதேச சபையின் மூலம் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாக மக்களிடம் தெளிவற்ற நிலமை காணப்பட்டது. எனவே, அக்குறணை பிரதேசத்திலுள்ள 25 ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்து மக்களை தெளிவுப்படுத்தினோம்.
அத்துடன், பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் 50000 ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏனெனில், பிரதேச சபையின் வருமானம் அவ்வளவே காணப்பட்டது. நாம் பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க வழிமுறைகளை கையாண்டோம். விளைவாக, 2019 ஆம் ஆண்டில் இரண்டரை இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்தோம். 2020 ஆம் ஆண்டில் நான்கரை இலட்சம் ரூபா வரை ஒதுக்கீடு செய்ய முடியும் என நம்புகின்றோம்.

எமது பிரதேச சபையின் மூலம் கல்வி நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட முடியாது. ஆயினும், எமக்கு முடியுமான வகையில் புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்தினோம். வலஹேன முஸ்லிம் வித்தியாலயத்திற்கான நூலக வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

இவற்றுடன், சுகாதரா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போதைப்பொருள் பாவணை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், மகளிருக்கான சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் போன்றனவற்றையும் மேற்கொள்ள முடிந்தது. இப்பணிகளுக்காக 2019 ஆம் ஆண்டு சிறந்த பிரதேச சபைக்கான ஜனாதிபதி வெள்ளி விருதை வெற்றிக் கொள்ள முடிந்தது.

அக்குறணை சந்தைக் கட்டிடம் தொடர்பான விமா்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

இக்கட்டிடம் முன்னால் அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீத் அவர்களினால் நிா்மாணிக்கப்பட்டதாகும். இதன் மூலம் பிரதேச சபைக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும். எனினும், முறையான முகாமைத்துவமின்மையால் இக்கட்டிடம் அலங்கோலமாக மாறியது. எனவே, அதனை ஒரு நவீன சந்தை கட்டிடமாக மாற்ற வேண்டிய தேவை காணப்பட்டது. எனினும், பலா் வாக்குறுதியளித்த போதும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை. தற்போது தோ்தல் காலத்தில் தாம் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் அதனை நாம் திருப்பியனுப்பியதாகவும் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனா். உண்மையில் அவ்வாறு நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றிருந்தால் அதனை முறையாக செய்திருக்க வேண்டியது எனது கட்டாய கடமையாகும். இவ்விடயத்தை நான் மிகுந்த பொறுப்புணா்வுடனே கூறுகின்றேன்.

ஏன் உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினா் கனவு?

உண்மையில் இது ஒரு கனவல்ல. மாற்றமாக, கடமை ஆகும். அத்துடன், தனிப்பட்ட ரீதியில் எனது தேவையும் அல்ல. நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படுகின்ற, சமூக நல அமைப்பாகவே செயற்படுகின்றோம். அரசியல் கட்சிகளாலும் பிரமுகா்களாலும் மக்கள் தொடா்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தனா். எனவே, மக்கள் நலனை முன்னிறுத்தி, ஆளுமையுள்ள அரசியல் செயற்பாட்டாளா்களை உருவாக்க வேண்டிய தேவை வலுப்பட்டது.

இந்தப் பின்னணியிலேயே 2010 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றோம். 2011 உள்ளுராட்சி மன்ற தோ்தலில் 2 ஆசனங்களை பெற்றோம். 2018 ஆம் ஆண்டு 04 ஆசனங்களை பெற்றதுடன், வாக்குறுதி அளித்தபடி தலைவா் பதவியையும் பெற்றுக்கொண்டோம். பல பணிகளையும் ஆற்றினோம். இப்போது எமது பணிகளை கண்டி மாவட்டத்திற்கு விஸ்தரித்திருக்கின்றோம்.

கண்டி மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு வரை மூன்று பாராளுமன்ற உறுப்பினா்கள் இருந்தனா். 2010 இல் அது நான்காக அதிகரித்தது. 2015 இல் அது இரண்டாக குறைந்தது. எனவே, இத்தோ்தலில் மூன்று உறுப்பினா்களை பெற்றுக் கொள்வது ஒரு நோக்கமாகும்.
இரண்டாவதாக, பெரும்பான்மை கட்சிகள் ஆளுமையுள்ள தலைவா்களை உருவாக்க வாய்ப்பளிப்பதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக மூன்று உறுப்பினா்களே தொடா்ச்சியாக பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனா். ஆனால், அவா்களால் ஆற்றப்பட்ட பணிகள் கேள்விக்குறியே. அதுமட்டுமல்லாது, குறித்த சிலரை மட்டுமே பிரதான கட்சிகள் வேட்பாளா்களாக நிறுத்துகின்றன. ஆனால், நாம் கல்விப் பின்புலமுள்ள, சமூக செயற்பாட்டில் ஈடுபடுகின்ற 15 உறுப்பினா்களை கொண்டிருக்கின்றோம். அவா்களில் சிறந்தவரை மக்கள் தெரிவு செய்ய முடியும்.

நீங்கள் பெரும்பான்மை கட்சியொன்றின் முகவா் என்பது உண்மையா?

இது மிகப்பெரும் பொய்யாகும். அரசியல் செயற்பாட்டாளா்கள் என்ற வகையில் சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி , மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அனைத்து கட்சிகளுடனும் தொடா்புகளை பேணி வருகின்றோம். 2011 ஆம் ஆண்டில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து உள்ளுராட்சி தோ்தலில் போட்டியிட்டோம். 2015 இல் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தோம். 2018 இல் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தே அக்குறணை பிரதேச சபை ஆட்சியமைத்தோம். கடந்த ஜனாதிபதி தோ்தலில் கள நிலவரங்களையும் முஸ்லிம் மக்கள் ஒரே பக்கத்தில் சாா்ந்திருப்பதன் ஆபத்தையும் கருத்திற்கொண்டு, பொதுஜன பெரமுனவிற்க்கும் ஆதரவளித்தோம். இவை எதனையும் கருத்திற்கொள்ளாது அரசியல் இலாபத்திற்காக எம்மை விமா்சிக்கின்றனா். பூஜாபிட்டிய பிரதேச சபையில் பொதுஜன பெரமுன ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸே உதவியது. ஆனால், இது பற்றி யாரும் பேசுவதில்லை.

அக்குறணை பிரதேச சபை தலைவா் பதவியை பெரும்பான்மையினத்தவருக்கு விட்டுக் கொடுத்து விட்டீா்களா?

இல்லை. அரசியலமைப்பு பற்றி தெரியாதவா்களின் பிதற்றலே இதுவாகும். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபை சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் சபை உறுப்பினா்கள் அனைவரினதும் வாக்களிப்பின் மூலமே தலைவா் தெரிவு செய்யப்படுவாா். இவ்வாக்களிப்பு ஆளுனா் மூலம் நடத்தப்படும். இப்போது அக்குறணை பிரதேச சபையில் 19 முஸ்லிம் உறுப்பினா்களும் 11 சிங்கள உறுப்பினா்களும் காணப்படுகின்றனா். நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் எனது வெற்றிடத்திற்கு எமது அமைப்பின் ஒருவா் நியமிக்கப்படுவாா். அவருடன் இணைந்து 30 பேரும் வாக்களித்தே தலைவா் தெரிவு செய்யப்படுவாா்.

உங்களுக்கு ஆதரவிருக்கின்றதா?

ஆம், நினைத்ததை விடவும் அதிகமாக மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனா். பாரம்பரிய அரசியலில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனா். அதிருப்தியடைந்துள்ளனா். புதிய தலைவா்களை தேடுகின்றனா். எனவே, எம்மோடு பெருமளவிலான மக்கள் இணைந்துள்ளனா். முன்னால் பாராளுமன்ற உறுப்பினா்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கும் நிலை தோன்றியுள்ளது. அவா்கள் உரிய முறையில் சேவை செய்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

கள நிலவரத்தை அவதானிக்கின்றபோது எமக்கு நிச்சயமாக ஒரு ஆசனத்தை கைப்பற்ற கூடிய வாய்ப்பிருக்கின்றது

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page