பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்த முற்றாக தடை செய்யுமாறு பணிப்புரை

அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சிறிய பாலங்கள், மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களில் 8,000 கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

வீதி நிர்மாணப் பணியின்போது பயன்படுத்தப்படும் மண், கல், மணல் போன்றவற்றை தேவையானளவு தயார்படுத்தும் பொறுப்பை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page