பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கே மீள் விற்பனைசெய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளின் பின்னணியில் தெற்கின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி லெசி’ என்பவரின் நெருங்கிய சகாவான, தற்போது டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இவ்விவகாரத்தில் 14 ஆவது சந்தேக பெயரிடப்பட்டுள்ள உதார சம்பத் என்பவர் உள்ளமை கண்டறியப்பட்டது.
இந் நிலையில், அந்த வலையமைப்பை தற்போது டுபாயில் உள்ள உதார சம்பத்தும் , சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை செய்யப்பட்டுவரும் பொடி லெசியின் மற்றொரு சகாவான விஹங்க பிரபாத்தும் 55 சிம் அட்டைகளைப் பயன்படுத்தி வழி நடாத்திச் சென்றுள்ளமையை சி.ஐ.டி.யினர் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பில், நேற்றைய தினம், கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தகவல்களை வெளிப்படுத்தினார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்தாதக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
றாகம – பட்டுவத்த பகுதியைச் சேர்ந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் விமலசேன லயனல் , களுத்துறை – நாகொட பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் கயான் தரங்க பிரேமரத்ன சில்வா ,மாலம்பே பகுதியைச் சேர்ந்த சார்ஜன் முத்துபண்டாகே சமிந்த லக்ஸ்மன் ஜயத்திலக்க , கேகாலை – ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த சார்ஜன் ஜயசிங்ககே சமன் குமார ஜயசிங்க , பாதுக்க – கணேகொட பகுதியைச் சேர்ந்த சார்ஜன் வதுகாரகே விமல பிரசாத் வதுகார, பன்னிப்பிட்டி – மாக்கும்புர பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பட்டுவத்தகே ருவன் புஸ்பகுமார , பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ரத்துகமகே அஷங்க இந்திரஜித் ரத்துகமகே, திறப்பனை பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சமித் பிரதீப் குமார , கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் வன்னியாராச்சிகே லக்ஷான் சமீர , கெடலாவ – கொகாவல பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஹேரத் முதியன்சேலாகே லலித் ஜயவர்தன, கன்துன – வனதிவெல பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் தஹனக ராலளாகே அத்துல ஜயந்த பண்டார மற்றும் ஆட்டிகம பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க ஆராச்சிகே தினேஷ் நிர்மல ஆகியோரே இவ்வாறு மன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.
இந் நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, முறைப்பாட்டாளர்கள் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரால் திலீப்ப பீரிஸ், அரச சட்டதரணி நுவன் ஆட்டிகல ,அரச சட்டதரணி கசுன் சரச்சந்திர , குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா , பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் தசாநாயக்க , பொலிஸ் பரிசோதகர் விஜே சூரிய , பொலிஸ் பரிசோதகர் உபாலி பண்டார ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பில் சட்டதரணி அஜித் பத்திரண , சட்டதரணி வசந்த பிட்டிகல , சட்டதரணி டம்மிக்க ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந் நிலையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸின் தெளிவுபடுத்தல்கள் மற்றும் மேலதிக விசாரணை அறிக்கை பிரகாரம் பின்வரும் விடயங்கள் மன்றில் வெளிப்படுத்தப்பட்டன.
தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பாதாள உலக தலைவன் ‘பொடி லெசி’ என்பவரின் சகாவான, தற்போது டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உதார சம்பத் என்பவரே இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.
இந் நிலையில் உதார சம்பத் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார். ஆடம்பரகே அசித்த அல்விஸ் எனும் நபருக்கு தொழில் பெற்றுத் தருவதாக கூறி, அவரின் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொண்டு அதன் ஊடாக கடவுச் சீட்டினை தயாரித்தே உதார சம்பத் வெளிநாடு சென்றுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த நபரிடம் ( ஆடம்பரகே அசித்த அல்விஸ்) வாக்கு மூலம் பதிவு செய்துள்ள சி.ஐ.டி. மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனைவிட, பொடி லெஸியின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை டுபாயிலிருந்து உதார சம்பத்தும், நாட்டிலிருந்து விஹங்க பிரபாத்தும் 55 சிம் அட்டைகள் ஊடாக வழி நடாத்தியுள்ளனர்.
அதாவது பத்தேகம பகுதியின் சாமர கொமியுனிகேஷன் எனும் தொலைதொடர்பு நிலையம் ஊடாக, பல்வேறு நபர்களின் பெயர்களில் பெறப்பட்ட 55 சிம் அட்டைகளை, வலையமைப்பின் கடத்தல்காரர்களுக்கு வழங்கி அதனூடாக அவ்வலையமைப்பை அவர்கள் இருவரும் வழி நடாத்தியுள்ளனர்.
குறித்த 55 சிம் அட்டைகளுக்கும் டுபாயிலிருந்து உதார சம்பத்தும் இங்கிருந்து விஹங்க பிரபாத்தும் மட்டுமே தொடர்புகொண்டுள்ளனர்.
குறித்த தொலைத்தொடர்பு நிலையத்தில் சுமார் 1000 பிரதேசவாசிகளின் அடையாள அட்டை பிரதிகள் உள்ள நிலையில் அதனை மையப்படுத்தியே அங்கிருந்து சிம் அட்டைகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமையும், அதனூடாக தெற்கில் போதைப் பொருள் வர்த்தகம் நெறிப்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அது குறித்து விசாரணைக்கு சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள், அந்த தொலைத்தொடர்பு நிலையத்தில் சிம் அட்டை ஒன்றினை கொள்வனவு செய்ய முயன்ற போது அவர்களால் 10 சிம் அட்டைகளை வெவ்வேறு பெயர்களில் பெற்றுக்கொள்ள முடியுமாகியுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியிலேயே 55 சிம் அட்டைகள் ஊடாக மிக சூட்சுமமாக இந்த போதைப்பொருள் வலையமைப்பு வழி நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே, சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த விவகார்த்தில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 12 பேர் தொடர்ந்தும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் ஏனைய 13 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளனர்.