75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை

கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் அக்குறனை கோட்டத்திற்கு உட்பட்ட குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் (Kurugoda Boys Muslim Vidyalaya ) அதன் 75 ஆம் ஆண்டு பூர்த்தி விழா – பவள விழா ( Platinum Jubilee) எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடியது கொண்டாடுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தில் அக்குறனை மாநகரத்தின் மத்தியில் ரம்யமான குருகொடை கிராமத்தில் 75 ஆண்டுகால கல்விப் பணியைப் பூர்த்தி செய்துவிட்டு, அதன் முதல் நூற்றாண்டு நோக்கிய கல்விப் பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் தருணம் இது.

இக்கலையகம் 1947.06. 16 இல் முதன் முதலில் 13 மாணவர்களுடன் தன் பயணத்தை ஆரம்பித்தது. 5.8 பேர்ச் கொண்ட தற்காலிக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் முதல் ஆசிரியராகவும் அதிபராகவும் ஜனாப் U. Ahmad என்பவரும் முதல் மாணவனாக H.M.Fuwad என்பவரும் இருந்துள்ளனர். அக்காலத்தில் வீடு வீடாகச் சென்று மாணவர்களைக் கல்வி கற்பதற்காக அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வரலாறு சொல்கின்றது.1951.10. 16 இல் 03 ஆசிரியர்கள் 115 மாணவர்களுடன் இப்பாடசாலையை நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்காலிக கட்டிடத்தில் இயங்கிய பாடசாலை 1952.01.05 இல் ஜனாப் J.M.Noor Mohammed அவர்களின் வீட்டுக்கு மாற்றப்பட்டது. 1952 இல் புதிய கட்டிட வேலைகள் ஆரம்பிக் கப்பட்டு 1953.03.16 முதல் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இப்பாடசாலை ஆண்கள் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் போதிய ஆண் மாணவர்கள் அனுமதி பெறாததன் காரணமாக 1949. 01.12 இல் பெண் மாணவிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 1955 இல் ஆறாம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1957.05.01 இல் ஆண், பெண் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது.

அக்காலகட்டத்தில் மாணவர்கள் கல்வியில் மாத்திரமின்றி நாடகம், அரபு கீதம் மற்றும் ஏனைய இஸ்லாமிய நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றித்தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 1965இல் இப்பாடசாலையில் முதன் முதலில் கண்காட்சி ஒன்று நடைபெற்றமை விஷேட அம்சமாகும். முதன்முதலாக கல்விச் சுற்றுலாவிற்காக 1967இல் கொழும்புக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். முதல் அதிபராகக் கடமை புரிந்த ஜனாப் U.Ahmad சுமார் 20 வருடங்களின் பின் 1968.07.24 இல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதுவரை இப்பாடசாலையில் அதிபர்களாக கடமையாற்றியவர்களது விவரம் வருமாறு;

  1. Mr. U.Ahamed 1947 – 1948
  2. Mr.K.Kanapadip pillai 1948- – 1949
  3. Mr.U.Ahamed 1949 – 1968
  4. Mr. N.M.U.Ameer 1968- – 1970
  5. Mr.I L.M.A.Cader 1970- – 1984
  6. Mr.A.C.L.M.Thahir 1984- – 1989
  7. Mr.M.H.M.Jameel 1989- – 1992
  8. Mr.J.M.Zawahir 1992- – 2005
  9. Mr.N.Shamsudeen 2005- – 2008
  10. Mr.S.Ahamed Shafi 2008- – 2017
  11. Mr.SM.Hamzy 2017- – 2024

1973.01.25 இல் இப்பாடசாலையின் 06 ஆம் தர மாணவர்கள் அக்குறனை அஸ்ஹர் மகா வித்தியாலத்தில் கற்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

1979.02.12 ஒரு மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று 6ம் வகுப்பிற்கு கொழும்பு ரோயல் கல்லூரியில் இணைந்துகொண்டார். 1980 இல் நடைபெற்ற 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 03 மாணவர்களும் சித்தி அடைந்தனர். இது இப்பாடசாலைக்கும் அக்குறனைப் பிரதேசத்திற்கும் கிடைத்த ஒரு சாதனையாக கருதப்பட்டது. 1985ல் கொத்தனிப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் இப் பாடசாலையின் மாணவர்களும் பங்குபற்றி பல சாதனைகளை படைத்துள்ளமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் அதிகமான மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. 1999 இல் 18 மாணவர்கள் சித்தி அடைந்து சாதனை படைத்துள்ளனர். அதிலும் விஷேடமாக 2003 இல் ஒரு மாணவர் மாவட்ட ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வந்த காலங்களில் அதிகமான மாணவர்களின் வருகை காரணமாகவும் புதிய கட்டட வசதி காரணமாகவும் க.பொ.த சாதாரண தர பரீட்சை வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன.

அத்துடன் வட்டாரப் போட்டிகளுக்காக விளையாட்டு, மீலாத் விழா, தமிழ் தின விழா போன்ற கலாசார விழாக்களிலும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி வெற்றி ஈட்டி சாதனை படைத்துள்ளனர்.

2007ம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிய போதிலும் 2008 ஆம் ஆண்டி லேயே உத்தியோகபூர்வமாக க.பொ.த சா/ த. பரீட்சை இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

Kurugoda Boys School Principal & Staffs 2024

கல்வி அடைவுகள்….

பாடசாலை வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கப் பரீட்சைகளில் சிறந்த அடைவுகளை ஈட்டி வந்தது. எனினும் பல்வேறு காரணங்களினால் அதற்கு பிற்பட்ட காலங்களில் பரீட்சை பெறுபேறுகளில் ஒரு தளர்வு நிலை ஏற்பட்டிருந்தது. என்றாலும் கடந்த ஆறேழு வருடங்களாக பாடசாலை நிர்வாகத்தின் திட்டமிட்ட முயற்சிகளின் விளைவாக அல்லாஹ்வின் அருளால் மீண்டும் க.பொ.த. (சா/த) பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் படிப்படியான முன்னேற்றத்தை அடையக் கூடியதாக இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஏனைய இணைப்பாடச் செயற்பாடுகள்……

மாணவர்களது திறமைகள் பாடப் புத்தகங்களோடு மாத்திரம் வரையறுக்கப்படாமல் அவர்களது உள்ளார்ந்த பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து அவற்றைப் பட்டை தீட்டி மெருகூட்டி விடுவதன் மூலம் அவர்களை பன்முகத்தேர்ச்சி கொண்டவர்களாக வேலை உலகுக்குப் பொருத்த மானவர்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றிலேயே முதன் முதலாக Cadet Band வாத்தியக் குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இராணுவ மற்றும் பொலிஸ் Cadet Band பிரிவினரின் நேரடியான பயிற்றுவித்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், விளையாட்டுத்துறை, மாணவ மாணவிகளுக்கான கராட்டே பயிற்சிகள், கலைத்துறை, வாசிப்பு விருத்தி வேலைத் திட்டங்கள், கணினி அறிவு, மீடியா அலகு, விஞ்ஞான மற்றும் மனைப் பொருளியல் விருத்தி வேலைத் திட்டங்கள், மாணவர் தலைமைத்துவ மற்றும் ஒழுக்க மேம்பாட்டு வேலைத் திட்டங்கள்…… என மாணவர்களது ஆற்றல்களை விருத்தி செய்யத் தக்க வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் மாணவர் தேர்ச்சி மைய திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பாதையில் புதிய கோணத்தில் எமது பாடசாலை செல்லத் தடம் பதித்திருப்பது பாடசாலை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்பமாகும். இதனால் கல்வி அறிவும் ஒழுக்கப் பண்பாடுகளும் திறன் விருத்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற நட்பிரஜைகளை நாட்டிற்கு வழங்க முடியுமாக இருக்கின்றது. பாடசாலையின் பவள விழாவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிகழ்வுகளில் எமது மாணவர்கள் இந்த விடயத்தை மெய்ப்பித்துக் காட்டி இருக்கின்றார்கள்.

பௌதீக வள முன்னேற்றங்கள்….

பாடசாலை தன் உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு பௌதிக வளத் தேவைகள் இன்றியமையாதவை. அந்த வகையில் வரையறுக்கப்பட்ட அரச வள உதவிகளை மாத்திரம் எதிர்பார்த்திருக்காமல் எமது பாடசாலைச் சமூகம் பல்வேறு வழிகளில் பாடசாலைக்கான பௌதீக வளத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன் நின்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றது. நலன் விரும்பிகளதும் தனவந்தர்களதும் அரசியல்வாதிகளதும் அரச சார் – அரச சார்பற்ற நிறுவனங்களதும் ஒத்துழைப்புக்களைப் பெற்று பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பௌதிக வள விருத்தி வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. SDEC, EDF, OBA, OGA, பெற்றோர்கள், முன்னை நாள் மற்றும் தற்போதைய அரசியல்வாதிகள், குருகொடை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளி நிர்வாக சபையினர், பிரதேச சபை உறுப்பினர்கள், AWA-UK, AZDA, குருகொடை நலன்புரிச்சங்கம் போன்ற அதிகமான நிறுவனங்களும் தனிப்பட்ட நபர்களும் பாடசாலை அபிவிருத்தியில் ஓர் அணியாக நின்று ஒத்துழைப்புக்களை வழங்க ஆரம்பித்திருப்பது எமது பாடசாலை மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது.

இதுவரை இப்பாடசாலையில் 4000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கற்று வெளியேறி இருக்கின்றார்கள். இவர்கள் இன்று உள்ளூரிலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழிலாற்றிக் கொண் டிருப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் தேசத்திற்கும் தங்களால் முடிந்த அபிவிருத்திப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் கணினி மற்றும் தொழில்நுட்பவியலாளர்களாகவும் கணக்காளர்களாகவும் பல்வேறு அரசாங்க மற்றும் தனியார் துறைகளிலும் தொழில் வல்லுநர்களாக பணியாற்றி வருகிறார்கள். இப்பிரதேச மக்களின் பிரதான தொழிலான வியாபார, வர்த்தகத் துறைகள் சார்ந்த தொழில் முயற்சிகளில் பழைய மாணவர்களில் கணிசமான தொகை யினர் ஈடுபாடு காட்டி தொழிலதிபர்களாக மிளிர்கின்றார்கள்.

பாடசாலையின் பழைய மாணவ மாணவிகள் தமது கல்விக் கண்களைத் திறந்து அறிவூட்டி வளர்த்து ஆளாக்கிய தம் தாய்ப் பாடசாலையின் அபிவிருத்தியிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் பவள விழா தொடர்பான நிகழ்வுகள்….

Kurugoda Boys School – Platinum Jubilee Committee Members

75ஆம் ஆண்டு நிறைவு பவள விழாவை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் பாடசாலையில் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகளின் நோக்கங்களாக பின்வரும் விடயங்களை கூறலாம்:

  1. பாடசாலைப் பிள்ளைகளின் பெற்றோர்களை முழுமையாக பாடசாலையோடு இணைத்துக் கொள்ளுதல்.
  2. பழைய மாணவ மாணவிகள் தாம் பயின்ற பாடசாலையோடு மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் அளித்தல்.
  3. பாடசாலையின் அபிவிருத்தியில் பெற்றோர்கள், பழைய மாணவ மாணவிகள், நலன் விரும்பிகள் மற்றும் தனவந்தர்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளல்.
  4. நவீன நூற்றாண்டின் கல்வி அடைவுகளை எட்டக்கூடிய வகையில் மாணவர்கள் தம்திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  5. பாடசாலை என்னுடையது என்ற எண்ணக்கருவை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்துதல்.
  6. பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
  7. நீண்ட காலக் குறைபாடாக நிலவி வரும் வகுப்பறைப் பற்றாக்குறையை தீர்க்கும் வண்ணம் பாடசாலைக்கான மூன்று மாடி கட்டடம் ஒன்றை அமைத்தல்.

இந்த எல்லா நோக்கங்களையும் அடையக்கூடிய சிறந்த வாய்ப்பாக பாடசாலையில் பவள விழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பவள விழாவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விடயங்கள் :

  1. பழைய மாணவர் சங்கம் – OBA, பழைய மாணவிகள்- OGA சங்கம் இரண்டும் தனித்தனியாக ஸ்தாபிக்கப்பட்டமை.
  2. விளையாட்டுப் போட்டிகள்: ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்களுக்காக வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பாடசாலைக்கெனத் தனியான விளையாட்டு மைதானம் இல்லாத போதும் கூட குருகொடை ஜும்ஆப் பள்ளிவாசலின் மைதானத்தையும் அக்குறனை அஸ்ஹர் தேசிய பாடசாலை மைதானத்தையும் ஊரின் மத்தியில் இருக்கின்ற போக்குவரத்து வீதியையும் பயன்படுத்தி இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
  3. மாணவர் சந்தை : மாணவர்களது சமூகத் தொடர்பாடலை விருத்தி செய்யக்கூடிய வகையில் வித்தியாசமான அமைப்பில் மாணவர் சந்தை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  4. மாணவர் கல்விக் கண்காட்சி : மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்க கூடிய கண்காட்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தம் அபார திறமைகளை வெளிக்காட்டி ஊர் மக்கள், பிரமுகர்கள், கல்வித் திணைக்கள மற்றும் அரசு அதிகாரிகளது பாராட்டுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
  5. கலை விழா: மாணவர்கள் மத்தியில் மறைந்து கிடக்கும் கலைத்துறைசார்ந்த ஆற்றல்களுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கும் வகையில் ‘சங்கமம்’ என்ற பெயரில் மாபெரும் கலை நிகழ்வுகள் நடந்தேறின. தாம் கலைத்துறையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்ற பேருண்மையை இப்பிரதேச மக்களுக்கு நிரூபித்துக் காட்டினார்கள்.
  6. நினைவு மலர் வெளியீடு: பல்வேறு பிரபலங்களதும் ஆசிரியர்களதும் மாணவர்களதும் ஆக்கங்களை சுமந்த ‘குருகொடைத் தென்றல்’ என்ற பெயரில் நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த 75 ஆண்டு நிறைவு பவள விழா நிகழ்வுகளை திட்டமிட்டு அமுல்படுத்திக் கொண்டிருப்பது அதிபர், ஆசிரியர் குழாம், SDEC, OBA, OGA மற்றும் குருகொடை முஹியதீன் ஜும்மாபள்ளி நிர்வாக சபை ஆகிய தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்த ‘பவள விழா குழு – Platinum Jubilee Committee’ யின் மூலமே இப்பவள விழா சம்பந்தமான சகல வேலைத் திட்டங்களும் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. “அறிவைத் தேடுவது ஒவ்வொருவரினதும் பர்ழான கடமை” என்ற இஸ்லாத்தின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப எமது எதிர்கால சந்த தியினரின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களை இறைவனுக்குக் கட்டுப்பட்ட நல்லடியார்களாகவும் சமூகத்துக்கும் நாட்டிற்கும் விசுவாசமான நட்பிரஜைகளாகவும் வடிவமைக்கவேண்டும் என்ற உயர்ந்தநோக்கத்தோடு எமது பாடசாலை விவகாரங்கள் அனைத்திலும் பங்கேற்ற அனைவருக்கும் பாடசாலை சார்ந்த மனமார்ந்த நன்றிகள். அனைவரது நல்ல எண்ணங்களுக்கும் அல்லாஹுத்த ஆலாவின் அருட்கொடைகளும் மறுமையில் சிறந்த கூலிகளும் கிடைக்க அருள் புரிவானாக.

Check Also

அக்குறணை வெள்ளப்பெருக்கை தடுக்க நிதி ஒதுக்குக – ஹலீம் MP

அக்குறணையில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பெரும் பெருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, இதனை கட்டுப்படுத்துவதற்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக …

Free Visitor Counters