அக்குறணை வெள்ளப்பெருக்கை தடுக்க நிதி ஒதுக்குக – ஹலீம் MP

அக்குறணையில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பெரும் பெருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, இதனை கட்டுப்படுத்துவதற்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக அவசரமாக நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவருமான எம்.எச்.அப்துல் ஹலீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு, அக்குறணை வெள்ளப்பெருக்கு தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் நியமிக்கப்பட்ட செயலணி பரிந்துரை செய்த சிபாரிசுகளை அமுல்படுத்துவது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்றும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.

கடந்த திங்களன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாயம், பெருந்தோட்டத்துறை தொடர்பாக வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின்போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஹலீம் எம்.பி. இதனை சுட்டிக்காட்டினார்.

குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அக்குறணை நகர் வெள்ளப்பெருக்குக்கு முகம்கொடுத்துள்ளது. அடுத்தடுத்து இரு தடவைகள் இவ்வாறு அக்குறணை நகர் அனர்த்தத்திற்குள் உள்ளானதால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

ஏ9 பாதையில் அமைந்துள்ள நகரமே அக்குறணையாகும். அக்குறணையில் அடிக்கடி ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கு தொடர்பில் நான் பல தடவைகள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன்.

2001 ஆம் ஆண்டு அக்குறணை நகர் முதன் முதலாக வெள்ளப் பெருக்குக்கு முகம் கொடுத்தது. அதற்கு முன்னதாக இவ்வாறானதொரு வெள்ள அனர்த்தத்தை அக்குறணை நகர் எதிர்கொண்ட தில்லை. அக்குறணை நகரில் ஏற்படும் இந்த வெள்ள அனர்த்தம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின்போது செயலணியொன்றை அமைத்திருந்தோம். இதனூடாக இந்த அனர்த்தத்திற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். இதனூடாக குறித்த செயலணி பிரச்சினைகள் குறித்த அறிக்கையை தயாரித்திருந்தது.

அத்தோடு பிரச்சினைக்கு தீர்வாக சில யோசனைகளையும் சிபாரிசு செய்திருந்தது. குறித்த யோசனைகள் பின்னர் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அடுத்தடுத்து எதிர் நோக்கும் அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். இம்முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அக்குறணை நகர் பெரும் நட்டத்தை எதிர் கொண்டிருக்கிறது. அக்குறணை நகர் கண்டி மாவட்டத்திலும் ஏ9 வீதியிலும் அமைந்திருக்கின்ற மிக முக்கியமான பொருளாதார ஸ்தலமாக காணப்படுகின்றது. இங்கு பாரியளவிலாள வர்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெள்ளப்பெருக்கினால் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் வாழ்வாதார பிரச்சினைகளும் ஏற்படுவதனாலேயே இதனை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஒரு சல்லிக்கு பிரயோசனமில்லாத கதிரை சூடாக்கும் அக்குறணை mp இவர்

வரவு செலவு திட்டத்தின் ஊடாக காலி நகர் வெள்ளப் பெருக்கு அனர்த்தத்திற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்து. அதேபோன்று பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் அக்குகுறணை நகரின் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பெரும் நிதியை ஒதுக்க வேண்டும். அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட அக்குறணை வெள்ளப்பெருக்கு தொடர்பான செயலணியின் சிபாரிசுகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதனை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதுவே பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வாக அமையும். கண்டி மாவட்டம் வாசனை திரவிய ஏற்றுமதி பயிர்ச்செய்கைக்கு பெயர்போன இடமாகும். குறிப்பாக, சாதிக்காய், கராம்பு, மிளகு, வெற்றிலை, கருவாப்பட்டை போன்ற பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. அக்குறணை பகுதியும் இந்த வியாபாரத்தில் மிகப் பிரசித்திப்பெற்ற இடமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி மலர் 16 – இதழ் 6 14-12-2023

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters