ஞானசாரரிடம் உண்மையைக் கண்டறிவார்களா…?

‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில், பலரும் சாட்சியங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தாக்குதல்கள் தொடர்பில், புதுப்புது தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிக்கின்றன.

அநியாயமாக உயிர்ப்பலி எடுக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நியாயம் கிடைப்பதற்காகவும் அடிப்படைவாத, பயங்கரவாத செயற்பாடுகள் மேலும் உருவாகாமல் தடுப்பதற்கும், முழுமையான விசாரணை ஒன்று அவசியமாகின்றது.

அந்த வகையில், இலங்கை முஸ்லிம்களுக்குப் பெரும் இழுக்கை ஏற்படுத்திய ‘சஹ்ரான்’ என்ற முஸ்லிம் பெயர் தாங்கி, பயங்கரவாதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதும், இதற்குப் பின்னால் இருந்தவர்கள், பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டவர்கள் போன்றோரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் இன்றியமையாதது.

இதற்கிடையில், ஆணைக்குழுவில் சாட்சியமளிப்போர் தெரிவிக்கும் கருத்துகள், சாட்சியங்கள் பொதுவாக, முஸ்லிம் சமூகத்தில் உணர்வுகளில், தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், ‘இது எங்கு வந்து முடியப் போகுதோ’ என்ற அச்சத்தையும் உண்டுபண்ணுகின்றது.

அந்த வரிசையில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், இவ்வாணைக் குழுவில் தெரிவித்த விடயங்கள், மிகுந்த அவதானிப்புக்கு உரியன.

நான்கு சிந்தனைகளைக் குறிப்பிட்டிருந்த தேரர், அந்தச் சிந்தனைகளின் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் 43 முஸ்லிம் அமைப்புகளின் ஊடாக, இலங்கையில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகின்றது என்று சொல்லி இருந்தார். அத்துடன், கடந்த ஐந்து வருடங்களுக்குள் மாத்திரம், வேறு மதங்களைச் சேர்ந்த 88 ஆயிரம் பேர், இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மிகப் பாரதுரமான கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே, ஞானசாரர் ஓர் இனவாதி என்று கூறி, அவரது சாட்சியத்தை முஸ்லிம் சமூகம், கவனத்தில் எடுக்காமல் விட்டுவிடக் கூடாது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அவர் பெயர் குறிப்பிட்டுள்ள அமைப்புகள், வெளிப்படையாகச் சாதாரணமான மத போதக அமைப்புகள் என்பதே, முஸ்லிம்களின் நம்பிக்கை. என்றாலும், பயங்கரவாதம், அடிப்படைவாதம் போன்ற சிந்தனைகளைக் கொண்ட ஒரு நபராவது, இஸ்லாத்தின் பெயரிலான எந்தக் கோட்பாடுகள், அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றார் என்பதை, முஸ்லிம் சமூகம் சுயமாக உண்மையைக் கண்டறிந்து, களையெடுப்புச் செய்ய வேண்டும்.

அது ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள், இஸ்லாமியச் செயற்பாட்டாளர்கள் தொடர்பில், இவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்ற பேர்வழிகளின் பின்புலம், உள்நோக்கங்கள், அத்தகவல்களின் உண்மைத் தன்மை பற்றி, முழுமையாக உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், முஸ்லிம்கள் பற்றிய சந்தேகப் பார்வை தொடரலாம்.

குறிப்பாக, தன்னைப் பயங்கரவாதி என, ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு முன்னைய அரசாங்கம் அறிவித்து இருந்ததாக ஞானசார தேரர் கூறியிருக்கின்றார். முன்னதாக, இலங்கையில் இயங்கும் பயங்கரவாத, அடிப்படைவாத அமைப்புகள் தொடர்பில் சாட்சியமளித்த சாட்சி ஒருவர், பொதுபல சேனாவின் பெயரையும் குறிப்பிட்டதாக ஞாபகம்.

எனவே, சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி, சாட்சிகளின் பின்புலம், முன்வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் உண்மைத் தன்மை ஆகியவற்றையும் கண்டறியும் விசாரணைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்துக்கு வெளியிலுள்ள வேறுசில இனவாத, மதவாத, அடிப்படைவாத அமைப்புகள் தொடர்பிலும், விசாரணை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். (மொஹமட் பாதுஷா)