அக்குறணையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில் தேடிச் செல்வோரின் நிலை என்ன?

‘அக்குறணையிலிருந்து 9 பேர் கட்டாருக்கு வந்திருக்கின்றனர். முடிந்தளவு அவர்களது அடிப்படை தேவைகளுக்கான உதவிகளைச் செய்து வருகின்றோம். சில மாதகாலமாக அவர்களுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழிகிறது. ஆனால், இன்னும் தொழில்கள் எதுவும் கிடைத்தபாடில்லை. தொழில் தகைமைகள் எதுவும் இல்லாது, போலி முகவர்களால் இங்கு வந்து செய்வதறியாது மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இது குறித்து ஊரில் ஏதாவது விழிப்புணர்வை மேற்கொள்ளலாமா?” என்று கேட்கின்றார் கட்டாரில் தொழில் செய்து வருகின்ற சமூக செயற்பாட்டாளர் அமான் அக்ரம்.

கடந்த காலங்களில் நிலவிய இனவாத போக்கும், ஈஸ்டர் தாக்குதலும் இலங்கை முஸ்லிம்களது பொருளாதாரத்திலும், மனநிலையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த கோவிட்-19 மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலமையை இன்னும் படுமோசமடையச் செய்துள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில், பொருளாதார நெருக்கடியும் வாழ்க்கை செலவீனங்களின் அதிகரிப்பும் இளைஞர்களையும் இளம் குடும்பஸ்தர்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நோக்கி தள்ளியிருக்கின்றது. ‘வேறு வழியில்லை. வெளிநாடு செல்வதுதான் ஒரே வழி” என்ற மனநிலை பலரிலும் ஆழமாக பதிந்திருக்கின்றது.

அக்குறணையும், வெளிநாட்டு வாழ்க்கையும்

அக்குறணை வியாபாரத்தை பிரதான வருமான மூலமாக கொண்ட சமூகம். காலத்திற்குக் காலம் காணப்படும் சந்தை வாய்ப்புக்களை மையப்படுத்தி அதன் பிரதான வருமான வழிமுறைகள் மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. பொருளாதார நோக்கில், 1990களில் இருந்து ஜப்பானையும், 2000ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளையும் நோக்கி அக்குறணை மக்களின் ஆர்வம் கொள்ளத் துவங்கினர்.

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் அங்கு குடியுரிமை வழங்கப்பட்டதனால், தொழில் வாய்ப்பிற்கு சென்றவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் சென்று குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்களது வாழ்விடமாக அந்நாடுகள் மாறிவிட்டன. எனவே, இவர்களது பொருளாதார பங்களிப்பு பெருவாரியாக ஊரில் தாக்கம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

ஆனால், ஜப்பானை பொறுத்தவரையில் அங்கு தொழில் செய்யலாம், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குடியுரிமை பெறுவது கடினமாகும். இதனால், பொதுவாக ஜப்பான் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு களமாகவே பயன்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில், அக்குறணையின் மொத்த வருமானத்தில் பெரியதொரு வகிபாகம் ஜப்பானுக்கு இருக்கின்றது. ஆனால், அண்மைக் காலமாக இந்தப் போக்கில் ஓரளவு மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அக்குறணை இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அத்தோடு, இங்கு பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில் நோக்கில் செல்வது மிகவும் குறைவாக இருப்பதும் கவனிக்கத்தக்கது

மத்திய கிழக்கை நோக்கிய நகர்விற்கான காரணம்?

தொழில் நோக்கில் அக்குறணையிலிருந்து மத்திய கிழக்கை நாடுவதற்கு இரு பிரதான காரணங்கள் தெரிய வருகின்றது. அதில் முதலாவது, அக்குறணை பஸாரில் தொடர்ச்சியாக வருகின்ற வெள்ளம் காரணமாக சாதாரண கடைகளை வைத்து வியாபாரம் செய்துவந்த பலர் தங்களது தொழிலை இழந்திருக்கின்றனர். அடுத்தது, புதிய வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என்பது பெரும்பாலானவர்களது கருத்தாக இருக்கின்றது.

மூலம்: அக்குறணை அனர்த்த நிலையம்

மேலுள்ள தகவல்களின் அடிப்படையில், இறுதியாக 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அக்குறணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாத்திரம் மொத்தமாக 218 வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 73 சிறிய வியாபார நிலையங்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக வந்த வெள்ளத்தினால் மாத்திரம் 140 மில்லியன்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளத்தின் பின்னரும் சிறிய மற்றும் சாதாரண கடைகள் குறைந்தது 5ஆவது மூடுப்படுவது வழக்கம். இறுதியாக வந்த வெள்ளத்தினால் மாத்திரம் 17 கடைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் தங்களது தொழில்களை இழந்துள்ளதாகக் கூறுகின்றார் அக்குறணை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். ரியாஸ் முஹம்மத்.

செனல் 4 அண்­மையில் வெளி­யிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஆவ­ணப்­படம் சமூ­கத்தின் மத்­தியில் பல சர்ச்­சை­க­ளையும், வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதனால் இவ்­வி­டயம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும், நீதியை வேண்டி நிற்­கின்ற அனை­வ­ருக்கும்

கடந்த காலங்களில் எதிர்கொண்ட இனவாதப் போக்கு, கண்டிக் கலவரம், ஈஸ்டர் தாக்குதல் போன்ற இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அக்குறணை வியாபாரிகளை வெகுவாகப் பாதித்தருந்தது. அதனைத் தொடர்ந்து நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, கணிசமானோரை வறுமையை நோக்கித் தள்ளியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றால் இலகுவாகத் தொழில் வாய்ப்புக்களைப் பெறமுடியும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

‘ஜப்பானுக்கு செல்ல பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செலவளித்துச் சென்றாலும் தொழில் உத்தரவாதம் எதுவும் இல்லை. இன்றைய பொருளாதார நிலையில் அவ்வாறான ஒரு ‘ரிஸ்க்’ எடுப்பதற்கான சூழ்நிலை இல்லை. மக்களிடம் பணமும் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் சந்தை ஓரளவு முன்னேறி வருகின்றது. வீசா உத்தரவாதம் இருக்கின்றது. செலவீனங்கள் குறைவு, போன்ற காரணங்களினாலேயே அங்கு செல்வது அதிகரித்திருக்கின்றது” என்கிறார் மத்திய கிழக்கில் பணிபுரிந்து வருகின்ற அமான் அக்ரம்.

ஜப்பானுக்கு ஒரு வருட விசாவிற்கு 3-4 மில்லியன்கள் அறவிடப்படுவதாகவும், 3 மாத வியாபார விசாவில் செல்வதானால் ஒரு மில்லியன் செலவாகும் எனவும், தொழில் உத்தரவாதம் எதுவும் இல்லை என்று கூறுகின்றார் ஜப்பானுக்கான வீசா ஒழுங்குகளை மேற்கொள்கின்ற ஒருவர்.

‘இலங்கையில் ஏதாவது செய்து முன்னேறலாம் என்ற நம்பிக்கை இல்லை. குறைந்தது குடும்பத்தில் ஒருவராவது வெளிநாடு சென்றால்தான் சமாளிக்கலாம்” என்று கூறி தான் தொழிலில் எதிர்கொண்டுள்ள சவால்களை நீண்ட நேரமாக விபரிக்கின்றார் ஊரிலுள்ள சில்லறைக் கடை உரிமையாளரான முஹம்மத் பாயிஸ்.

தானும் கட்டாருக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகச் சொல்கின்ற அவர், என்ன தொழிலுக்கு செல்ல எதிர்பார்ப்பதாகக் கேட்டால், அதுகுறித்த எந்தவிதத் தெளிவும் இல்லை. அங்கு சென்ற பின்னர் கிடைக்கும் தொழிலைச் செய்யலாம் என்றே அவர் கருதுகின்றார்.

போலி முகவர்கள்

வெளிநாடு சென்று சம்பாதிப்பதுதான் ஒரே வழி என்ற மனநிலையை பயன்படுத்தி, பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுகின்ற போலி முகவர்கள் அதிகரித்திருக்கின்றனர். அவர்களது வலையில் சிக்கிய இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

‘அங்கு செல்ல முன்னர், முகவர்கள் ஏதாவது ஒரு நல்ல தொழிலைச் சொல்லுகின்றார்கள். ஆசை காட்டுகிறார்கள். ஆனால், சென்ற பின்னர் தொழிலும் இல்லை. தங்குவதற்குக் கூட பொருத்தமான இடத்தை வழங்க மாட்டார்கள். அக்குறணை சகோதர்கள் 50இற்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு கட்டாருக்கு வந்து சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இவ்வாறு சிக்கியிருப்பார்கள் என நினைக்கின்றேன்” என்கிறார் அமான் அக்ரம்.

இலங்கயிலுள்ள முகவர்கள் ஏதாவது ஒரு தொழிலைக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவிடுகின்றார்கள். கட்டார் சென்றவுடன் அங்குள்ள ‘மேன்பவர் ஏஜன்சிகளில்’ சேர்த்து விடுகின்றனர். அவர்கள், அவர்களுக்குக் கிடைக்கின்ற ஏதாவது கடினமான தொழில்களுக்கு இவர்களை அனுப்புகின்றனர். அதற்கு சம்பளத்தைக் கூட சரியாகத் தர மாட்டார்கள் என்றார் ஒருவர்.

‘வெல்டிங் வேலை என்றுதான் அனுப்பினார்கள். இங்கு வந்த பின்னரே நான் முழுமையாக ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தேன். ஏதாவது ஒரு சிறிய வேலையாவது கிடைத்தால் போதும் என்றிருக்கின்றேன். எனது நிலமை அப்படியாகிவிட்டது. ஆனால், எதுவும் கிடைப்பதாக இல்லை. எங்களுடன் 7 பேர் இருக்கின்றனர். போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட எம்மைப் போன்ற பல குழுக்கள் கட்டாரில் பல இடங்களில் தங்கியிருக்கின்றனர்” என்று தனது நிலை பற்றி விபரிக்கிறார் முஸம்மில்.

முஸம்மில் நேர்மையானவர். அக்குறணை நகரில் சிறிய வியாபாரமொன்றை நடாத்தி வந்தவர். வெள்ளம் பலமுறை அவரது கடையை பதம்பார்த்துவிட்டது. கொரோனாவும், நாட்டின் பொருளாதார நிலமையும் அவரின் நிலையை இன்னும் மோசமாக்கியது. மிகவும் சுறுசுறுப்பான அவர் ‘சும்மா” இருக்கவில்லை, மிகுந்த கஸ்டத்திற்கு மத்தியிலும் தனக்குத் தெரிந்த ஒரு கைத்தொழிலை வீட்டிலிருந்து செய்துகொண்டிருந்தார். வறுமை முஸம்மிலை கடன் வாங்கி கட்டாருக்கு செல்ல வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டது.

‘இங்கு முகவர்களாக செயல்படுகின்றவர்களுக்கு கட்டாரில் கம்பனி இருக்கின்றது. வீசாக்கள் வழங்குவதற்கென்றே அவர்கள் கம்பனி ஆரம்பித்திருக்கின்றார்கள். அதில், குறைந்தது 20 முதல் 30 பேருக்காவது வீசா வழங்குகின்றார்கள். எனக்கும் அவ்வாறான ஒரு கம்பனியில் வேலை என்றுதான் வீசா வழங்கியிருக்கின்றனர். ஆனால், தொழில் எதுவும் இல்லை” என்று போலி முகவர்கள் பற்றி தெளிவுபடுத்துகின்றார் முஸம்மில்.

‘கட்டாரில் வெளிநாட்டவர்களுக்கு நேரடியாக எந்தவொரு வியாபாரத்தையும் பதிவு செய்ய முடியாது. கட்டார் பிரஜை ஒருவரது பங்களிப்பு அவசியம். அந்த வகையில் ஒரு வயதான அல்லது தெரிந்த ஒரு கட்டார் பிரஜையின் பெயரில் கம்பனியை ஆரம்பிக்கின்றனர். அவர் இடுகின்ற கையொப்பத்திற்காக மாதாந்தம் ஒரு தொகையை வழங்கிவிட்டு,முகவர்கள் தங்களது காரியத்தை சாதிக்கின்றனர். போலி முகவர்கள் அந்த கம்பனியில் வேலை என்று கூறி ஒருவரிடம் 5முதல் 6 இலட்சம் பெறுகிறார்கள்” என்று மேலும் கூறுகின்றார் முஸம்மில்.

தொழில் ரீதியாக கட்டார் செல்வதற்கான கட்டண விபரங்களை இலங்கை வேலைவாய்ப்புப் பணிமனை இணையத்தளத்தில் பதிவு செயதுள்ள முகவர் நிலையங்களில் காணப்படக் கூடிய தொழில்களை தேடிப்பார்த்தால், அதிகளவிலான கட்டணங்கள் ஒரு இலட்சத்திற்கு கீழ்ப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் பார்க்கின்ற போது, கட்டார் செல்வதற்கு அதிகப்படியாக இரண்டு அல்லது மூன்று இலட்சத்திற்கு மேல் செலுத்த வேண்டிய அவசியிமில்லை என்றே தெரிகிறது.

மோசடி நெட்வேர்க்

தொழில் திறமைகள் இல்லாது கட்டார் செல்கின்றவர்கள், தங்களிடம் இருக்கின்ற நகைகள், வியாபார நிலையம் அல்லது முச்சக்கர வண்டி போன்றவற்றை விற்றுவிட்டே முகவர்களுக்குப் பணத்தை செலுத்திவிட்டு வருகின்றனர். சிலர் ஸகாத் பணத்தில் கூட செல்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு தொழில் வீசாவில் செல்கின்றவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, பயிற்சி வழங்கப்படுவது வழமை. அப்படிச் செல்பவர்களுக்குத் தொழில் பாதுகாப்பும், வருமானமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. ஏதாவது பிரச்சினை என்று வரும்போது அங்குள்ள தூதரகத்தின் உதவியும் கிடைக்கிறது. ஆனால், இதிலும்கூட முறைகேடுகள் நடக்கின்றன என்பது பலரது எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.

‘நான் முதன்முறையாகவே வெளிநாடு ஒன்றுக்கு வந்திருக்கின்றேன். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதியவேண்டும் என்று என்னிடம் கடவுச்சீட்டை கேட்டார்கள். பதிவு செய்த முத்திரை எனது கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருக்கின்றது. ஆனால், நான் நேரடியாக அங்கு செல்லவுமில்லை. பயிற்சிகள் பெறவுமில்லை” என்கிறார் பாதிக்கப்பட்ட நபரொருவர்.

பொதுவாக இலங்கை வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்கின்றவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சில தொழில்களுக்கு 28 நாட்கள் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதாயின் குறைந்தபட்சம் 2 நாட்களாவது பயிற்சிபெற வேண்டுமென்கிறார் இலங்கை வேலை வாய்ப்புப் பணியகத்தின் பயிற்றுவிப்பு மற்றும் ஆட்சேர்ப்புக்கான பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாபா.

ஆனால், அவ்வாறு பயிற்சியின்றி அனுமதி வழங்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அதில் ஒருவரோடு பேசிய போது, “எனக்கு வாகனம் சுத்தம் செய்யும் தொழில் (Vehicle Cleaning) என்று கூறினார்கள். கொழும்புக்குச் சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, வாகன ஓட்டுனர் (Driving) தொழில் என்றார்கள். எனக்கு வாகனம் சுத்தம் செய்யும் தொழில் என்றுதான் கூறினார்கள் என்றேன். இப்போதைக்கு இதில் கைச்சாத்திடுங்கள். அங்கு சென்ற பின்னர் உங்களுக்குக் கூறிய தொழில் கிடைக்கும் என்றார்கள். ஆனால், இங்கு வந்து 4 மாதங்களாக தொழில் எதுவும் இல்லை” என்கிறார் அவர்.

இலங்கை வேலை வாய்ப்புப் பணியகத்திற்குச் செல்லாது அனுமதியளிக்கப்பட்ட இன்னுமொருவரது ஆவணங்களைப் பார்த்த போது, சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Represent) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “நான் சாதாரண கூலித் தொழிலாளி. மார்கடிங் துறையில் எதுவும் செய்ததில்லை. சான்றிதழ்கள் எதுவும் இல்லை. பயிற்சிகள் எதுவும் கிடைக்கவுமில்லை” என்கிறார் அவர்.

இவற்றைப் பார்க்கின்ற போது, துணை முகவர் (Sub Agent) முகவர் (Agent) மோசடி நெட்வர்கிற்கு இலங்கை வேலை வாய்ப்புப் பணியகத்தின் பணியாளர்களும் ஒத்துழைக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

இலங்கை வேலைவாய்ப்புப் பணியக உயர் அதிகாரியான செனரத் யாபா அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, “அவ்வாறான மோசடிகள் இடம்பெற்றிருந்தால் பணியகத்தில் முறைப்பாட்டுப் பகுதியில் முறைப்பாடு செய்யலாம் எனவும், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அதுகுறித்துத் தேடிப் பார்த்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்றும் கூறினார்.

கட்டாரில் எவ்வாறு தொழில் வழங்குகின்றார்கள்?

வெளிநாட்டுத் தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் அதன் நடைமுறைகள் பற்றி தெரிந்திருத்தல் அவசியம். அவ்வாறான எந்த அறிவும் இல்லாததனாலேயே முகவர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். அந்த வகையில் கட்டாரில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.

கட்டாரில் இருக்கின்ற ஒரு நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவைப்பட்டால், அவர்கள் தங்களுக்கு இத்தனை வேலையாட்கள் தேவை என அரசாங்கத்திற்கு அறிவிப்பார்கள். கட்டார் அரசினால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் போன்ற நாடுகளுக்கான கோட்டாக்களை பிரித்து அதன் பிரகாரம் வேலையாட்களை பெறுவதற்கு அனுமதியை அந்நிறுவனத்திற்கு வழங்குவார்கள். குறித்த நிறுவனம் கட்டாரிலுள்ள முகவர் நிறுவனம் ஒன்றிற்கு அத்தொகையை வழங்கி மேலே கூறிய நாடுகளுக்குறிய கோட்டாக்களின் அடிப்படையில் வேலையாட்களை பெற்றுக்கொள்வார்கள்.

இதேபோல, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் போன்ற நாடுகளிளைச் சேர்ந்தவர்கள் அங்கு கம்பனி ஆரம்பித்திருப்பார்கள். குறித்த கம்பனிகளின் தன்மைகளுக்கு ஏற்ப தொழிலாளர்கள் இவர்கள் வரவழைத்துக்கொள்ள முடியும். அதற்கான அனுமதி கட்டார் அரசினால் வழங்கப்படும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு 25 பேருக்கான வீசா அனுமதி வழங்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். (குறித்த 25 பேருக்கும் தொழில் வழங்குவதற்கான வாய்ப்பு அங்கிருக்காவிட்டால்) அவர்களுக்குத் தேவையான தொகையை வைத்துக்கொண்டு, (15 பேர் என வைத்துக்கொள்வோம்) மிகுதி (10) வீசாக்களை ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, மேலுள்ள நாடுகளில் இருக்கின்றவர்கள் நடாத்துகின்ற முகவர் நிறுவனத்திற்கு வழங்கிவிடுவார்கள். ஆனால், அவர்களுக்கான தொழில் உத்தரவாத்தை வீசாவுக்குரிய நிறுவனம் வழங்க மாட்டாது. குறித்த (10 பேருக்கான) வீசாக்களை பணம் கொடுத்து பெற்றுக்கொண்ட நிறுவனமே அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறித்த வீசா ஏதாவது ஒரு தொழில் வீசாவாகவே இருக்கும். ஆனால், அங்கு சென்றால் அந்நிறுவனத்தில் தொழில் இருக்காது. விசா 2 வருடங்கள் என்று இருந்தாலும், பொதுவாக கட்டார் சென்றவுடன் விமான நிலையத்தில் 3 மாத நுழைவு வீசாவே வழங்கப்படும். 3 மாதத்திற்குள் தொழில் உத்தரவாதமளிக்கப்பட்டு, கட்டார் அடையாள அட்டை கிடைக்கப்பெற்றால் மாத்திரமே 1 அல்லது 2 வருட வீசா வழங்கப்படும். இல்லாவிட்டால் நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும்.

வீசா முடிந்த பின்னர் அங்கு தங்கினால் ஒரு நாளைக்கு 900.00 ரூபா வீதம் கட்டணமாக செலுத்த  வேண்டும். தவறும் பட்சத்தில் சிறைசென்று நாடுதிரும்ப வேண்டியேற்படும்.

குறித்த (10) வீசாக்களில் சென்றவர்களுக்கு சிலவேளை உடனடியாக தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். அது சந்தர்ப்பங்களை பொறுத்தது. அவ்வாறு கிடைத்தாலும் அவை நிரந்தரமில்லை. முகவர் நிறுவனம் கட்டாரிலுள்ள வேறு சில நிறுவனங்களை அணுகி, அவர்களுக்கான கட்டார் அடையாள அட்டையை (QID) பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்காக ஒருவருக்கு 135000.00 ரூபா வரை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவார்கள். அவ்வாறு அடையாள அட்டை கிடைக்கப் பெற்றாலும், முகவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கின்ற பகுதிநேர தொழில்களுக்குச் செல்லக் கிடைக்குமே தவிர, நிரந்தர தொழில் அமைய வாய்ப்பில்லை.

இதேபோல, மேலுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களும் கட்டார் பிரஜை ஒருவரது உதவியுடன் தங்களுக்குத் தேவையானவாறு நிறுவனங்களை பதிவு செய்துகொண்டு அதற்குக் கிடைக்கின்ற வீசாக்களை விற்பனை செய்வதுண்டு.

இந்த விபரங்களை பார்க்கின்ற போது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள, நம்பிக்கைக்குரிய முகவர் நிலையங்கள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதே நல்லது.

சிவில் சமூகமும் ஏமாற்றப்படுகின்றது

பொருளாதாரக் கஸ்டத்தில் இருக்கின்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைத்து அவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் சிவில் அமைப்புக்களும் உதவி வருகின்றன. இவ்வாறான போலியாக ஏமாற்றப்பட்டு கட்டாரில் நிர்க்கதியாக இருக்கின்றவர்களுக்கும் அவ்வாறான நிறுவனங்களிடம் பணவுதவி பெற்றுச் சென்றுள்ளமை தெரியவருகின்றது.

உள்ளுரில் இயங்கி வருகின்ற அவ்வாறான ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். ‘ஆம். நாங்கள் தொழிலற்று இருக்கின்றவர்கள் மத்திய கிழக்கு மாத்திரமல்ல, ஏனைய நாடுகளுக்குச் செல்வதற்கு உதவி கேட்டாலும், எங்களால் முடிந்த பணவுதவிகளை செய்து வருகின்றோம். தொழில் நிமித்தம் செல்கிறார்களா என, அவர்களது ஆவணங்களைப் பரீட்சித்த பின்னரே அந்த உதவிகளை வழங்குகின்றோம். கடந்த 6 மாதங்களிற்குள் 96 பேருக்கு உதவியிருக்கின்றோம்.” என்றார் அந்நிறுவனத்தின் தலைவர்.

நான் மேலே கூறியது போல, கட்டாரில் போலியான கம்பனியை ஆரம்பித்து ஆட்களை அனுப்புகின்றவர்களும் இரண்டுவருட தொழில் வீசாவையே வழங்குகின்றார்கள். அதனை ஆராய்ந்து பார்த்து உதவி செய்கின்ற ஒரு வழிமுறை இவ்வாறு பணவுதவி வழங்குகின்ற நிறுவனங்களிடம் இல்லை. முஸம்மில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தானும் அவ்வாறான குறித்த நிறுவனத்திடம் உதவி பெற்றதாகவும், இங்கு வந்திருக்கின்ற இன்னும் பலரும் குறித்த நிறுவனத்திடமிருந்து பணவுதவி பெற்று வந்துள்ளதும் தெரிய வருகின்றது.

தொழில் திறன்

பொதுவாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றவர்கள் தொழில் திறனில் கவனம் செலுத்துவது குறைவு. அங்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றனவோ அவற்றை பயன்படுத்திக் கொள்கின்றனர். சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராகவே அவர்கள் செல்வார்கள். பல மில்லியன்கள் செலவளித்துச் சென்று, வெறும் கையோடு நாடு திரும்பியவர்களும் இருக்கின்றனர். போலி முகவர்களிடம் சிக்கி மில்லியன் கணக்கில் இழந்தவர்களும் இருக்கின்றனர்.

இதே மனநிலையில், மத்திய கிழக்கு நாடுகளை நாடுகின்ற நிலை காணப்படுகின்றமை கவலைக்குரியது.

தொழிற் திறன் காணப்படும்போது (அங்கிகரிக்கப்டட நிறுவனமொன்றில் குறித்த தொழிற்திறனை பெற்றிருத்தல்) மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்வாய்ப்புகளை ஒப்பீட்டு ரீதியாக பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.

இவை போன்ற பல தொழில் வாய்ப்பு தகவல்களை இலங்கை வேலை வாய்ப்புப் பணியக இணையத் தளத்தில் காணலாம். அதில், ஒவ்வொரு துறையிலும் பல நிறுவனங்களும், அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ற வகையிலான வாய்ப்புக்கள், ஊதியங்கள், முகவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரங்கள் போன்ற தகவல்கள் இருக்கின்றன.

மேலே தந்திருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தாதி டிப்ளோமா இருந்தால், இங்கிலாந்தில் சுமார் 7 இலட்சம் ரூபாய் வரை மாத சம்பளமாகப் பெறமுடியும். அதற்குரிய மேலதிக தகவல்களை பார்த்த போது, குறித்த நிறுவனத்தில் பணியாற்ற IELTS தேர்ச்சி தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தது. கனடாவில் இலக்ரீசியனுக்கான அடிப்படை சம்பளமாக 660000.00 பெற முடியும். மேலுள்ளவைகள் ஒருசில மட்டுமே. இதுபோன்ற ஏராளமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

கட்டாரில் தாதிமாருக்கு 4 இலட்சம் ரூபாவும், இலக்ட்ரீசியனுக்கு 225000.00 ரூபாவும் அடிப்படை சம்பளமாகப் பெறலாம். தொழில் திறமையோடு மத்திய கிழக்கு சென்றால் கிடைக்கக் கூடிய ஆரம்ப ஊதியத்தையே மேலே சொல்லியிருக்கின்றேன். அப்பணியில் தொடர்ச்சியாக முன்னோக்கிச் சென்று, பல மடங்குகள் சம்பளம் பெறலாம்.

தொழில் அனுபவத்தின் அவசியம்

மத்திய கிழக்கில் தொழில் பெறச் செல்பவர்கள்  உரிய தகைமையுடன், தொழில் அனுபவம் (Work Experience) போதியளவில் இல்லாமை காரணமாக உரிய தொழிலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிடைக்கின்ற தொழிலை குறைவான சம்பளத்துடன் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அத்தோடு உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் பின்னர் கட்டாரில் தொழில் வாய்ப்புக்கள் ஓரளவு ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

இதனால் தொழில் சந்தையில் போட்டி நிலை அதிகரித்திருக்கின்றது. இதனை எதிரகொள்ள தொழில் தலைமையுடன், அனுபவமும் அவசியமாகின்றது.

என்ன செய்யலாம்?

‘மத்திய கிழக்கில் நல்ல தொழில் வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால், துறைசார் அறிவு அவசியம். ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் இருந்தால், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையமொன்றின் மூலமாக வாருங்கள்” என்று ஆலோசனை கூறுகின்றார் அமான் அக்ரம்.

இன்றைய நெருக்கடியான சூழலில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்கு செல்கின்றவர்களுக்கான முறையான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். முறையற்ற விதத்தில் போலியாக செயற்படும் முகவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், அவ்வாறானவர்கள் குறித்த முறைப்பாடுகளை உரிய நிறுவனங்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

அதேபோல, வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு சில தொழிற் தகைமைகளை வழங்குவதற்கான பொறிமுறைகள் அவசியம். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளின் தொழிற் சந்தையில் பல்வேறுவிதமான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

மத்திய கிழக்கு தொழில் சந்தைக்கு ஏற்ற வகையிலான குறுகிய கால தொழில் தகைமைகளை வளர்த்துகொண்டு செல்வதற்குரிய தொழில்களே மேலே உள்ளன. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு, பெரிய செலவினங்கள் இல்லாது, சட்ட ரீதியாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு செல்வதற்கு நிறைய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. குறுகிய வழியில், நிறைய செலவீனங்களை மேற்கொண்டு, கஸ்டத்திற்கு மேல் கஸ்டத்தை சுமக்காமல் உரிய வழியில் சட்டரீதியான வழிமுறைகளைப் பின்பற்றி, பொருத்தமான தொழிற் தகைமையுடன் கடல் கடந்து செல்வது ஒரு சுபீட்சமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

2021 ஆம் ஆண்டின் தகவல்களின் அடிப்படையில் அக்குறணையிலுள்ள முஸ்லிம் அரச பாடசாலைகளில் மாத்திரம் 607மாணவர்கள் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதியிருக்கின்றனர். இதற்கு மேலதிகமாக சர்வதேச பாடசாலைகள் மற்றும் வெளியூர் பாடசாலைகளில் 200ற்கும் மேற்பட்டவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருப்பர்.

கடந்த சில ஆண்டுகளை ஒப்பீட்டளவில் பார்க்கின்ற போது, இலங்கையில் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் தொகை 2 இலட்சமாகும். அக்குறணையிலுள்ள பாடசாலைகளில் தமிழ், ஆங்கில மொழிப் பாடசாலைகளில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 400 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்றனர். அதேபோல, கணிசமானதொரு தொகையினர் உயர்தரத்தின் பின்னர் கல்வி வாழ்க்கைகக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.

இவ்வாறு உயர் கல்வியைத் தொடர முடியாது போகின்றவர்களுக்கு மூன்றாம் நிலைக் கல்வி, தொழில் நுட்பப் பயிற்சி நெறிகளை வழங்க இலங்கையில் சுமார் 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன. குறித்த கல்லூரிகளில் மாணவர்களது, ஆர்வம், திறமைகளுக்கு ஏற்ப நூற்றுக் கணக்கான துறைகளில் தெரிவுகள் இருக்கின்றன. இதுகுறித்து மாணவர்களை விழிப்புணர்வூட்டி, (National Vocational Qualification – NVQ)  தேசிய தொழில்சார் தகைமைகளுக்கு வழிகாட்டுவதனூடாக தகைமைகளற்று வெளிநாடு சென்று ஏமாறுவதை விட அதிக சம்பளத்தில் பொருத்தமான தொழில்வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

இர்பான் காதர் (விடிவெள்ளி – September 2023)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page

Free Visitor Counters