நாக­ரி­க­மற்ற செயல்­களும், தவிர்க்­கப்­பட வேண்­டிய விபத்­துக்க­ளும்

நாட்டில் கடந்த சில தினங்களில் இடம் பெற்ற வாகன விபத்துகள் பல உயிர்களைப் பலியெடுத்துள்ளன. இக்கோர விபத்துக்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
கடந்த 20 ஆம்திகதி முதல் நேற்று முன்தினம் 24 ஆம் திகதி வரை இடம்பெற்ற நான்கு வாகன விபத்துகளில் மொத்தம் 11 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9 பேர் முஸ்லிம்களாவர்.

காவு கொள்ளப்பட்ட 11 உயிர்களில் நான்கு மாதமேயான ஆண்குழந்தையும் உள்ளடங்கியுள்ளது. இவர்களில் மூவர் பாடசாலை மாணவிகள். ஒருவர் பாடசாலை மாணவர். அடுத்தவர் பேராதனைப்பல்கலைக்கழக கணிதத்துறை சிரேஷ்ட விரியுரையாளராவார்.

வாகன விபத்துக்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றமைக்கு சாரதிகளின் கவனயீனமே முக்கிய காரணமாக அமைகிறது. பொதுப்போக்குவரத்து சேவை பஸ் சாரதிகள் வீதிபோக்குவரத்து விதிமுறைகளை மீறி பஸ்வண்டிகளைச் செலுத்துவதே வாகன விபத்துக்களுக்கு காரணம் என பொதுமக்களால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 20ஆம் திகதி நுவரெலிய நானு ஓயா ரதல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ், வேன், முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்கலா 7 பேர் பலியாகியுள்ளமை அப்பிரதேசத்தை மீளாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலாசென்ற பஸ்வண்டி கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் வேன் மற்றும் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த வீதியில் பஸ் பயணித்தமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்வண்டியில் 41 மாணவர்கள் உட்பட 53 பேர் இருந்துள்ளனர். மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி உயிர்தப்பியுள்ளனர்.

இவ்விபத்தில் 7 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள நிலையில் விபத்தில் பலியானவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கு வைத்தியசாலையில் முக்கியத்துவம் வழங்கப்படாது பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்தில் பலியான 5 முஸ்லிம்களின் ஜனாஸா இறுதிக்கிரியைகளுக்கும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த 21 ஆம் திகதி குருநாகல் பொல்பிடிகமயில் இடம் பெற்ற பஸ் வண்டி– ஸ்கூட்டர் விபத்தில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட கணித விரிவுரையாளர் ஜுமான் பலியாகியுள்ளார். இவரது இழப்பு கணிதத்துறைக்கு பாரிய இழப்பு என பேராதனை பல்கலைக்கழக பீடாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துக்குக் காரணம் பஸ்வண்டி ஒன்றேயாகும்.

நேற்று முன்தினம் 24 ஆம் திகதி புணானை பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ்வண்டி வேன் விபத்தில் காத்தான்குடி வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரின் 4 மாதங்களேயான குழந்தையும், அவரது 74 வயதான மாமாவும் பலியாகியுள்ளனர். வேனில் பயணித்த மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அதே தினம் அநுராதபுரம் கம்பிரிகஸ்வெவயைச் சேர்ந்த 6 வயதான மாணவி பாடசாலையிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக உயிர் துறந்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணம் பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனரின் கவனயீனமேயாகும் என்பதை அனுமானிக்கலாம். பஸ் பயணிகளை இறக்கிவிடுவதில் சாரதிகளும் நடத்துனர்களும் காட்டும் அவசரமே இவ்வாறான விபத்துக்களுக்குக் காரணமாகும்.

குறிப்பிட்ட நான்கு வாகன விபத்துக்களும் பஸ் வண்டிகளுடன் தொடர்புப்பட்டவை என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறான நிலையில் பொதுப்போக்குவரத்துச் சேவைக்குப் பொறுப்பான அமைச்சர் இது விடயத்தில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

அதேபோன்று இங்கு கவலைக்குரிய மற்றொரு விடயம் என்னவென்றால், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவியளிப்பதையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதையும் விடுத்து விபத்தை வீடியோ பதிவு செய்வதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுவதாகும். அத்துடன் இரத்த வெள்ளத்தில் காட்சியளிக்கும் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் அவர்களது அலறல்களையும் கூட இவர்கள் ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இவை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை கடுமையாகப் பாதிக்கின்றன. சமகால சமூகம் இந்தளவுக்கு ஈவிரக்கமற்று செயற்படுவதை நினைக்கும்போது கவலை நெஞ்சை அடைக்கிறது. இந்த அநாகரிகமான செயற்பாட்டை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேற்படி விபத்துச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களன் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் மேலான சுவனம் கிடைக்கவும் பிரார்த்திப்போமாக.

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

You cannot copy content of this page

Free Visitor Counters