நெஞ்சு வலியா? பதற்றமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்: மருத்துவம் சொல்வது என்ன?

லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. யாரோ சொல்லக் கேட்டது, கூகுளில் தேடியது என எல்லாவற்றையும் போட்டு ஒட்டுமொத்தமாகக் குழப்பி, அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம்; மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று விளக்கமாகச் சொல்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் கார்த்திக்.

“அடிப்படையில், வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம். நெஞ்சு வலி என்று வந்தால், முதலில் நமக்கு நாமே சில கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* வலி, துல்லியமாக எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.

* வலி மட்டுமன்றி, வேறு என்னென்ன உணர்வுகள் மற்றும் அறிகுறிகள் ஏற்படுகின்றன.

வலி ஏற்படும் இடங்கள்

மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அப்படியல்ல. குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசௌகரியத்தையோ ஏற்படுத்தும்.

உணர்வுகள் மற்றும் அறிகுறிகள்:

மாரடைப்பின்போது நெஞ்சுப் பகுதியில் அதிக அழுத்தத்துடனும் இறுக்கமாகவும், வலி அதிகமாகவும், பாரமாகவும் இருக்கும். தொண்டைப்பகுதியில் அழுத்தம் ஏற்படும். வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

மாரடைப்பின்போது மூச்சுத்திணறல் மற்றும் தோள்பட்டையில் இறுக்கமான உணர்வு ஏற்படும். உள்ளுக்குள் இருந்து ஏதோவொன்று குடைவதுபோல இருக்கும். மேலும், கழுத்தின் தாடைப் பகுதியிலும் வலி உணர்வு ஏற்படும். பெரும்பாலும், மார்பின் நடுப்பகுதியில்தான் வலி ஏற்படும். அப்போது நெஞ்சு எரிவது போன்று இருக்கும். ஆனாலும், நெஞ்செரிச்சலின் முக்கிய அறிகுறியான புளித்த ஏப்பம் இதில் ஏற்படாது.

கழுத்தின் தாடை ஆரம்பித்து, நெஞ்சுக் குழி வரை எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படும். ஆனால், அளவுக்கு மீறிய வியர்வை வெளிப்படும். மாடிப்படியில் ஏறுவது, நடப்பதுபோன்ற நேரங்களில் வலி அதிகமாகும். ஏறத்தாழ நெஞ்சுப் பகுதியில் அம்மிக்கல்லைத் தூக்கிவைத்தது போன்றோ, யானை மிதிப்பது போன்றோ வலி உணர்வு ஏற்படும். மாரடைப்பின்போது மட்டுமே மிகவும் ஆழமான நெஞ்சுவலி ஏற்படும். அத்துடன் முதுகுத் தண்டுவடத்தில் உடலின் உள்ளே இருந்து குத்துவது அல்லது இழுப்பதுபோன்ற ஆழமான வலியும் சிலருக்கு ஏற்படலாம். பெரும்பாலும் நெஞ்சுவலியுடன் சேர்த்து வாந்தி, தலைச்சுற்றல் இருக்கும்.

இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். அடிப்படையில் நெஞ்சு வலி என்பது நெஞ்செரிச்சல், மாரடைப்பு, வாய்வுத் தொல்லைக்கான அறிகுறிளாக இல்லாமல், வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உதாரணமாக மூச்சுக் குழாயில் அமிலத்தன்மை அதிகமாவது, ஹெர்பிஸ் அக்கி, தசைப்பிடிப்பு, மார்பின் உட்பகுதியிலுள்ள எலும்பில் ஏற்படும் பாதிப்புகள் (Costochondritis), நுரையீரலின் மேற்பரப்பு பாதிக்கப்பட்டிருப்பது போன்றவை. சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும்.

இப்படியாக நெஞ்சு வலிக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, வலி ஏற்பட்டதும் அது மாரடைப்பாக இருக்கும் என்று பயப்பட வேண்டாம். அதேநேரம், இந்த வலிகளை உதாசீனப்படுத்தவும் கூடாது. எதுவாக இருந்தாலும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று இ.சி.ஜி செய்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அத்துடன் அனைவருமே வருடத்துக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவு, ரத்தப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, இதயச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்துகொண்டு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

நெஞ்சுவலியை அலட்சியம் செய்யக் கூடாதவர்கள்…

* பல் பிடுங்கும்போது ஈறுகளில் தொற்று அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டால், இதய வால்வுகள் பாதிக்கப்படலாம். இது பின்னாளில் இதயத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, பல் பிரச்னை இருப்பவர்கள், இதயப் பிரச்னை உள்ளவர்கள் பற்களின் நலனிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* மாரடைப்பின்போது, சிலருக்கு இதயத்துடிப்பு சீரற்று இருக்கும். குறைந்த ரத்தஅழுத்தம் இருந்தாலும் இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படலாம் என்பதால், ரத்த அழுத்தத்துக்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ளவும்.

* சர்க்கரைநோய் போன்ற வாழ்வியல் நோய் இருப்பவர்களுக்கு, அதன் காரணமாக மாரடைப்பின்போது வலி உணர்வு ஏற்படாமல் இருக்கும். இல்லையென்றால், மிகவும் குறைந்த வலி உணர்வே ஏற்பட்டிருக்கும். அடிப்படையில், சர்க்கரை நோயாளிகள் எந்த வலியையும் தட்டிக்கழிக்கக் கூடாது. உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.

* மரபு காரணமாகவும் இதயப் பிரச்னைகள் ஏற்படும். அப்படியானவர்கள், முதல் நிலையிலேயே பரிசோதனை செய்வதன்மூலம், அப்போதே பிரச்னையை சரிசெய்யலாம்.

* புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இதயப் பிரச்னை ஏற்படலாம் என்பதால் அவர்கள் நெஞ்சுவலியை அலட்சியப்படுத்தக் கூடாது” என்கிறார் கார்த்திக்.

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page

Free Visitor Counters