சிந்தனா ரீதியான போராட்டம் என்பது தவறான கருத்து – M.A.M மன்சூர் (நளீமி)

சிந்தன ஜிஹாதய வரதி மதயக் எனும் சிங்கள மொழி ஆக்கத்தின் தலைப்பு , ‘‘சிந்தனா ரீதியான ஜிஹாத் என்பது தவறாகப் புரியப்பட்டுள்ளது” என மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ‘‘சிந்தனா ரீதியான போராட்டம் என்பது தவறான கருத்து” என்றமைவதே பொருத்தம் எனப் பலராலும் சுட்டிக் கட்டப்பட்டதற்கு இணங்க தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

அண்மையில் கலகொட அத்தே ஞர்னசார தேரர் நடத்திய ஊடக மாநாட்டில் ஸஹ்ரானைப் போல இன்னுமொருவர் தீவிர சிந்தனை ஜிஹாத் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவருடைய பெயர் உஸ்தாத் மன்சூர் எனவும், அவர் பேருவலையில் JNIC (Jamia Naleemia Islamic Institute) எனும் பெயரில் நிறுவனமொன்றை நடத்திச் செல்வதாகவும் இதனூடாக அவர் சிந்தனை ஜிஹாதைப் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் நாங்கள் தேடிப் பார்த்தபோது உஸ்தாத் மன்சூர் என்றொருவர் இருக்கிறார் என்றாலும் அவர் ஜேஎன்ஐசி நிறுவனத்தை நடத்தவில்லை எனவும் தெரியவந்தது. பேருவலையில் அப்படியொரு நிறுவனம் இருக்கிறது, அதில் அவர் கல்வி கற்றிருக்கிறார் என்பதும் அறியக் கிடைத்தது.

இதுதொடர்பில் தெளிவைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் உஸ்தாத் மன்சூரைச் சந்தித்தோம். (இந்தக் கலந்துரையாடல் மிஷ்காத் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் நடத்தப்பட்டது)

நீங்கள் யார், உங்களைப் பற்றி அறிமுகப்படுத்த முடியுமா ?

நான் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர். 1959 இல் அக்குரணையில் பிறந்தேன். அக்குரணை மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று சாதாரண தரத்தின் பின்னர் நளீமியாவில் கல்வியைத் தொடர அனுமதி பெற்றேன். அங்கு கல்வியை நிறைவு செய்து பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நளீமியாவில் இருபது வருடங்கள் வரை சேவையாற்றினேன். அங்கு கல்வித்துறைப் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளேன்.

அங்கிருந்து வெளியேறியதன் பின்னர் அக்குரணையிலுள்ள அல்குர்ஆன் திறந்த கல்லூரியை நிறுவினேன். தற்போது இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் மிஷ்காத் ஆய்வு மையத்தை ஆரம்பித்திருக்கிறேன்.

நளீமியா கல்வி நிறுவனம் எவ்வாறானது ?

நளீமியா 1973 இல் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு இருபகுதிகள் இருக்கின்றன. இஸ்லாமியக் கல்வி ஒரு பிரிவாகவும் நாட்டின் கலைத்திட்டத்திலுள்ள கல்வி ஒரு பிரிவாகவும் உள்ளது. இங்கு கலைத்திட்டத்திலுள்ள கல்வி போதிக்கப்பட்டாலும் அரச பல்கலைக்கழகப் பரீட்சைக்கே மாணவர்கள் தோற்றுகிறார்கள்.

நளீமியா உங்களது நிறுவனமா ?

இல்லை. நளீம் ஹாஜியார் எனும் கொடைவள்ளலினால் இது ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்படும் போது நான் சாதாரண தர மாணவன்.

இந்த நிறுவனத்துடன் தற்போது உங்களுக்குத் தொடர்பிருக்கிறதா ?

இந்த வருடம் பெப்ரவரி முதல் வெளிவாரி விரிவுரையாளராக வாரத்தில் ஒரு முறை அங்கு செல்கிறேன்.

நளீமியாவில் இஹ்வானுல் முஸ்லிமீன் மதம் போதிக்கப்படுவதாக ஞானசார தேரர் சுட்டிக் காட்டுகிறாரே ?

இல்லை. அங்குள்ள பாடத்திட்டத்தை எடுத்துப் பார்த்தால் அவ்வாறான எதுவும் அங்கு அங்கு கற்பிக்கப்படுவதில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஸஹ்ரான் இஹ்வானுல் முஸ்லிமீன் சிந்தனையைப் பின்பற்றுபவர் என ஞானசார தேரர் ஊடக மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். இது உண்மையா ?

இல்லையில்லை. அவர் தேசிய தௌஹீத் ஜமாத் சிந்தனையையே பின்பற்றினார். ஸஹ்ரானுடைய உரைகளிலிருந்து அதனைத் தெரிந்து கொள்ள முடியும். வஹாபிஸம் என்று சொல்வது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொள்கையைத் தான்.

அல்குர்ஆன் திறந்த கல்லூரி என்பது என்ன ?

நான் அதனை ஆரம்பிக்கும் போது திறந்த பல்கலைக்கழகமொன்றாக நடத்திச் செல்லவே நாடினேன். ஆனாலும் அது சாத்தியமாகவில்லை. பின்னர் அல்குர்ஆனை வெளிப்படையாகக் கற்பதற்கான இடமொன்று நிறுவப்பட வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். இதற்காக நாங்கள் உயர்தரம் கற்ற, அல்லது அதற்கு மேல் கல்வி கற்ற சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்களை தெரிவு செய்தோம்.

இங்கு கல்வி கற்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா ?

கட்டணம் பெற்று நாங்கள் பாடநெறிகளை நடத்திய போதும் அது சாத்தியமாகவில்லை. அதனால் தற்போது தங்களால் முடிந்த அளவைச் செலுத்தி கற்கை நெறியைத் தொடர அனுமதித்துள்ளோம்.

மிஷ்காத் ஆய்வு மையத்தில் என்ன நடக்கிறது ?

இங்கு குர்ஆன் தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களுடன் உறவாடுதல் தொடர்பான விவகாரங்கள். இலங்கைக்குப் பொருத்தமான இஸ்லாமிய சிந்தனை தொடர்பில் நூல்களை வெளியிடுவதும் மிஷ்காத் ஊடாக நடைபெறுகிறது. அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா, அல்குர்ஆனின் விளக்கவுரையின் முதலாம் இரண்டாம் பாகங்கள் போன்ற நூல்கள் மிஷ்காத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு மத்திய கிழக்கிலிருந்தோ வேறு நாடுகளில் இருந்தோ நிதி கிடைக்கின்றதா ?

இல்லை. எமக்கு எந்த வெளிநாட்டில் இருந்தும் நிதி கிடைப்பதில்லை. முன்னர் சொன்னது போல எங்களுடன் தொடர்புடைய சிலரிடமிருந்து கிடைக்கும் நிதியிலேயே நாங்கள் இதனை நடத்திச் செல்கிறோம்.

அப்படியானால் உங்களது நிறுவனத்தின் கணக்குவழக்கு தொடர்பில் தேவையான ஆவணங்களையும் தகவல்களையும் வழங்குவதற்கு நீங்கள் தயாரா ?

நிச்சயமாக. ஸஹ்ரானுடைய குண்டுத் தாக்குதலின் பின்னர் சிஐடியினர் இங்கு வந்து அனைத்தையும் சோதனையில் ஈடுபடுத்தினார்கள். எமது ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள். இன்றுவரை இது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சினையும் வந்தது கிடையாது.

இஸ்லாத்தில் பல பிரிவுகளையும் பல சிந்தனை முகாம்களையும் அவதானிக்கிறோம். நீங்கள் இதில் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் ?

நீங்கள் சொல்வதைப் போல முஸ்லிம் சமூகத்தை இருபகுதிகளாக வகுக்க முடியும். ஒன்று பிரிவுகள், அடுத்தது கருத்து வேறுபாடுகள். இந்த இரண்டு வகைகளிலும் நாங்கள் எந்தவகையையும் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் இலங்கைக்குப் பொருத்தமான விதத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு எப்படி அமைய வேண்டும் என்பதனையே நாங்கள் போதிக்கிறோம்.

இலங்கைக்குப் பொருத்தமான விதத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு என்று சொல்கிறீர்கள். அது என்னவென்று விளக்க முடியுமா ?

சமூகமாக வாழும் போது நாங்கள் எப்படி முஸ்லிமல்லாத சமூகங்களுடன் உறவாடுவது, அவர்களுடன் கலந்து வாழும் போது எமது மத விவகாரங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பன தெளிவுபடுத்தப்பட வேண்டும். எங்களது மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்றொரு கடமை இருக்கிறது. (மாடுகளை) அறுத்துப் பலியிடுதல் என்பது. அதனை எப்படி இலங்கைக்குப் பொருத்தமான விதத்தில் செயற்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மதரீதியான தீர்ப்பினை வழங்கியிருக்கிறோம். விரும்பியவர்கள் மாடறுத்துப் பங்கிடலாம். விரும்பியவர்கள் அதற்குரிய தொகையை தானம் செய்யலாம். உண்மையில் அதற்குரிய தொகையை வழங்கினால் பெரும்பான்மைச் சமூகத்தின் மனம் புண்படும்படியான பிரச்சினைகள் எழாது.

அதுபோல கறுப்பு ஆடை அணிவது, முகத்தை மூடுவது இலங்கைக்குப் பொருத்தமானதல்ல என்று நாங்கள் கூறி வருகிறோம். இலங்கைச் சமூகத்துக்குப் பொருத்தமான வகையில் இஸ்லாம் சொல்பவற்றை நாங்கள் முன்வைத்து வருகிறோம்.

பொதுவாக ஆடையென்பது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இஸ்லாத்துக்கென தனியான கலாச்சாரமொன்று கிடையாது. இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அணிந்த ஆடை அரபு நாட்டுக்கு உரித்தான அந்த நாட்டு அடையாளத்தைக் கொண்டது. அதாவது நீண்ட ஜுப்பாவையும் தாடியையும் வெளித்தோற்றத்தில் வெளிக்காட்டுவதனை (முஸ்லிம்களுக்கான) ஆடை என்று நாங்கள் சொல்வதில்லை. இலங்கைக்குப் பொருத்தமான ஆடையை அணிய வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம்.

உதாரணமாக பெண்கள் மணிக்கட்டையும் முகத்தையும் தவிர உடலை முழுமையாக மறைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது. அது எப்படி மறைக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வரையறுக்கவில்லை. அதனை தமது நாட்டுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும்.

ஸஹ்ரானுடையது போன்ற போதனைகளை நீங்கள் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. நீங்கள் ஸஹ்ரானுடைய போதனைகளுக்கு எதிராக ஏதாவது செய்திருக்கிறீர்களா ?

ஸஹரானுடைய போதனைகளுக்கு எதிராக நாங்கள் பல விடயங்களை முன்னெடுத்திருக்கிறோம். அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா எனும் நூல் அதில் ஒன்று.

நீங்கள் சிந்தனா ரீதியான ஜிஹாதில் ஈடுபடுவதாக அண்மையில் ஞானசார தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் என்ன சொல்கிறீர்கள் ?

அவர் சிந்தனாரீதியான ஜிஹாத் என்பதனூடாக என்ன சொல்ல வருகிறார் என்பது எமக்குப் புரியவில்லை. உதாரணமாக முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைத் திணிப்பதாக இருந்தால் அதனையே அவர் நாடியிருந்தால் அது முற்றிலும் தவறான கருத்து. சிந்தனாரீதியான ஜிஹாத் என்பதனூடாக நாங்கள் நாடுவது, சிங்கள சமூகத்துடன் மோதலுக்குச் செல்வதனையோ அவர்களுக்கு இஸ்லாத்தைப் பலவந்தமாகத் திணிப்பதையோ அல்ல. முஸ்லிமல்லாத சமூகங்களுடன் மோதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது எப்படி என்பதனைத் தான் நாங்கள் இதனூடாக நாடுகிறோம்.

இப்படி நடந்து கொள்ளாமல் எங்களுடன் கலந்து பேசி எமது தவறுகளைச் சுட்டிக் காட்டி முன்னே செல்ல முடியுமென்றிருந்தால் அது தான் சிறந்த வழி என்றே நாங்கள் கருதுகிறோம்.

அதேபோல நளீமிய்யாவுக்குச் சென்று அங்குள்ள பாடத்திட்டங்களை அவதானித்து அதில் ஏதும் பிழைகள் இருந்தால் அதனை அவர் (ஞானசார தேரர்) சுட்டிக் காட்ட முடியும். சமூகங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்காமல் கலந்துரையாடல்கள் மூலமாக முன்னோக்கிச் செல்ல முடியுமென்றிருந்தால் அதுவே சிறந்த வழி என நான் நினைக்கிறேன்.

ரஸிக குணவர்தன – ராவய

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters