காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

வரிசைகளில்‌ நிற்பதே இலங்கையரின்‌ விதி என்றாகி இருக்கின்றது. எரிபொருள்‌, எரிவாயு, அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ தொட்டு, பலாக்காய்‌ துண்டு வரை எல்லாவற்றுக்கும்‌ நாட்கணக்காக காக்க வேண்டியிருக்கின்றது.

நீண்ட வரிசைகளில்‌ நின்று, பலர்‌ மரணித்து விட்டனர்‌; ஏகப்பட்டோர்‌ மயங்கி விழுந்துள்ளனர்‌. நாட்டு மக்கள்‌ எல்லோரும்‌ மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்‌. கீழ்‌ நடுத்தர மற்றும்‌ ஏழ்மைக்‌ குடும்பங்களில்‌ வறுமை குடியேறி இருக்கின்றது. இரண்டு வேளை நிம்மதியாகச்‌ சாப்பிடுவது கூட, கணிசமான மக்களுக்கு கனவாகி இருக்கின்றது.

இந்தப்‌ பின்னணியில்‌, ஜனாதிபதி, பிரதமர்‌ உள்ளிட்ட அரசியல்‌ தலைவர்கள்‌ அனைவரும்‌, மக்களின்‌ நெருக்கடிக்கான குறுங்கால தீர்வை முன்வைக்கவில்லை. இன்னும்‌ காரணம்‌ சொல்லிக்‌ கொண்டுதான்‌ இருக்கின்றனர்‌. உருப்படியாக எதுவும்‌ நடந்ததாகத்‌ தெறியவில்லை.

எனவே, மக்களின்‌ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்‌ அரசாங்கமும்‌ அரச இயந்திரமும்‌, தெளிவாகத்‌ தோல்வி கண்டுள்ளன. நிலைமை இன்னும்‌ மாறவில்லை. அதாவது, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர்‌ பதவியில்‌ இருந்து விலகியபோது இருந்த நிலைமைகளுக்கும்‌, ரணில்‌ விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான நிலைமைகளுக்கும்‌ வித்தியாசங்கள்‌ இல்லை.

மூன்றில்‌ இரண்டு பெரும்பான்மை பலத்தைத்‌ தந்தால்‌, நாட்டை வெற்றிகரமாக ஆட்சி செய்வோம்‌ என்றும்‌ பசில்‌ வந்தால்‌ நாட்டைப்‌ புரட்டிப்‌ போடுவார்‌ என்றும்‌, 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றினால்‌ மக்களுக்கான ஆட்சியை இன்னும்‌ சிறப்பாகச்‌ செய்யலாம்‌ என்றும்‌ ராஜபக்ஷ குடும்பம்‌ சொன்னது.

அவையெல்லாம்‌ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட போதும்‌, அவர்கள்‌ வெற்றிகரமாக ஆட்சிசெய்து காட்டவில்லை. அவர்கள்‌ சுருட்டிக்‌ கொண்டதுதான்‌ மிச்சம்‌.

பிறகு ரணில்‌ விக்கிரமசிங்க அல்லது பொருத்தமான வேறு யாராவது பிரதமராக வந்தால்‌ எல்லாவற்றையும்‌ ஒரு சில நாள்களுக்குள்‌ தலைகீழாக மாற்றி விடுவார்‌ என்று சொன்னார்கள்‌. ஆனால்‌, அதுவும்‌ நடக்கவில்லை.

புதிய பிரதமர்‌, மாய ஜாலத்தால்‌ இந்த நெருக்கடிகளை தீர்த்துவிட முடியாது. ஏனெனில்‌, ராஜபக்ஷர்கள்‌ அப்படியான ஒரு ‘பொறிக்குள்‌; இலங்கையை சிக்க வைத்துவிட்டுத்தான்‌, ரணிலின்‌ தலையில்‌ நாட்டை கட்டியிருக்கின்றார்கள்‌.

ரணிலின்‌ வருகைக்குப்‌ பிறகு, இலங்கை ரூபாயின்‌ பெறுமதி ஒரு துளி முன்னேற்றம்‌ கண்டிருந்தாலும்‌, அது சாதாரண மக்களுக்கு அவ்வளவு முக்கியமான விடயமல்ல. ஏனெனில்‌, பொருட்களின்‌ விலைகள்‌ அதிகறித்துள்ளன; தட்டுப்பாடு தொடர்கின்றது; வரிசைகள்‌ நீள்கின்றன.

எப்போது எரிபொருள்‌ பவுசர்‌ வரும்‌ என்பது கூட நிச்சயிக்கப்படாத நிலையில்‌, பல எரிபொருள்‌ நிரப்பு நிலையங்களைச்‌ சுற்றி, பல கிலோ மீற்றர்‌ தூரத்துக்கு வாகனங்கள்‌, பல நாள்களாகத்‌ தரித்து நிற்கின்றன.

தமது முக்கிய வேலைகளை எல்லாம்‌ ஒருபுறம்‌ வைத்துவிட்டு, எரிபொருளுக்காக தவம்‌ கிடக்கின்றார்கள்‌. வாழ்வதற்கான இந்தப்‌ போராட்டத்தில்‌, வரிசையிலேயே இறந்து போகின்ற அவலங்களும்‌ ஆசியாவின்‌ ஆச்சரியமாக’த்‌ தொடர்ந்து கொண்டுதான்‌ இருக்கின்றன.

எரிபொருளைப்‌ போலவே எரிவாயு விநியோகமும்‌ பல இடங்களில்‌ நேர்மையான முறையில்‌ இடம்பெறுவதில்லை. முகவர்கள்‌ அற்பத்தனமாக நடந்து கொள்கின்றார்கள்‌. அதுபோலவே, எரிகின்ற வீட்டில்‌ பிடுங்கியது இலாபம்‌” என்ற தோரணையிலேயே அநேகமான வியாபாரிகள்‌ செயற்படுவதையும்‌ காண முடிகின்றது. உண்மையிலேயே, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியும்‌ அவர்கள்‌ ஊழல்‌ செய்து நாட்டைக்‌ கொள்ளையடித்ததும்‌, சாதாரண மக்களைப்‌ பொறுத்தமட்டில்‌, ஒரு கட்டம்‌ வரைக்கும்‌ ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

ஆனால்‌, அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலைகள்‌ அதிகரிப்பும்‌ கடுமையான தட்டுப்பாடுகளும்‌ வரிசைகளும்‌ தோற்றம்‌ பெற்று, மக்களை வருத்துகின்றன. மக்களின்‌ வருமானம்‌ அதிகரிக்காத சூழ்நிலையிலேயே இதுவெல்லாம்‌ நடந்து வருகின்றன.

எனவே, நாட்டின்‌ இந்த நெருக்கடிக்கு, முழுமுதல்‌ காரணம்‌ ராஜபக்ஷர்களின்‌ ஆட்சி என உணரத்‌ தொடங்கிய பிறகுதான்‌, மக்கள்‌ வீதிக்கு இறங்கினர்‌. *கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்ஷர்கள்‌ அனைவரும்‌ வீட்டுக்குச்‌ செல்ல வேண்டும்‌’ என்று கோரி நின்றனர்‌; “சேர்‌ பெயில்‌’ என்றனர்‌.

ஆயினும்‌, புதிய பிரதமர்‌ வந்த பிறகும்‌ மக்களின்‌ வாழ்நிலையில்‌ முன்னேற்றம்‌ ஏற்படவில்லை. வரிசைகள்‌ அதிகரித்துள்ளன. பொருளாதார சிக்கலும்‌ வாழ்க்கைச்‌ சுமையும்‌ அதிகரித்துள்ளன. வறிசைகளில்‌ பலியாவோர்‌ தவிர விரக்தியடைந்து தற்கொலையை நாடுவோரின்‌ தொகையும்‌ அதிகரித்துள்ளது.

இந்நிலையில்‌, நாட்டில்‌ டொலர்‌ நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றால்‌, முறையான பொருளாதார திட்டமிடல்‌ இல்லாததே அதற்குக்‌ காரணமா? டொலர்‌ கபளீகரம்‌ செய்யப்பட்டதா? அல்லது, இரண்டும்‌ காரணமா என்பதை அதிகாரத்தில்‌ உள்ளவர்கள்‌ மட்டுமன்றி, உயர்‌ அதிகாரிகளும்‌ அறிவார்கள்‌. இது மக்களுக்கும்‌ தெரிந்த இரகசியம்தான்‌.

மக்கள்‌ அதிகாரத்தையோ ஆட்சியில்‌ பங்கையோ கேட்கவில்லை. அவர்கள்‌ இன்று வரையும்‌, பொருட்கள்‌ எல்லாவற்றுக்கும்‌ பணம்‌ செலுத்தியே கொள்வனவு செய்கின்றனர்‌. கடனுக்கு வாங்குவதற்கோ கொள்ளையடிப்பதற்கோ, அவர்கள்‌ வரிசைகளில்‌ நிற்கவில்லை.

ஆனால்‌, டொலர்‌ நெருக்கடி இன்னும்‌ தொடர்கின்றது. அதாவது, ரூபாயை டொலராக மாற்றுவதற்கு, அவசியமான ஏனைய பொருளாதார குறிகாட்டிகளில்‌ இன்னும்‌ முன்னேற்றம்‌ ஏற்படவில்லை. இதில்‌ ஒரு நியாயமுள்ளது. ஆனால்‌, நாட்டுக்குள்‌ செலவழிக்க ரூபாயும்‌ இல்லை என்று கூறுவதன்‌ நியாயம்தான்‌ என்ன?

ஒரு ஜனாதிபதியை, பிரதமரை, எம்‌. பிக்களை மக்கள்‌ தெரிவு செய்கின்றார்கள்‌ என்றால்‌, அது அவர்கள்‌ தம்மை சரியாக ஆட்சி செய்ய வேண்டும்‌ என்ற நம்பிக்கையில்தான்‌. இது அவர்களது கடமை ஆகும்‌. அரசாங்கம்‌, மக்களுக்கு புண்ணியத்தில்‌ சேவையாற்றவில்லை என்பதை விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌.

இவ்வாறிருக்க, ஊடகத்தில்‌ தோன்றி, பிரச்சினைகளுக்கான காரணத்தைச்‌ சொல்வதும்‌, இன்னும்‌ சில வாரங்களுக்கு சிரமப்பட வேண்டியிருக்கும்‌ என்று எச்சரிக்கை செய்வதும்‌ நல்ல ஆட்சியாளர்களின்‌ பண்பல்ல.

ஆனால்‌, பிரதமர்‌ ரணில்‌ விக்கிரமசிங்க அடிக்கடி அப்படியான உரைகளையே ஆற்றிக்‌ கொண்டி ருக்கின்றார்‌. ஜனாதிபதி கோட்டாபயவும்‌ தம்‌ பங்கிற்கு வந்து கதைத்து விட்டுப்‌ போகின்றார்‌. அமைச்சர்களும்‌ முன்னுக்குப்‌ பின்‌ முரணாக கதைவிடுகின்றனர்‌. இதன்மூலம்‌ இரண்டு விடயங்கள்‌ தெளிவாகின்றன.

ஒன்று, மிகக்‌ குறுகிய காலத்தில்‌ அவர்களால்‌ இந்தப்‌ பிரச்சினையைத்‌ தீர்க்க முடியாது என்பதை, அவர்கள்‌ மக்களுக்கு குறிப்பால்‌ உணர்த்த முற்படுகின்றார்கள்‌. இரண்டாவது, ‘நாங்கள்‌ ஏற்கெனவே எச்சரிக்கை செய்தோம்தானே’ என்று சொல்லி, பொறுப்புக்‌ கூறலில்‌ இருந்து நழுவிவிட இப்போதே ஏற்பாடு செய்கின்றார்கள்‌. இ.து மறுபுறத்தில்‌, மக்களுக்கு எதிர்காலம்‌ பற்றிய அச்சத்தையும்‌ மன அழுத்தத்தையும்‌ ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, மிகப்‌ பொறுப்புடன்‌ செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில்‌ ஆட்சியாளர்கள்‌, அரசியல்வாதிகள்‌ முதற்கொண்டு அதிகாரிகள்‌ வரை, ஆளுக்காள்‌ ‘பந்துகளை கைமாற்றி விட்டு” பொறுப்பில்‌ இருந்து நமுவ முற்படுவதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.

“நாட்டின்‌ இந்த நிலைமைக்கு, முன்னைய அரசாங்கமே காரணம்‌” என்று ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில்‌ கூறப்பட்ட போது, அதனை ஆட்சேபித்த ஐ.தே.க தலைவர்‌ ரணில்‌ விக்கிரமசிங்க, இப்போது பிரதமராக பதவியேற்ற பின்னர்‌, மேற்குறிப்பிட்ட கருத்துடன்‌ உடன்படுவதாகத்‌ தெரிகின்றது.

ராஜபக்ஷர்களின்‌ திட்டமிடலற்ற, குறுகிய மனப்பாங்குடைய ஆளுகையே நாட்டின்‌ இந்த இழிநிலைக்கு காரணம்‌ என்பது எல்லோருக்கும்‌ தெரியும்‌. அதில்‌ பசில்‌ ராஜபக்ஷவும்‌ முக்கியமானவர்‌. அதனை மொட்டுக்காரர்களே கூறி வருகின்றார்கள்‌.

ஆனால்‌, மக்கள்‌ இத்தனை துக்கத்தில்‌ இருக்கின்ற போது, பசில்‌ எந்தவித பொறுப்புக்கூறலும்‌ இன்றி, சிரித்துக்‌ கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததை கண்டோம்‌.

அதுமட்டுமன்றி. “எங்களுக்கு இந்த ஆணையை தந்தமைக்காக, மக்களும்‌ பொறுப்புக்கூற வேண்டும்‌” என்று மிகவும்‌ அபத்தமான கருத்தொன்றையும்‌ அவர்‌ சொன்னார்‌. அதாவது, அந்த 69 இலட்சம்‌ பேர்தான்‌ இந்த நிலைமைக்குக்‌ காரணம்‌ எனச்‌ சொல்லாமல்‌ கூறிவிட்டுப்‌ போனார்‌.

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு, அவர்‌ மீதான விமர்சனங்கள்‌ குறைந்து விட்டன. பசிலும்‌ பொறுப்புக்‌ கூறப்போவதில்லை. ரணில்‌ பிரதமராக வந்த பிறகு, ஜனாதிபதி கோட்டாபய மீதான எதிர்ப்பலையும்‌ சில சர்வதேச நாடுகளின்‌ , துணைகொண்டு அடங்கிப்‌ போயுள்ளது.

இன்னும்‌ சில வருடங்களில்‌, ‘ரணில்தான்‌ காரணம்‌’ என்று அவர்கள்‌ சொன்னாலும்‌ ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது விக்கிரமசிங்க, இன்னுமொரு பெருந்தேசிய தலைவர்‌ மீது பழியைப்‌ போட்டு விட்டுப்‌ போய்விடுவார்‌. மக்கள்தான்‌ மாட்டிக்‌ கொள்வார்கள்‌.

இதைத்தான்‌ பல அரச உயர்‌ அதிகாரிகளும்‌ தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றார்கள்‌. மத்திய வங்கி ஆளுநர்கள்‌, லிற்ரோ கேஸ்‌ தலைவர்கள்‌, மின்சார சபை தலைவர்‌ போன்றோர்‌ அண்மைக்காலத்தில்‌ வெளியிட்ட கருத்துகள்‌ இதற்கு சில பதச்சோறுகளாகும்‌. “நான்‌ பொறுப்பில்லை; அவர்தான்‌ பொறுப்பு” என்று சொல்கின்ற இதுபோன்ற அதிகாரிகளும்‌ ஒரே குட்டையில்‌ ஊறிய மட்டைகளே.

ஆட்சியாளர்கள்‌ ஒன்றை விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. நாட்டின்‌ நெருக்கடி நிலைமைக்கு இவைதான்‌ காரணம்‌ என ஐனாதிபதி, பிரதமர்‌ உள்ளிட்ட அரசியல்‌ தலைவர்கள்‌ சுட்டிக்காட்டுகின்ற விடயங்களை மட்டுமன்றி, நீங்கள்‌ வெளிப்படையாகப்‌ பேசாத காரணிகளையும்‌ மக்கள்‌ அறிந்து வைத்துள்ளார்கள்‌.

எனவே, மக்களுக்கு இன்று தேவை, வறரிசைகளுக்கும்‌ விலையேற்றங்களுக்கும்‌ ஒரு முடிவாகும்‌. அன்றாட வாழ்வியல்‌ நெருக்கடிக்கு விரைவான தீர்வாகும்‌. அதைவிடுத்து, வானிலை அறிக்கை போன்ற அச்சமூட்டும்‌ எதிர்வுகூறல்களோ, பொறுப்புக்கூறலில்‌ இருந்து விலகும்‌ பாங்கிலான ‘காரணம்‌ கூறல்களோ’: அல்ல!

Mohamed Badusha – TamilMirror – 21/6/22 Page 6