பள்ளிவாசல்களை மீளத் திறத்தல், இலங்கை வக்பு சபையின் பணிப்புரைகள்

2020.06.12ம் திகதி முதல் சகல மதஸ்தலங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கமைவாக 2020.06.11ம் திகதி இன்று கூடிய இலங்கை வக்பு சபை பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது:

  1. 2020.06.03ம் திகதியிடப்பட்ட வக்பு சபை பணிப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டவாறு 2020.06.12ம் திகதி தனி நபர் வணக்கங்களுக்காக பள்ளிவாசல்களைத் திறத்தல்.
  2. ஒரே நேரத்தில் 50 பேருக்கு கூடுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதற்கேற்ப ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 30 என்ற எண்ணிக்கை ஆகக் கூடியது 50 நபர்கள் என அதிகரிக்கப்படுகிறது.
  3. அரசாங்க தீர்மானத்திற்கேற்ப தொழுகை நடக்கக்கூடிய பள்ளிவாசல்கள் சிறியதாக இருந்தால் அப்பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களின் எண்ணிக்கையில் 50 வீதமானவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
  4. சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கோ / கூட்டு நடவடிக்கைகளுக்கோ இன்னும் அனுமதி வழங்கியிராததன் காரணமாக ஐவேளை இமாம் ஜமாஅத் / ஜும்ஆத் தொழுகை / நிகாஹ் மஜ்லிஸ் போன்ற எவ்வித கூட்டு நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டாது.
  5. மேலே குறிப்பிடப்பட்டது போல பள்ளிவாசல்களை மக்களுக்காக திறப்பதற்கு முன்னர் அனைத்து நம்பிக்கையாளர்களும் / நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் பொது சுகாதார அத்தியட்சகரின் (PHI) எழுத்து மூல அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டுமென கண்டிப்பாகப் பணிக்கப்படுகின்றனர்.

2020.06.03ம் திகதியன்று இவ்விடயம் தொடர்பாக இலங்கை வக்பு சபையினால் வெளியிடப்பட்ட ஏனைய அனைத்து பணிப்புரைகளும் மாற்றமின்றி அமுலில் இருக்கும்.

சுகாதாரத் துறையினரால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போது இலங்கை வக்பு சபை மேலதிக பணிப்புரைகளை வெளியிடும்.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கேற்ப

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!