ராஜபக்ஷவினரின் குறை மதிப்பீடு

“குறிப்பிட்ட சில பிரிவினரே எங்‌களை வெளியே போ என்று கூறி வருகின்றனர்‌. அவர்கள்‌ எப்போதும்‌ எமக்கு எதிரானவர்கள்‌. இவர்கள்தான்‌ எங்களை போகச்‌ சொல்கிறார்கள்‌. அதற்காக மக்‌களின்‌ ஆணையின்‌ மூலம்‌ வந்த நாங்கள்‌ வெளியே போய்‌ விடவேண்டும்‌ என்‌றில்லை”

பிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷ ஆங்கில ஊடகம்‌ ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்‌, இந்தக்‌ கருத்தை தெரிவித்த மறு நாள்‌, நாட்டை முடக்கும்‌ ஒரு பாரிய தொழிற்‌சங்கப்‌ போராட்டம்‌ நடந்து முடிந்திருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு மேலாக கோட்டா வீட்டுக்குப்‌ போ என்றும்‌, ராஜபக்ஷவினரை வீட்டுக்குச்‌ செல்லு மாறும்‌ கோரும்‌ போராட்டங்‌கள்‌ நடந்து வரும்‌ நிலையில்‌, அவர்கள்‌ அசைந்து கொடுக்க மறுத்து வருகிறார்கள்‌.

ஜனாதிபதி தன்னைப்‌ பதவி விலகுமாறு கோரவில்லை என்றும்‌, அவ்வாறு கோருவார்‌ என்று தான்‌ நினைக்கவில்லை என்றும்‌ பிரதமர்‌ மஹிந்த கூறுகிறார்‌.

அதேபோல, பிரதமரைப்‌ பதவியில்‌ இருந்து விலகுமாறு தாம்‌ கோரவில்லை, அவ்வாறு கோரும்‌ எண்ணமும்‌ தனக்‌கில்லை என்று ஐனாதிபதி கூறுகிறார்‌. இவ்வாறாக, ஒருவரை ஒருவர்‌ பிடித்துக்‌ கொண்டு, ஆட்சியில்‌ இருந்து அகல்வதற்கு ராஜபக்ஷவினர்‌ மறுத்து வருகிசறனர்‌.

தமக்கு எதிராக நடத்தப்படும்‌ போராட்‌டங்களை வெறுமனே எதிர்க்கட்சிகளின்‌ போராட்டங்கள்‌ அல்லது தங்களின்‌ எதிராளிகள்‌, தங்களின்‌ மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின்‌ போராட்டங்கள்‌ என்று அடையாளப்படுத்தவும்‌ முற்படுகின்றனர்‌. அதனால்‌ தான்‌, பிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷ, இவர்கள்‌ எப்போதும்‌ எமக்கு எதிரானவர்கள்‌ என்று சுட்டிக்‌ காட்டியிருந்தார்‌. ஆனால்‌, உண்மை அது வல்ல என்பது, அவருக்கும்‌ தெரியும்‌, நாட்டு மக்களுக்கும்‌ தெரியும்‌.

அவர்‌ அந்தச்‌ செவ்வியை அளித்த போது, அவரைப்‌ பதவி விலகுமாறு போராட்டங்களை நடத்திய, அழுத்தங்‌களைக்‌ கொடுத்துக்‌ கொண்டிருந்தவர்‌களில்‌, அவரது பங்காளிக்‌ கட்சியினரும்‌ அடங்கியிருந்தனர்‌ என்பது பிரதமருக்குத்‌ தெரியாமல்‌ போனதா?

விமல்‌ வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவாகளும், அவரை எதிர்த்து வந்தனர்‌ அவர்‌கள்‌ தானே ராஜபக்ஷவினரை மீண்டும்‌ ஆட்சிக்கு கொண்டு வந்தனர்‌.

தாக்க நியாயமற்ற வகையில்‌, தற்போதைய போராட்டங்களை அரசுக்கு எதிரானவர்களின்‌ போராட்டமாக மட்டுப்படுத்த முற்பட்ட பிரதமர்‌ மஹிந்தவுக்கு, கடந்த 28ஆம்‌ திகதி நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட வேலைநிறுத்தப்‌ போராட்‌ டத்துக்குப்‌ பின்னரும்‌ உண்மை புரியாமல்‌ இருந்திருக்காது.

ஆயிரத்துக்கும்‌ அதிகமான தொழிற்‌ சங்கங்கள்‌, இணைந்து முன்னெடுத்த போராட்டத்தினால்‌, நாட்டின்‌ பெரும்பாலான இடங்களில்‌ இயல்பு வாழ்க்கை முடங்கிப்‌ போனது. இதனை ஒரு முன்‌னெச்சரிக்கை நடவடிக்கை என்று தொழிற்சங்க கூட்டமைப்பைச்‌ சேர்ந்த ரவி குூமுதேஷ்‌ கூறியிருக்கிறார்‌.

இன்னும்‌ ஒருவாரத்துக்குள்‌ அரசாங்கம்‌ பதவி விலக மறுத்தால்‌, தொடர்‌ வேலை நிறுத்தப்‌ போராட்டத்தை முன்னெடுக்கப்‌ போவதாகவும்‌ அவர்‌ எச்சரித்திருக்கிறார்‌.

தொடர்‌ போராட்டம்‌ என்பது, நாட்‌டையும்‌, மக்களையும்‌, பெரும்‌ நெருக்‌கடிக்குள்‌ தள்ளிவிடும்‌ என்ற போதும்‌, அரசாங்கத்தைப்‌ பணிய வைப்பதற்கு அவ்வாறான ஆயுதத்தை கையில்‌ எடுப்‌பதை விட வேறு வழியில்லை என்று தொழிற்சங்கங்கள்‌ கருதுகின்றன. தாங்கள்‌ மக்களின்‌ ஏகோபித்த ஆதரவுடன்‌ ஆட்சிக்கு வந்தவர்கள்‌ என்பதால்‌, அந்த ஆணை வழங்கப்பட்ட காலம்‌ முழுவதும்‌ பதவியில்‌ இருப்போம்‌ என்றே பிரதமரும்‌, ஜனாதிபதியும்‌ கூறுகின்றனர்‌.

அவர்களுக்கு மக்களின்‌ ஆணை கிடைத்தது என்பது உண்மை. அந்த ஆணையை அவர்கள்‌ தவறாகப்‌ பயன்‌படுத்தியுள்ள நிலையில்‌ தான்‌, மக்கள்‌ அதற்கெதிராக வீதியில்‌ இறங்கிப்‌ போராடுகின்றனர்‌. இந்தப்‌ போராட்டங்களுக்கு மதிப்பளிக்க அரசாங்கம்‌ தயாராக இல்லை. இதனை குறுகிய அரசியல்‌ போராட்டங்‌களாகவே, அர்த்தப்படுத்துகிறது. அடையாளப்படுத்த முனைகிறது. தங்களின்‌ அதிகாரத்தை நிலைப்படுத்திக்‌ கொள்வதற்காக, மக்களின்‌ போராட்டங்களை சிறுமைப்படுத்த அரசாங்கம்‌ முனைகிறது.

போராட்டத்தில்‌ ஈடுபட்டுள்ள மக்கள்‌ ஒட்டுமொத்த மக்களின்‌ நிலைப்பாட்‌டையும்‌ பிரதிபலிக்கவில்லை என்றும்‌, பிரதிநிதித்துவம்‌ செய்யவில்லை என்றும்‌ கூறியிருக்கிறார்‌ பிரதமர்‌ மஹிந்த.

அதுமாத்திரமன்றி, “இதே வாக்காளர்கள்‌ அடுத்த தேர்தலில்‌ எனக்கு வாக்‌களிப்பார்கள்‌, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இது எமக்குப்‌ புதிதல்ல. 2015இல்‌ நடந்த தேர்தலில்‌ தோல்வி அடைந்தோம்‌. பின்னர்‌ 2019இல்‌ திரும்பி வந்தோம்‌. பெரும்பான்மையான மக்கள்‌ எங்களுடன்‌ இருக்கிறார்கள்‌.” என்று ஆங்‌கில ஊடகச்‌ செவ்வியில்‌ அடித்துக்‌ கூறியிருந்தார்‌ பிரதமர்‌ மஹிந்த.

அதாவது மக்கள்‌ எதிர்ப்பு போராட்‌டத்தை நடத்தினாலும்‌, அவர்களின்‌ ஆதரவுடன்‌ தாங்கள்‌ மீண்டும்‌ ஆட்சிக்கு வருவோம்‌, என்று ராஜபக்ஷவினர்‌ உறுதியாக நம்புகிறார்கள்‌. இந்த நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது வாக்காளர்கள்‌ தான்‌.

கடந்த கால தவறுகள்‌, செயற்பாடுகளை மறந்து இனவாத அலைக்குள்‌ அகப்பட்‌டும்‌, சலுகைகளுக்கு மயங்கியும்‌ வாக்களிக்கப்‌ பழகிய வாக்காளர்கள்‌ தான்‌, அவர்‌களின்‌ இந்த நம்பிக்கைக்கு காரணம்‌. ஆனால்‌ நாட்டில்‌ உருவாகியிருக்கும்‌ எதிர்ப்பு அலை அவற்றுக்கு அப்பாற்பட்‌டது என்பது பிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷவுக்குத்‌ தெரியாமல்‌ இருந்தால்‌, அது அவரது துரதிஷ்டம்‌.

அலரி மாளிகைக்குள்ளேயும்‌, ஜனாதிபதி மாளிகைக்குள்ளேயும்‌ முடங்கிக்‌ கிடக்கும்‌ அவர்களுக்கு, மக்களின்‌ உணர்வுகளும்‌, நிலைமையும்‌ சரியாக தெரியவரவில்லை. ஒவ்வொரு தேவைகளை நிறைவேற்றவும்‌ மக்கள்‌ படுகின்ற துன்பங்கள்‌ தான்‌, அவர்களை வீதியில்‌ இறங்க வைத்திருக்கிறது.

காலிமுகத்திடலில்‌, மூன்று வாரங்‌களைக்‌ கடந்து நடக்கின்ற போராட்டங்‌களை, பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு வருகின்ற இளையவர்களின்‌ போராட்டம்‌ என அண்மையில்‌ அமைச்சராக பொறுப்பேற்ற கீதா குமாரசிங்க கூறியிருந்தார்‌.

சில வாரங்களுக்கு முன்னர்‌, அரசாங்‌கத்துக்கு எதிராக அவரே கருத்துக்களை வெளியிட்டிருந்தார்‌. பதவியும்‌, அதிகாரமும்‌ வந்தவுடன்‌, நிலைப்பாடுகள்‌ மாறிவிடுகின்றன என்பதற்கு அவர்‌ ஒரு உதாரணம்‌. அவரைப்‌ போலத்‌ தான்‌ ராஜபக்ஷவினரும்‌ நடந்து கொள்கிறார்கள்‌.

மக்களின்‌ போராட்டங்களை, மலினப்‌படுத்தி, தங்களின்‌ அதிகார இருப்பை அவர்கள்‌ நியாயப்படுத்திக்‌ கொள்ள முனைகின்றனர்‌.

தோ்தலின்‌ மூலம்‌ மட்டும்‌ தான்‌ தங்‌களை மக்கள்‌ ஆட்சியில்‌ இருந்து நீக்க முடியும்‌ என்று அவர்கள்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ மக்களின்‌ போராட்டங்களும்‌ கூட பல நாடுகளில்‌ ஆட்சியை வீழ்த்தியிருக்கின்றன. அதிகாரத்தில்‌ இருந்தவர்களை இறங்கிப்‌ போகச்‌ செய்திருக்‌கின்றன. 1990களின்‌ தொடக்கத்தில்‌, பல நாடுகளில்‌ தசாப்தக்கணக்காக ஆட்சியில்‌ இருந்தவர்கள்‌, மக்களின்‌ போராட்டங்‌களால்‌ நாட்டை விட்டே ஓடினார்கள்‌. அந்த நிலை இலங்கையில்‌ வராது என்றில்லை.

மக்களின்‌ போராட்டங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதியும்‌, பிரதமரும்‌ பதவி விலக மறுத்தால்‌, அவ்வாறான மக்கள்‌ எழுச்சி தவிர்க்க முடியாமல்‌ போகும்‌. அத்தகைய மக்கள்‌ எழுச்சியை தவிர்க்க வேண்டுமாயின்தற்போதைய அரசாங்கம்‌, மக்களின்‌ போராட்டங்களுக்கு சாதகமாக முறையில்‌ பதிலளிக்க வேண்டும்‌.

தற்போதைய அரசாங்கத்தின்‌ செயற்‌பாடுகள்‌ அவ்வாறானதாக இல்லாதிருப்‌பது, மக்கள்‌ போராட்டங்கள்‌ இன்னும்‌ வீரியம்‌ பெறுவதற்கே வழிவகுக்கும்‌ போலத்‌ தெரிகிறது.

சுபத்றா – வீரகேசரி 1-5-2022

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page