தேசிய வைத்தியசாலை கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

UPDATE : தேவையின் நிமித்தம் கொழும்பு தேசிய மருத்துவமனை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்ட  மாத்தறை பிராந்தியத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி வருணி போகாவத்தவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிராந்தியத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி அனில் பிரியனத்த இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்கு பிரிவில் இருந்து 79 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட மருத்துவர் குறித்த கொள்ளையை மேற்கொள்ள நீண்டகாலமாக திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆவணங்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மருத்துவர் தற்போது மருதானை காவல்துறையில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவரது மனநலம் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு கைத்துப்பாக்கி ஒன்றை காண்பித்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் கணக்கு பிரிவின் காசாளரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.

அவரை மேலும் ஒரு முச்சக்கரவண்டியினால் துரத்திச் சென்ற அரச புலனாய்வு பிரிவின் இரண்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் தேவையின் நிமித்தம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு பிரவேசித்த மாத்தறை பிராந்தியத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி வருணி போகாவத்த கொள்ளையாளரை கைது செய்வதற்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு உதவி புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் காவல்துறை பரிசோதகர் வருணி போகாவத்த அந்த சம்பவத்துடன் தொடர்புபட்டமை சம்பந்தமாக மாத்தறை பிராந்தியத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னறிவிப்பு இன்றி உத்தியோகபூர்வ சீருடையில் கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்திற்கு சென்றமை தொடர்பிலே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த கொள்ளை மருத்துவரினால் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதா அல்லது குழுவாக மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page