சர்வகட்சி மாநாடும் – ஏனைய கட்சிகளும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்‌, சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச்‌ சிக்கல்‌ நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின்‌ ஆலோசனைக்‌ களமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்‌ கட்சியின்‌ வேண்டுகோளின்‌ பேரில்‌ கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு, அதன்‌ நோக்கத்தை அடைந்ததோ இல்லையோ, அது அரசியல்‌ பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சித்‌ தலைவர்‌ ரணில்‌ விக்கிரமசிங்கவுக்கு அது கனத்த பிரபல்யத்தைத்‌ தேடித்தந்திருக்கிறது. ரணில்‌ அங்கு பேசிய விதம்‌, பேசிய விடயம்‌, கப்ராலின்‌ அரசியல்‌ பேச்சைக்‌ கண்டித்த விதம்‌, பசில்‌ ராஜபக்ஷவின்‌ பொய்யை வெளிக்கொண்டு வந்தவிதம்‌ எல்லாம்‌, ரணிலின்‌ பரம விமர்சகர்களைக்‌ கூட கவர்ந்துள்ளது என்றால்‌ அது மிகையல்ல. ஆனால்‌, அதைத்‌ தாண்டி, சர்வகட்சி மாநாடு பற்றிச்‌ சொல்லிக்‌ கொள்வதற்கு, பெரிதாக எதுவும்‌ இருக்கவில்லை என்பதுதான்‌ உண்மை.

சர்வகட்சி மாநாடு தேவையா என்பது முதற்கேள்வி. சர்வகட்சி மாநாட்டில்‌ விவாதிக்கப்பட்ட இந்த விடயத்தை, விவாதிக்கத்தான்‌ பாராளுமன்றம்‌ இருக்கிறது. பாராளுமன்ற அமர்வுகளில்‌ ஐனாதிபதியும்‌ கலந்துகொள்ள முடியும்‌. அப்படியிருக்கையில்‌ பாராளுமன்றத்தைத்‌ தவிர்த்து, பாராளுமன்றத்துக்கு வெளியே, சர்வகட்சி மாநாட்டைக்‌ கூட்ட வேண்டிய தேவையில்லை. அது பாராளுமன்றத்தின்‌ முக்கியத்‌ துவத்தைக்‌ குறைப்பதாகவே அமைகிறது என்ற குற்றச்சாட்டுகளில்‌ நியாயம்‌ இருக்கிறது.

இலங்கையின்‌ நிதியமைச்சர்‌, ஒரு அமைச்சராக பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டி யவர்‌. பாராளுமன்றத்துக்கு வருவதேயில்லை என்பது எவ்வளவு பெரிய அநியாயம்‌; அவமானம்‌! பாராளுமன்றம்‌ என்ற பலமான கட்டமைப்பை உதாசீனம்‌ செய்து, அதற்கு அப்பாற்பட்டு இதுபோன்ற, எதுவித அரசியலமைப்பு, அல்லது சட்டக்கட்டமைப்புக்கும்‌ உட்பட்டிராத சர்வகட்சி மாநாடுகளை நடத்துவதன்‌ பயன்‌ என்ன என்பதைப்‌ பற்றி, அதைக்‌ கூட்டுவோர்‌ மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்‌.

எது எவ்வாறாயினும்‌, இலங்கையின்‌ ஐனாதிபதி ஒரு சர்வகட்சி மாநாட்டைக்‌ கூட்டியிருக்கின்ற பொழுதில்‌. அதனை எதிர்ப்பவர்களாக இருந்தாலும்‌, அதில்‌ கலந்துகொண்டு, தமது எதிர்ப்பைப்‌ பதிவு செய்வதுதான்‌ முறையானதாக இருக்கும்‌.

புறக்கணிப்பு என்பது, எதிர்ப்பின்‌ ஒரு வழியாகக்‌ கருதப்பட்டாலும்‌, எதிர்ப்பும்‌, புறக்கணிப்பும்‌ ஒன்றல்ல. புறக்கணிப்பு என்பது, நேரடிச்‌ சந்திப்புகளில்‌, கருத்துரைப்புகளில்‌, விவாதங்களில்‌, ஈடுபடும்‌ இயலாமையையும்‌ சுட்டி நிற்கிறது.

மேலும்‌, தங்களால்‌ முடியாத நிலையில்‌, அனைத்துக்‌ கட்சிகளிடமும்‌ தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு கேட்டு ஜனாதிபதி நிற்கும்‌ போது, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தாது இருப்பதானது, தம்மிடமும்‌ அந்தப்‌ பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதன்‌ மறைமுக வெளிப்பாடுதான்‌ என்று மக்கள்‌ கருதக்கூடும்‌.

எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ சஜித்‌ பிரேமதாஸவும்‌ ஜே.வி. பி தலைவர்‌ அநுரகுமார திஸாநாயக்கவும்‌, தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த வடக்கு- கிழக்கின்‌ முக்கிய தமிழ்த்‌ தேசிய கட்சிகளும்‌, இந்தச்‌ சர்வகட்சி மாநாட்டில்‌ கலந்துகொண்டிருக்கவில்லை; அல்லது புறக்கணித்திருந்தார்கள்‌.

சஜித்‌ பிரேமதாஸ கலந்து கொண்டிருந்தாலும்‌ அது எந்தப்‌ பயனையும்‌ தந்துவிடப்போவதில்லை. ரணிலைப்‌ போன்ற அரசியல்‌ அறிவோ, பொருளாதார அறிவோ, அரசியல்‌ அனுபவமோ, பக்குவமோ சஜித்‌ பிரேமதாஸவிடம்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை; அல்லது, இதுவரை அவர்‌ அவற்றை வெளிக்காட்டவில்லை.

இலங்கையின்‌ பொருளாதாரப்‌ பிரச்சினைக்குத்‌ தீர்வு எனும்‌ போது, குறைந்தபட்ச பொருளியல்‌ அறிவின்றி, அதைப்‌ பற்றி கலந்தாலோசிக்கவே முடியாது. சர்வகட்சி மாநாட்டில்‌ ரணில்‌ விக்கிரமசிங்க முன்னிலையில்‌, ஒரு பாலர்‌ வகுப்புப்‌ பிள்ளை போல, சஜித்‌ பிரேமதாஸ காட்சியளித்திருப்பார்‌.

ஆகவே, சஜித்‌ பிரேமதாஸ இந்தச்‌ சர்வகட்சி மாநாட்டில்‌ கலந்துகொள்ளாமை புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால்‌, பிரதான எதிர்க்கட்சி, சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்காது, ஒரு பிரதிநிதியையாவது அனுப்பியிருக்க வேண்டும்‌. ஹர்ஷ டி சில்வா, எரான்‌ விக்கிரமரட்ண அதற்கு மிகப்பொருத்தமானவர்களாக இருந்திருப்பார்கள்‌.

மறுபுறத்தில்‌, ஜே.வி.பி என்பது ஓர்‌ எதிர்க்கும்‌ கட்சி, எல்லாவற்றையும்‌ எதிர்க்கும்‌ கட்சியொன்றின்‌ ஒரே ஆயுதம்‌, எதிர்ப்பு மட்டும்தான்‌. அவர்களின்‌ பொருளாதார சித்தாந்தம்‌ என்பது, காலாவதியாகிப்போன கம்யூனிஸ சித்தாந்தம்தான்‌. அவர்களால்‌ இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு, எந்தத்‌ தீர்வையும்‌ முன்வைக்க முடியாது.

ஆகவே, மக்களின்‌ கோபத்தை, ராஜபக்ஷர்களுக்கு எதிரான மனநிலையை, தமது வாக்குவேட்டைக்கு பயன்படுத்த முடியுமா என்ற நிகழ்ச்சி நிரலில்தான்‌ அவர்கள்‌ இயங்கிக்கொண்டி ருக்கிறார்கள்‌. எனவே, ஜே.வி.பி கலந்துகொண்டாலும்‌ கலந்துகொள்ளாவிட்டாலும்‌, பொருளாதாரப்‌ பிரச்சினை தொடர்பில்‌, அவர்களால்‌ ஆகக்கூடியதொரு நன்மை கிடையாது.

தீவிர தமிழ்த்‌ தேசிய கட்சிகளைப்‌ பொறுத்தவரையில்‌, அவையும்‌ ஜே.வி.பி போல எதிர்ப்பு அரசியலை மூலதனமாகக்‌ கொண்டவை. ராஜபக்ஷ எதிர்ப்புக்கு அவை கொடுக்கும்‌ முக்கியத்‌ துவத்தை, மக்களின்‌ அன்றாடப்‌ பிரச்சினைகளுக்குக்‌ கொடுப்பதாகத்‌ தெரியவில்லை. இன்றைய பொருளதாரப்‌ பிரச்சினைக்கு, தமிழ்‌ மக்களும்‌ விதிவிலக்கல்ல. ஆனால்‌, 30 வருட யுத்தம்‌ பெற்றுக்கொடுத்த அனுபவத்தின்‌ வாயிலாக, இதுபோன்ற பொருளாதார சிக்கல்‌ நிலையில்‌, சமாளித்து வாழும்‌ தன்மையை மற்ற இலங்கையர்களைவிட அவர்கள்‌ நன்கு கற்றுக்கொண்டி ருக்கிறார்கள்‌.

எரிபொருள்‌, எரிவாயுத்‌ தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள்‌, மருந்துகளின்‌ தட்டுப்பாடு என்பதெல்லாம்‌ தெற்கிற்குப்‌ புதியது. 1977களின்‌ பின்னர்‌, தெற்கு இவற்றை பெரிதாக அனுபவித்தது கிடையாது. ஆனால்‌, வடக்கு-கிழக்கு தமிழ்‌ மக்கள்‌, இந்த அத்தனை சவால்களூடும்‌ பல தசாப்தங்கள்‌ வாழ்ந்தவர்கள்‌. வடக்கு-கிழக்கு மக்களை அந்த நிலைக்கு கொண்டு சென்றது, இந்தத்‌ தெற்கின்‌ அரசியல்‌ அல்லவா?

ராஜபக்ஷர்களுக்கு ஆலோசனை தர விரும்பாவிட்டாலும்‌, குறைந்தது மேற்சொன்ன விடயத்தையாவது இந்தத்‌ தீவிர தமிழ்க்‌ கட்சிகளாவது பதிவுசெய்திருக்கலாம்‌ இல்லையா? 1950களிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதமும்‌ இனவெறியும்‌ பெருந்தேசியவாதமும்‌, இந்நாட்டை இன்று சின்னாபின்னமாக்கி இருக்கிறது என்பதை, மீண்டுமொருமுறை பதிவுசெய்வதையாவது செய்திருக்கலாம்‌ இல்லையா?

இவர்களின்‌ புறக்கணிப்பால்‌, யாருக்கு என்ன பலன்‌ என்பதை, தமிழ்‌ மக்களுக்கு இவர்கள்‌ சொல்லக்‌ கடமைப்பட்டுள்ளார்கள்‌.

தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்பின்‌ அணுகுமுறை பாராட்டுக்குரியது. உணர்ச்சிவயப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, அரசியல்‌ முதிர்ச்சியோடு தமிழ்த்‌ தேசிய கூட்டமை செயற்பட்டிருக்கிறது. தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்பானது சர்வகட்சி மாநாட்டில்‌ பங்கேற்ற நல்லெண்ண முடிவு, இரண்டு வருடங்களாக தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்பைச்‌ சந்திக்க மறுத்த ஜனாதிபதி, தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்புடன்‌ நீண்ட சந்திப்பொன்றை நடத்தும்‌ நிலையை தருவித்திருக்கிறது.

‘அரசியல்‌ என்பது, சாத்தியமானவற்றில்‌, அடையக்கூடி யவற்றின்‌ கலை’ என்ற ஒட்டோ வொன்‌ பிஸ்மார்க்கின்‌ கூற்றுக்கு ஏற்றால்‌ போன்றதோர்‌ அரசியலை, தமிழத்‌ தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து இருக்கிறது. இது தமிழ்த்‌ தேசிய அரசியலின்‌ பிரதான அரசியல்பாதை, இலட்சிய அரசியலை நோக்கிய எதிர்ப்புப்‌ போராட்டவழி என்பதிலிருந்து, சாத்தியமானவற்றை அடைவதற்கான ராஜதந்திர வழிக்கு பெருமளவு மாறியுள்ளதை எடுத்துக்காட்டி நிற்கிறது. இதன்‌ உள்ளக, வெளியக பரிமாணங்கள்‌, பூகோள அரசியலின்‌ தாக்கங்கள்‌ என்பனவெல்லாம்‌ தனித்து ஆராயப்பட வேண்டியவை. ஆனால்‌, பிரதானமாக தமிழ்த்‌ தேசிய அரசியல்‌ இன்று நிற்கு சந்தி இதுதான்‌.

சாத்தியமானவற்றை, சாத்தியமான பொழுதுகளில்‌, சாத்தியப்படுத்துவது மிகப்‌ பெரிய அரசியல்‌ வெற்றி, வடக்கு- கிழக்கில்‌ காணிச்‌ சுவீகரிப்புகளை நிறுத்துமாறு ஐனாதிபதி கோட்டாபய உத்தரவிட்டிருக்கிறார்‌ என்று, இன்று தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின்‌ சந்திப்பின்‌ பின்னர்‌ வந்த செய்தி அறிக்கைளுக்கும்‌, குறித்த சந்திப்புக்கும்‌ எந்தச்‌ சம்பந்தமும்‌ இல்லை என்று சொல்லிவிட மூடியுமா?

எந்தப்‌ புலம்பெயர்‌ தமிழர்களை எதிர்மறை வெளிச்சத்தில்‌ ஆளுங்கட்சியினர்‌ பிரசாரம்‌ செய்திருந்தார்களோ, இன்று ஜனாதிபதி அதே புலம்பெயர்‌ தமிழர்களை நாட்டுக்கு வாருங்கள்‌; முதலீடுகளைக்‌ கொண்டு வாருங்கள்‌; உங்கள்‌ பாதுகாப்பிற்கு நான்‌ உத்தரவாதம்‌ என்று அழைப்பு விடுக்கிறார்‌. இந்தச்‌ சந்தர்ப்பத்தை சாத்தியமாகப்‌ பயன்படுத்‌ துவதுதான்‌ அரசியல்‌ வெற்றி. அதனை விட்டுவிட்டு, வீண்வம்பு பேசிக்கொண்டிருப்பதால்‌ யாருக்கும்‌ எந்தப்‌ பயனுமில்லை. அதனைப்‌ புரிந்துகொண்டு தமிழ்த்‌ தேசியக்‌ கூட்டமைப்பு இயங்குவது பாரட்டுக்குரியதே!

தமிழ்த்‌ தேசிய கூட்டமைப்பின்‌ இந்தச்‌ சாத்தியமானதை, சாத்தியமான பொழுதில்‌ சாத்தியப்படுத்து முயலும்‌’ அரசியல்‌ பயணம்‌ தொடரும்‌ என எதிர்பார்ப்போம்‌. (N K அசோக்பரன் – தமிழ்மிரர் 28/3/22)