நிதி அமைச்சர் பஷில் நாட்டில் திட்டமிட்டு நெருக்கடியை உருவாக்குகின்றார் – பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னால் பாரிய அளவிலான  சூழ்ச்சிகள் உள்ளதாகவும், நிதி அமைச்சர் நிலைமையை தெரிந்துகொண்டே நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றார் எனவும் அமெரிக்ககாரரின் சதியினால் நாடு நாசமாகின்றது எனவும் பிரதான எதிர்க்கட்சியினர் சபையில் குற்றம் சுமத்தினர்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நிதி அமைச்சர் பாராளுமன்ற்திற்கு அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி, சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்த போது ஏற்பட்ட சர்சையின் போதே சமிந்த விஜேசிறி மற்றும் நளின் பண்டார ஆகியோர்  இவ்வாறு தெரிவித்தனர்.

சமிந்த விஜேசிறி எம்.பி இது குறித்து கூறுகையில், பாராளுமன்றத்தில் எரிபொருள் நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது இறுதி நேரத்தில் நிதி அமைச்சர் இந்த சபைக்கு வந்தார். 

ஆனால் அவர் அந்த ஆசனத்தில் இருந்து எந்தவொரு விடயத்திற்கும் பதிலளிக்கவும் தயாராகவும் இருக்கவில்லை, நாங்கள் கூறும் எதனையும் கண்டுகொள்ளாது. 

நாட்டின்  நிலைமை தொடர்பாக அவர் பதிலளிப்பாராக இருந்தால் சிக்கல் இருக்காது. 

அவர் நாட்டில் பொருளாதார நெருக்கடியை தெரிந்தகொண்டே மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் விதமாக செயற்படுகின்றார் என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார எம்.பி கூறுகையில், இந்த பாராளுமன்றத்தில் இதற்கு முன்னர்  நிதி அமைச்சர்கள் நடந்துகொண்ட முறைகளை பார்த்துள்ளோம். 

குறிப்பாக 20 ஆவது திருத்தத்தை கொண்டு வரும் போது, அமெரிக்க கொடியை காட்சிப்படுத்தி ஏற்படப் போகும் நிலைமை தொடர்பில் கூறியிருந்தேன். 

இது அமெரிக்காவுக்கு நாட்டை காட்டிக்கொடுக்கும் சூழ்ச்சியே. அமெரிக்கக்காரரே இந்த வேலையை செய்கின்றார் என்றார். 

Read:  மீண்டும் ரணில் !!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)வீரகேசரி– (2022-03-12 09:26:38)