கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய தயார்

கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று சாந்த பண்டார எம்பி வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அதுதொடர்பில் ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பு எம்பி சாந்த பண்டார கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதன் போது அவர் பலாத்காரமாக துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் பெண்ணின் கருவில் உருவாகும் கருவை இல்லாமலாக்குவது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சினை இருந்து வருகின்றது.  

இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.ஏனெனில் அத்தகைய நிலைக்கு உள்ளாகும் பெண்கள் பல்வேறு அசெளகரியங்கள் மற்றும் சமூகத்தில் தாழ்த்தப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் பிறக்கும் குழந்தையும் வாழ்நாள் முழுவதும் சமூகத்தின் இழிவுபடுத்தல்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது.  

அதேபோன்று இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகுபவர்கள் சில வேளைகளில் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்கின்றனர்.  

அதனால் நீதித்துறையில் பல்வேறு சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில், அதுதொடர்பாக சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டத்தில் நிவாரணம் வழங்க முடியுமா என்றும் சாந்த பண்டார எம்பி கேள்வி எழுப்பினார்.  

 அவரது கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.    அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:    கருக்கலைப்புக்கு எதிர்ப்பு என நாம் தெரிவித்தாலும் கருவுற்றிருக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அல்லது துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி இருந்தால் அந்த குழந்தையை விரக்தியுடனேயே குறித்த பெண் பெற்றெடுக்கின்றாள். அதனால் சில நாடுகளில் ஒருசில நிபந்தனைகளுக்கு கீழ் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்தாடல் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும்.  

அத்துடன் பாராளுமன்ற பெண்கள் ஒன்றியம் இதுதொடர்பாக கலந்துரையாடி பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தால், அதனை ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாம் தயார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்  தினகரன் – (2022-03-09 11:48:11)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page