பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட இருவர் கைது

தாம் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சந்தேக நபர்களும் ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவில் அங்கமுவ பிரதேசத்தில் பாதையில் பயணம் செய்த லொறியொன்றை நிறுத்தி சாரதியிடமிருந்த 35000 ரூபாவை கொள்ளையிட்டுள்ளனர்.

அதே போன்று ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவில் முணமல்தெனிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு கோழித் தீன் வழங்கிவிட்டு திரும்பிச் செல்லும் வேளையில் அந்த இரு சந்தேக நபர்களும் லொறியை நிறுத்தி லொறிச் சாரதியின் காற் சட்டையில் இருந்த ஒரு இலட்சத்து 63,916 ரூபாவை கொள்ளை யிட்டுள்ளனர். இந்த இரு லொறிச் சாரதிகளினால் ஹொட்டிப் பொல பொலிஸில் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க ஹெட்டிப் பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த குணரத்தன ஆலோசனையின் பிரகாரம் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சாரக சதுரங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தச சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் நாரம்மல பொலிஸார் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட இரு நபர்களையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது மேற்படி குற்றச்செயலுடன் தொடர்பு பட்டவர்கள் எனத்தெரியவந்துள்ளது.

இவர்கள் நாரம்மல மஜிஸ்ரேட் நீதவான் முன்நிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து நீதவான் விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்த இரு சந்தேக நபர்களையும் மேற்படி இரு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆளடையாளம் காண்பதற்கு அனுமதி தருமாறு ஹெட்டிப்பொல பொலிஸார் ஹெட்டிப்பொல நீதி மன்றத்தில் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

அந்த வகையில் கங்கொடமுல்ல கட்டுகொட பிரதேசத்தையும் மற்றும் எஹெலகஸ்ஹின்ன பூஜாப்பிட்டிய பிரதேசத்தையும் சேர்ந்த இரு சந்தேக நபர்களையும் இம் மாதம் 14 ஆம் திகதி ஆளடையாளம் காண்பதற்கு ஆஜர்படுத்தவுள்ளனர்.

Previous articleஎம்.சீ.சீ. ஒப்பந்தத்தை கிழித்தெறிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமா?
Next articleஓய்வு பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது – பிரதமர்