மாடறுப்புக்கு தடை வந்தால்..? விக்டர் ஐவன்

மாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்கள் எழுதிய ஆக்கத்தை இங்கு பதிவிடுகிறோம்.

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று தலதா மாளிகைக்கு முன்னால் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டு இந்திர ரத்ன தேரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அனைவரும் அறிவோம். நான்கு கோரிக்கைகளுடன், குறிப்பாக மிருகவதையை முன்வைத்து மாடறுப்பது இங்கு தடை செய்யப்பட வேண்டும் என்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவரதும் இவர் போன்றும் மாடு அறுப்பதற்கு எதிராகக் கூக்குரலிடுவோரின் கோரிக்கை அமுலாக்கப்படுமானால் நாடு மிகவும் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அத்துடன் வேலையில்லாப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுக்கவும் அது வழிவகுத்து விடும்.

இவற்றினை வைத்து நாம் சிறிது அலசிப் பார்ப்போம். 

ஜீவகாருண்யம் என்ற போர்வையிலேயே மாடுகள் அறுக்கப்படுவதைத் தடை செய்யக் கோரிக்கை விடுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நாட்டைச்சூழ மீன் பிடிக்கிறார்கள், ஆடு, கோழிகள் அறுக்கப்படுகின்றன. ஏன் நாட்டில் மிகவும் பெரும்பாலானோர்களால் கோழி, முட்டை உணவாகக் கொள்ளப்படுகிறது. பொதுவாக சகல இன, மதத்தவர்களாலும் கோழி இறைச்சியும் முட்டையும் உணவில் பிரதான பங்கு வகிக்கின்றன.

கோழியும் மாட்டைப்போன்று உயிருள்ள ஒரு பிராணி. அது வெட்டப்பட்ட பின் துடிக்கும் காட்சியை நாம் அனைவரும் நன்கறிவோம். இப்படி இருந்தும் ஏன் அதற்கெதிராக குரல் கொடுப்பதில்லை.

பெரும்பாலான மதகுருக்கள் உட்பட சகல மதத்தவர்களும் போல கோழியையும் முட்டையையும் பல வழிகளிலும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவும் போது வெளிநாடுகளில் இருந்தும்கூட இறக்குமதி செய்து தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.

Read:  மீண்டும் ரணில் !!

எனவே, ஜீவ காருண்யம் என்று கோழிகள் அறுப்பதைத் தடை செய்தால் நாட்டில் எத்தனை கோழிப் பண்ணைகள், எத்தனை ஆயிரம் பேர் அதன் மூலம் பொருளாதார ரீதியாக சீவிக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அதேபோன்றுதான் நாட்டில் பரவலாக பசுப் பண்ணைகள் இருந்து வருகின்றன. நாட்டின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பலதரப்படட பால்மா வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நாட்டிலுள்ள குறிப்பிட்ட பௌத்தர்களும் இந்துக்களும் மாமிச உணவுகள் பரிமாறப்படாவிட்டாலும் பால் வகைகள், முட்டை சேர்ந்த உணவுகளை உட்கொள்வதைக் காண்கின்றோம். அல்லது ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை உண்ணும் பௌத்த இந்துக்களும் இருக்கவே செய்கின்றார்கள். ஏன் இவர்கள் மாட்டிறைச்சியை மட்டும் தூக்கிப் பிடிக்க வேண்டும்?

நாட்டின் பால் தேவைக்காக தினம் பசுவொன்று 20-25 லீற்றர் பால் தரக்கூடிய ரக பசுக்கள் கொண்ட பால் பண்ணை அமைய வேண்டும். பால் பண்ணையோடு மேய்ச்சல் புல் வெளியும் தொடர்பு படுகிறது. இவையும் தொழில், பொருளாதாரத் துறைகளில் பங்கு வகிக்கின்றன. நல்ல ரக பசு ஒன்று ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்ததாகும்.

மூன்று வருடங்களின் பின்பே பசு கன்று ஈன்று பால்தரும் நிலையை அடைகின்றது. அது சுமார் 7 வருடங்கள் வரை பயன்பாடுடையதாக அமையும். அதன்பின் மாடு அறுப்புத் தடை வந்தால் பால் எடுப்பது நிறுத்தப்பட்டபின் குறித்த பசுவை, பசுக்களை அப்படியே விட்டு விட்டால் அவற்றுக்கான மேய்ச்சல் நிலம், உணவுப் பிரச்சினை, இட நெருக்கடியால் பண்ணையாளர் மண்ணைத்தான் கவ்வ வேண்டிவரும்.

Read:  மீண்டும் ரணில் !!

சுமார் ஒன்று இரண்டு லட்சம் ரூபாவுக்கு வாங்கிய பசு, பால் பயன்பாடு தீர்ந்த பின் இறைச்சிக்காக விற்கப்படுமாயின் 500 கிலோ எடையுடையதாக வைத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யலாம். பால் பண்ணையாளரின் இலாபம் இதிலேதான் தங்கியிருக்கிறது. மாடு அறுப்பது தடைசெய்யப்பட்டால் நாட்டில் பால பண்ணைகள் கூட இழுத்து மூட வேண்டித்தான் வரும் என்பது உறுதி.

மாட்டிறைச்சியை விரும்பாத இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் கூட பால் பண்ணைகள் இலாபத்திலும் சிறப்பாகவும் இயங்க அங்கு வாழும் 177 மில்லியன் முஸ்லிம்கள் இறைச்சியை உணவாகக் கொள்வதே பிரதான காரணமாகும்.

உலகில் தாவரங்கள் உட்பட சகல உயிரினங்களும் உயிர் வாழ புரதம் இன்றியமையாததாகும். அமினோ அமிலங்களின் சேர்க்கையே புரத உற்பத்திக்கு காரணியாகும். தாவர இலைகள் காற்று, சூரிய ஒளி மூலம் தம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.

ஏனைய உயிரினங்கள் அமினோ அமிலத்தினை உட்கொள்ளும் உணவு மூலம் பெற்றுக் கொள்கின்றன. 10 வகையான அமினோ அமிலங்கள் அடங்கிய உணவே நிறைவான புரத உணவாகக் கொள்ளப்படுகிறது. தாவர உணவு வகைகளில் இரண்டொரு அமினோ அமிலங்களே காணப்படுகின்றன. ஆனால் மாமிச உணவுகளிலே தான் 10 வகை அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதாக வைத்திய விஞ்ஞானம் கூறுகின்றது. எமது உடலில் நீருக்கு அடுத்தபடியாக அதிகமாக இருப்பது புரதமேயாகும்.

எனவே, இறைச்சி உண்பதைத் தடுக்க பிரசாரம் செய்வோர் தம் இனத்தைப் பலவீனப்படுத்தி நோயாளியாக்கவே வழி வகுக்கிறார்கள் என்றால் மிகையாகாது. 

ஆதிகால சிங்களவர்கள் பலசாலிகளாக இருந்து பாரமான கருங்கற்களைச் சுமந்து மிகப் பெரிய குளங்கள் வாவிகளை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் மாமிசம் உண்டதனாலே தான் இவ்வாறு பலம் பெற்றிருக்கிறார்கள்.

Read:  மீண்டும் ரணில் !!

குறித்த குளங்களில் மீன் வளர்த்து உணவாகப் பெற்றிருக்கிறார்கள், கண்ணி வைத்தும் வேட்டையாடியும் மரை, மான்கள், காட்டுப் பன்றிகளைப் புசித்திருக்கிறார்கள். தமது வேட்டைப் பொருட்களில் ஒரு பகுதியை விகாரைகளுக்கும் பங்கு வைத்திருக்கிறார்கள். அரச மாளிகைக்குக் கூட வேட்டையாடிய இறைச்சியை விநியோகித்திருக்கிறார்கள்.

மகிந்த தேரர் இலங்கை வந்து தேவநம்பிய திஸ்ஸ மன்னனைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அவர் வேட்டையாடிய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக மகாவம்சத்தில் பதிவாகியிருக்கிறது. மன்னன் பௌத்த தர்மத்தைத் தழுவிய பின்னரும் வேட்டையாடியதைக் கைவிட்டதாக வரலாற்றில் அறிய முடியவில்லை.

கி.பி. 1153 முதல் 1185 வரை ஆட்சிபுரிந்த சிரேஷ்ட பௌத்த மன்னனாக மதிக்கப்படும் முதலாவது பராக்கிரமபாகு மன்னன் அவரது மகாராணி உட்பட அரச அதிகாரிகளுடன் மான், மரை வேட்டைக்குச் சென்றதாக சூலவங்ஸவில் குறிப்பிட்டிருக்கிறது.

உலகில் 79 மில்லியன் தமிழர்கள் வாழ்கிறார்கள். அதனால் இங்கு 30 வருடங்கள் இனப்போர் வெடித்து நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்தது. 

ஆனால், உலகில் 1619 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். 50 மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உலகில் இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் சிங்கள முஸ்லிம் முறுகல் நிலை உக்கிரமடையுமாயின் பாரதூர விளைவுகளை நினைத்தும் பார்க்க முடியாதென்ற உண்மையும் மறுப்பதற்கில்லை. 

இனவாத ரீதியாக மாடறுப்பது உட்பட எழும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளைத் தூண்டுவோர் இதனை உணர வேண்டும்.

சிங்களத்தில்: விக்டர் ஐவன் , தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்