பொதுத்தேர்தல் ஊடாக மக்கள் வழங்கிய 5வருட கால ஆணையை 2 வருடமாக குறைத்துக் கொள்ளமாட்டேன். 2022ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது. அரசியலில் இருந்து ஓய்வுப் பெறும் எண்ணம் தற்போது கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மக்கள் 5 வருட கால ஆணையை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள். 5வருடம் முழுமைப் பெறும் வரையில் பிரதமர் பதவி வகிப்பேன். இரண்டு வருட காலத்தில் பதவி விலகி அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானதாகும்.
இரண்டு வருட காலத்தில் பிரதமர் பதவியில் இருந்தும், அரசியலில் இருந்து விலகும் யோசனை ஏதும் கிடையாது. மக்களாணை கிடைக்கும் வரை அரசியலில் செல்வாக்கு செலுத்துவேன் என குறிப்பிட்டார்.
பிரதமர் இரண்டு ஆண்டுக்குள் பதவி விலகுவது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிடுகையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து எப்போது ஓய்வுப் பெற வேண்டும் என்பதை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள். எப்போதும் மக்கள் அவரை முழுமையாக புறக்கணிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் தவறானது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு ஆண்டுக்குள் அரசியல் இருந்து ஓய்வுப் பெற வேண்டும் என கட்சிக்குள் எவரும் இதுவரையில் குறிப்பிடவில்லை. அவ்வாறான எண்ணமும் எவருக்கும் கிடையாது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் 527364விருப்பு வாக்குகளை பெற்றிருப்பாராயின் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையே சாரும் என்றார்.