தங்க இறக்குமதி வரி நீக்கம் – வர்த்தகர்கள் நிர்க்கதி

தங்க இறக்குமதிக்கான 15 வீத வரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்‌ திடீரென நீக்கப்பட்ட நிலையில்‌, தங்க வர்த்தகர்கள்‌ தங்கத்திற்கான விலையை நிர்ணயிக்க முடியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்‌.

தங்க இறக்குமதியின்போது அரசாங்கத்தினால்‌ இதுவரைகாலம்‌ 15 வீத வரி அறவிடப்பட்டிருந்தது.

தங்கம்‌ மற்றும்‌ ஆபரண ஏற்றுமதியின்‌ போது, உண்மையான வருமானத்தை இதன்மூலம்‌ வெளிக்கொணர முடியாத நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இரத்தினக்கல்‌ மற்றும்‌ ஆபரண கைத்தொழில்கள்‌ இராஜாங்க அமைச்சின்‌ எதிர்கால திட்டங்கள்‌ தொடர்பிலான கலந்துரையாடல்‌ நேற்று முன்தினம்‌ ஜனாதிபதி செயலகத்தில்‌ இடம்பெற்ற வேளையிலேயே இந்த விடயம்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கத்திற்கு இதுவரை காலம்‌ அறவிடப்பட்ட இறக்குமதி வரியான 15 வீதத்தை ரத்து செய்ய ஜனாதிபதி உடனடி நடவடிக்கை
எடுத்திருந்தார்‌.

இதையடுத்து, நேற்று முன்தினம்‌ இரவு தங்கத்திற்கு அறவிடப்படும்‌ 15 வீத வரி நீக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம்‌ அறிவித்த
நிலையில்‌, தங்க வர்த்தகர்கள்‌ உடனடியாக விலை குறைப்பை மேற்கொள்ள முடியாது நேற்றைய தினம்‌ தடுமாறியுள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக கொழும்பு – செட்டியார்‌ தெருவின்‌ தங்க விலை பட்டியலின்‌ பிரகாரம்‌, ஒரு பவுண்‌ தங்கத்தின்‌ விலை ஒரு இலட்சம்‌ ரூபா வரை காணப்பட்டது.

15 வீத வரி நீக்கப்படுமாக இருந்தால்‌, அதனை 15 ஆயிரம்‌ ரூபாவாக குறைக்கப்பட வேண்டிய நிலைக்கு தங்க வர்த்தகர்கள்‌ தள்ளப்பட்டிருக்கின்றனர்‌.

ஏற்கனவே 15 வீத வரித்‌ தொகையை செலுத்தி தங்கத்தை கொள்வனவு செய்துள்ளமையினால்‌, உடனடியாக தங்கத்தின்‌ விலையை குறைக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதையடுத்து, தங்கத்திற்காக விலையொன்றை செட்டியார்‌ தெரு தங்க வர்த்தகர்கள்‌ நேற்றைய தினம்‌ நிர்ணயிக்க முடியாது தடுமாறியிருந்தனர்‌.

அதுமாத்திரமன்றி, பழைய தங்கங்களை கொள்வனவு செய்யும்‌ நடவடிக்கை நேற்றைய தினம்‌ முற்று முழுதாகவே தடைப்பட்டது.

நேற்று முன்தினம்‌ வரை ஒரு பவுண்‌ 22 கரட்‌ பழைய தங்கம்‌ 88 ஆயிரம்‌ ரூபா முதல்‌ 9௦ ஆயிரம்‌ ரூபா வரை வர்த்தகர்களினால்‌
கொள்வனவு செய்யப்பட்டதுடன்‌, 24 கரட்‌ பழைய தங்கம்‌ 99 ஆயிரம்‌ ரூபா வரை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனாதிபதியின்‌ வரி நீக்கம்‌ தொடர்பிலான அறிவிப்பை அடுத்து, பழைய தங்கத்திற்கான விலையை கூட நிர்ணயிக்க முடியாத நிலைக்கு தங்க வர்த்தகர்கள்‌ தள்ளப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஜனாதிபதியின்‌ அறிவிப்பின்‌ பிரகாரம்‌, ஒரு பவுண்‌ தங்கம்‌ 85,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டியுள்ளது.

இந்த நிலையில்‌, செட்டியார்‌ தெரு தங்க வர்த்தகர்கள்‌ ஜனாதிபதியை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்‌ அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும்‌, ஜனாதிபதியின்‌ அறிவிப்பின்‌ பிரகாரம்‌, தங்கத்திற்காக நீக்கப்பட்ட 15 வீத வரியின்‌ சலுகையை விரைவில்‌ நுகர்வோருக்கு வழங்க தாம்‌ நடவடிக்கை எடுப்பதாக செட்டியார்‌ தெரு தங்க வர்த்தகர்‌ ஒருவர்‌ தமிழன்‌ பத்திரிகைக்கு உறுதியளித்திருந்தார்‌.


காலையிலேயே தங்க விலைகளை SMS ஆக பெற்றுக்கொள்ள, கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும். T&C*

* Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available