கொழும்பு-குருணாகல் வீதியில் கோர விபத்து; மூவர் பலி

கொழும்பு – குருணாகல் பிரதான வீதியின் வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் நேற்று பிற்பகல் (01) இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். குருணாகல் திசையிலிருந்து அம்பேபுஸ்ஸ திசை நோக்கி பயணித்த, கொழும்பு – அநுராதபுரம், 57 ஆம் வழி இலக்க இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியுடன் எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கர வண்டி மோதுண்டதில் மூவர் பலியாகினர்.

27, 63 வயதுகளுடைய இருவரும் 07 வயது சிறுவனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பேருவளை பகுதியை சேர்ந்த இவர்கள் கலாவெவ பகுதி திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் மீண்டும் பேருவளை திரும்பும் வழியில் விபத்து நிகழ்ந்துள்ளது.

முச்சக்கரவண்டி மற்றும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் கவனயீனமற் மற்றும் பாதுகாப்பற்ற வாகன செலுத்துகை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் 05 பேர் பயணித்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வரக்காபொலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவருள் ஒருவர் கொரோனா தொற்றுக்குட்பட்டவரென தெரிவிக்கப்படுகின்றது. வரக்காபொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரக்காபொலை தினகரன் நிருபர் (2022-02-02)

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.