மார்ச்சில் உச்சம் தொடவுள்ள நெருக்கடி! என்ன நடக்கப் போகிறது?

நாடு பாரிய நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்­ள­தா­கவும் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் இந்த நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைந்து அதுவே நாட்டின் எதிர்­கால அர­சியல் போக்கைத் தீர்­மா­னிக்கப் போகி­றது என எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில ஊட­கங்­க­ளுக்கு பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருக்­கிறார். டொலர் பற்­றாக்­குறை மற்றும் டொலர் உள்­வ­ருகை பாரிய வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பதன் கார­ண­மாக இலங்கை பொரு­ளா­தார ரீதி­யாக பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கி­றது.

எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக மின்­சார சபையின் சில மின் உற்­பத்தி நிலை­யங்கள் கடந்த வாரம் செய­லி­ழந்­தன. என்­றாலும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் 3000 மெட்­ரிக்தொன் டீசலை வழங்கி, நிலை­மையை சமா­ளித்­தது.
இந்­நி­லையில் மின்­சார சபை எண்ணெய் பெற்­றுக்­கொள்­வ­தற்கு டொலர் வழங்­கினால் மாத்­தி­ரமே கூட்­டுத்­தா­பனம் எண்ணெய் விநி­யோ­கிக்கும் என அமைச்சர் உதய கம்­மன்­பில மின்­சார சபைக்கு அறி­வித்­துள்ளார்.

எண்ணெய் தட்­டுப்­பாடு கார­ண­மாக தினமும் 4 மணித்­தி­யா­லங்கள் மின்­வெட்டு அமு­லாக்­கப்­பட உள்­ள­தா­கவும் மக்கள் மாற்று வழிக்கு தயா­ராக இருக்­கும்­ப­டியும் இலங்கை மின்­சார சபையின் பொறி­யி­ய­லாளர் சங்­கத்தின் தலைவர் சௌமிய குமா­ர­வடு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

கம்­மன்­பில எச்­ச­ரிக்கை
இது இவ்­வா­றி­ருக்க அமைச்­ச­ரவை இணை பேச்­சா­ளரும் அர­சாங்­கத்தின் பங்­காளி கட்­சி­யான பிவித்­துரு ஹெல உறு­ம­யவின் செய­லா­ள­ரு­மான அமைச்சர் உதய கம்­மன்­பில, எதிர்­வரும் மார்ச் மாத­ம­ளவில் இலங்கை ஐந்து பாரிய நெருக்­க­டி­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

‘நான் தற்­போது அர­சாங்­கத்­துடன் உள்­ளக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்ளேன். தற்­போ­தைய நிலைமை தொடர்பில் வெளிப்­ப­டை­யாக பேசாது உள்­ளக ரீதி­யிலே பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­று­கின்­றன. உள்­ளக பேச்­சு­வார்த்­தை­களில் உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் இவ்­வி­வ­காரம் தொடர்பில் வெளிப்­ப­டை­யாகப் பேசு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கிறேன்’ என்றும் அவர் தொலைக்­காட்­சி­யொன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

‘சிலர் நாம் தற்­போது பாரிய நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்­ள­தாக நினைக்­கி­றார்கள். ஆனால் உண்மை நிலைமை இது­வல்ல. நெருக்­க­டிகள் மார்ச் மாத­ம­ள­விலே உச்ச நிலையை அடையும். இந்த நெருக்­க­டி­களே இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலைத் தீர்­மா­னிக்கும்’ என்றும் அவர் கூறினார்.

நாட்டின் எரி­பொருள் இருப்பு மேலும் 20 நாட்­க­ளுக்கே (ஜன­வரி 13 முதல்) உள்­ளது என அமைச்சர் கம்­மன்­பில கூறு­கின்றார். அத்­தோடு, ‘பெட்ரோல் மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தேவை­யான வெளி­நாட்டு நாணயம் எம்­மிடம் இல்லை. வெளி­நாட்டு செலா­வ­ணியைப் பெற்­றுக்­கொள்­வதில் நாம் சிர­மங்­களை எதிர்­கொள்­கிறோம். டீசல் மற்றும் மின் ஆலை­க­ளுக்கு தேவை­யான எண்­ணெய்யை இறக்­கு­மதி செய்­வ­தற்கு நாம் வங்கிக் கடன் பத்­தி­ரங்­களைத் திறக்க வேண்­டி­யுள்­ளது. சில்­லறைப் பாவ­னை­க­ளுக்குத் தேவை­யான பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக் கொள்­வ­தற்கும் வெளி­நாட்டு நாண­யத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் போராடி வரு­கிறேன்’ என்றும் தெரி­விக்­கிறார்.

மின்­சாரத் துறை சவால்­களை எதிர்­கொண்­டுள்ள நிலையில் இலங்கை மின்­சார சபை தேவை­யான எரி­பொ­ரு­ளுக்­கான கட்­ட­ணங்­களை டொலரில் செலுத்­தினால் மாத்­தி­ரமே எம்மால் எரி­பொ­ருளை விநி­யோ­கிக்க முடியும். இது தொடர்பில் அமைச்சர் கம்­மன்­பில மற்றும் மின்­சா­ரத்­துறை அமைச்சர் காமினி லொக்­கு­கே­வுக்­கு­மி­டையே பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. “இலங்கை மின்­சார சபை டொலரில் பணம் வழங்­கினால் தேவை­யான எரி­பொ­ருளை விநி­யோ­கிக்க முடியும்” என்ற இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. நாடு இரண்டு வழி­களில் கடனை எதிர்­பார்க்­கி­றது. பெற்றோ சைனா நிறு­வனம் இலங்­கைக்கு உதவும் வகையில் எரி­பொருள் ஏற்­று­ம­திக்கு 6 மாத கடன்­ச­லுகை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளது. என்­றாலும் இதற்­கான வங்கி கடன் பத்­தி­ரங்­களைத் திறக்க முடி­யாத நிலையில் இலங்கை உள்­ளது.

சில­வேளை கப்பல் கொழும்பு துறை­மு­கத்தில் இருக்­கலாம். ஆனால் அவற்­றி­லி­ருந்து எரி­பொ­ருளை இறக்­கு­வ­தற்கு வங்கி கடன் பத்­தி­ரங்­களைத் திறப்­ப­தற்கு அர­சாங்கம் தொடர்ந்தும் போரா­ட­வேண்­டி­யுள்­ளது. மாதம் 400 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் எமது எரி­பொருள் இறக்­கு­ம­திக்­காகத் தேவைப்­ப­டு­கி­றது. ஆனால் எமது ஏற்­று­மதி வரு­மானம் இதில் 40 வீதமே என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
எனவே, எரி­பொருள் தட்­டுப்­பாடு உரு­வாகும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கி­றது.

மின்­வெட்டு
நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு மற்றும் நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் குறை­வ­டைந்து வரு­கின்­றமை கார­ண­மாக நாடு பெரும் மின்­வெட்­டினை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக இலங்கை மின்­சார சபையின் பொறி­யி­ய­லாளர் சங்கம் கூறு­கின்­றது.
தினமும் 4 மணித்­தி­யா­ல­யங்கள் மின்­வெட்டு இடம்­பெ­ற­வுள்­ள­மையால் மக்கள் அதனை எதிர்­கொள்ள தயா­ரான நிலையில் இருக்­கு­மாறு அந்த கோரிக்கை தெரிவிக்கிறது.

ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை
இவ்­வா­றான நெருக்­கடி நிலையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ அவ­சர உயர்­மட்ட கூட்­ட­மொன்­றினை ஏற்­பாடு செய்து பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டார். முன்­னணி நிறு­வ­னங்­களின் உயர் அதி­கா­ரிகள் இப்­பேச்­சு­வார்த்­தையில் பங்கு கொண்­டனர். இவ்­வ­ருடம் எண்ணெய் இறக்­கு­ம­திக்­காக தேவைப்­படும் 4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை எவ்­வாறு திரட்­டிக்­கொள்­வது என்­பது பற்றி இதன்­போது ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இலங்கை மத்­தி­ய­வங்கி, அரச வங்­கி­க­ளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி, நிதி, எரி­சக்தி அமைச்­சுகள், இலங்கை மின்­சார சபை, இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் ஆகி­ய­வற்றின் உய­ர­தி­கா­ரிகள் பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்­டனர்.
இலங்­கையில் பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் முன்­வைத்த திட்­டத்­தின்­படி மாதம் 90,000 மெட்றிக் தொன் பெற்றோல், 150000 மெட்­றிக்தொன் டீசல், 90,000 மெட்றிக் தொன் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத எண்ணெய் தேவைப்­ப­டு­கி­றது. தொடர்ச்­சி­யான எண்ணெய் விநி­யோ­கத்தை மேற்­கொள்ள தேவை­யான நிதி­யினை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

எதிர்­வரும் இரண்டு மாதங்­க­ளுக்­கான எண்ணெய் விநி­யோ­கத்­திற்கு மத்­திய வங்கி நிதி­யினை வழங்­க­வேண்­டு­மென இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்­ரா­லிடம் கோரிக்கை விடுத்­தது. இந்த எண்ணெய் இறக்­கு­ம­திக்­கான கட்­ட­ணத்தை ஏற்­று­ம­திகள் மூலமும் சுற்­று­லாத்­துறை மூலமும் கிடைக்­கப்­பெறும் வரு­மானம் மூலம் செலுத்­தப்­படும் என மத்­திய வங்கி ஆளுநர் தெரி­வித்தார்.
இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் இலங்கை மின்­சார சபைக்கு எதிர்­கா­லத்தில் சந்தை விலையில் டீசலை விநி­யோ­கிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பன தலைவர் சுமித் விஜே­சிங்க தெரி­வித்தார்.

நெருக்­கடி நிலைமை
எண்ணெய் கொள்­வ­னவு மற்றும் உற்­பத்தி தொடர்பில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­துக்கும், இலங்கை மின்­சார சபைக்கும் இடையில் நெருக்­க­டி­யான நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. நாட்டின் மின்­வி­நி­யோ­கத்­திற்கு இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் நிச்­ச­ய­மற்ற சூழ்நிலையை உரு­வாக்­கி­யுள்­ள­தாக இலங்கை மின்­சார சபை குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

கடந்த 13 ஆம் திகதி களனி திஸ்ஸ மின் உற்­பத்தி நிலை­யத்தின் மின் உற்­பத்தி டீசல் பற்­றாக்­குறை கார­ண­மாக ஸ்தம்­பி­த­ம­டைந்­த­தாக இலங்கை மின்­சார சபை தெரி­வித்­தது. இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னமே தேவை­யான டீசலை விநி­யோ­கிக்க வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­தது.

என்­றாலும் உயர் பத­வி­யி­லுள்ள அர­சாங்க அதி­கா­ரி­யொ­ருவர், இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், இலங்கை மின்­சா­ர­சபை தனது டீசல் தேவைப்­பாடு தொடர்பில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு உரிய காலத்தில் அறி­விக்­க­வில்லை. முன்­னைய வாரம் ஏற்­பட்ட மின்­நெ­ருக்­கடி நிலை­மையின் பின்­னரும் கூட அறி­விக்­க­வில்லை.

இலங்கை மின்­சார சபை டொலர் வழங்­கினால் மாத்­தி­ரமே இதன்­பி­றகு எண்ணெய் வழங்­கப்­படும் என எரி­சக்தி அமைச்சர் மின்­சக்தி அமைச்­சுக்கு அறி­வித்­துள்ளார். இதன் அடிப்­ப­டையில் இதன்­பி­றகு (கடந்த திங்­கட்­கி­ழமை) டொலர் இல்­லா­விட்டால் மின்­சார சபைக்கு எண்ணெய் வழங்­கப்­ப­ட­மாட்­டாது.

எண்ணெய் இன்மை கார­ண­மாக மின்­சா­ர­ச­பையின் சில மின்­உற்­பத்தி நிலை­யங்கள் கடந்த வாரம் செய­லி­ழந்­தன. இந்த நிலை­யங்­களை மீண்டும் வழ­மை­யான நிலைக்கு கொண்டு வரு­வ­தற்­காக 3000 மெட்­றிக்தொன் டீசல் இரண்டு சந்­தர்ப்­பங்­களில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­பி­றகும் இவ்­வாறு எண்ணெய் வழங்­க­மு­டி­யாது.

எண்ணெய் பெற்றுக் கொண்­ட­தற்­காக இலங்கை மின்­சார சபை 920 கோடி ரூபாவும் ஸ்ரீ லங்கன் விமா­ன­சேவை 650 கோடி ரூபாவும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­தி­ட­மி­ருந்து கடன் பெற்­றுள்­ளது. இக்­கடன் செலுத்­தப்­ப­ட­வில்லை. எண்ணெய் தேவை­யென்றால் தேவை­யான பணத்தை தரு­மாறு இந்த இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டீசல் மற்றும் அவ­சி­ய­மான எண்ணெய் தொடர்பில் நேர காலத்­துடன் அறி­விக்­கு­மாறு மின்­சார சபைக்கு ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் ஜன­வரி இறு­தி­வரை டீசலோ, எண்­ணெய்யோ தேவைப்­ப­டாது என்று மின்­சார சபை அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் கடந்த 13 ஆம் திக­தி­யி­லி­ருந்து டீசல் தேவை­யென மின்­சா­ர­சபை கடந்த 11ஆம் திகதி அறி­வித்­தது.

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னமும் தற்­போது மிகவும் மோச­மாக டொலர் நெருக்­க­டிக்கு முகம்­கொ­டுத்­துள்­ளது. இவ்­வா­றான நிலையில் மின்­சார சபையின் கோரிக்­கையை நிறை­வேற்ற முடி­யாது எனவும் அமைச்சர் கம்­மன்­பில கூறினார்.

இதே­வேளை எரி­சக்தி அமைச்சு எண்ணெய் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இந்­தியா, கட்டார், நைஜீ­ரியா மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய நாடு­க­ளி­ட­மி­ருந்து கட­னு­தவி கோரி தற்­போது பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி வரு­கி­றது.

நிதி நெருக்­கடி
இலங்கை மத்­திய வங்கி கடந்த வருடம் 1400 பில்­லியன் ரூபா நாண­யத்­தாளை அச்­சிட்­டுள்­ள­தாக வங்­கியின் பொரு­ளா­தார ஆய்­வுப்­பி­ரிவின் பணிப்­பாளர் அனில் பெரேரா ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருக்­கிறார். இதே­வேளை அனில் பெரேரா இக்­க­ருத்­தினை வெளி­யிட்ட அதே ஊடக மாநாட்டில் மத்­திய வங்­கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை இதற்கு முன்பு இவ்­வ­ளவு பாரிய தொகை நாணயத் தாள்­களை அச்­சி­ட­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொண்டார்.

இவ்­வ­ளவு தொகைப் பணத்தை இலங்கை அச்­சி­டா­விட்டால் இன்­றைய பொரு­ளா­தார சூழ்நிலையில் நாடு பல்­வேறு சவால்­க­ளையும் அழுத்­தங்­க­ளையும் எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் என்றும் வாதிட்டார்.

இது நாட­ளா­விய ரீதி­யி­லான பண­வீக்கம். தேசிய நுகர்வோர், விலைச்­சுட்டெண் 2021 நவம்­பரில் 11.1வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது. எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­திகள் மற்றும் பொரு­ளா­தார நிபு­ணர்கள் கடந்த இரு வரு­டங்­க­ளாக அரச பண நோட்­டுக்கள் அச்­சி­டு­வதை விமர்­சித்­துள்­ளனர்.

சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் அறிக்கை
‘நாட்டின் தற்­போ­தைய மோச­மான பொரு­ளா­தார நிலை­வரம் சட்­டத்தின் ஆட்­சியில் தாக்­கத்தை செலுத்தும். பண­வீக்கம், அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான தட்­டுப்­பாடு, வெளி­நாட்டு நாணய பற்­றாக்­குறை, மின் விநி­யோ­கத்­தடை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணிகள் மக்­களை பெரிதும் துன்­பத்தில் ஆழ்த்­தி­யுள்­ளன. தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டியை சீர­மைப்­ப­தற்கு அர­சாங்கம் தாம­தி­யாது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அர­சாங்கம் உள்­நாட்டு, வெளி­நாட்டு நிபு­ணர்­களின் உத­வியை நாட வேண்டும்’ என்ற கோரிக்­கையை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விடுத்­துள்­ளது.

‘பொரு­ளா­தா­ரத்தின் தற்­போ­தைய எதிர்­ம­றை­யான போக்கு சட்­டத்தின் ஆட்­சி­யிலும் நாட்டின் நிர்­வா­கத்­திலும் மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும். இந்­நெ­ருக்­க­டிக்கு நிலை­பே­றான தீர்வை வழங்­கக்­கூ­டிய அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிதி­வ­ழங்கல் கட்­ட­மைப்­பு­களின் உத­வியை நாட வேண்டும்’ என்றும் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் கோரிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

வெகு­வாக அதி­க­ரிக்கும் பண­வீக்கம், சமையல் எரி­வாயு உள்­ள­டங்­க­லாக அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு நிலவும் தட்­டுப்­பாடு, வெளி­நாட்டு நாணயப் பற்­றாக்­குறை, வெளி­நாட்­டுக்கு பணம் அனுப்­பு­வ­தற்­கான இய­லுமை இன்மை, சர்­வ­தேச தரப்­ப­டுத்தல் முகவர் நிறு­வ­னங்­களால் இலங்கை தர­மி­றக்­கப்­படல், சப்­பு­கஸ்­கந்தை எண்ணெய் சுத்­தி­ர­க­ரிப்பு நிலையம் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளமை, மின்விநியோகத் தடை ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலை என்பன பொருளாதார நெருக்கடியை சீரமைப்பது குறித்து அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்ற குறிகாட்டிகளாக அமைந்துள்ளன.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. வெளிநாட்டுக் கையிருப்பாக 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்படுவதாக அண்மையில் மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட போதிலும் அதில் கடன்களை மீளச் செலுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய இருப்பின் அளவு குறித்த தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. அது மாத்திரமன்றி அவ்வெளிநாட்டுக் கையிருப்பில் உள்ள பெருந்தொகையான பணம் குறுகிய கால வெளிநாட்டுப் பரிமாற்றல் வசதியடிப்படையில் பெறப்பட்ட நிதியாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் வர்த்தகத் துறைசார்ந்த சம்மேளனங்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விடயங்கள் உரிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுதல் போன்ற மாற்றுத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி பத்திரிகை 2022-01-20

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page