பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். 

அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். 

கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்களும் வீடுகளில் அனுஷ்டானங்களை மேற்கொண்டனர். 

கௌதம புத்தரின் பிறப்பு, இறப்பு, ஞானம் பெற்றமை ஆகியவற்றை அனுஷ்டிக்கும் பௌத்தர்களின் புனித தினமான வெசாக் திருநாள் வந்தது. ஆனால், அரசாங்கமும் பௌத்த மகா சங்கங்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மிகவும் எளிமையான முறையில், சிங்கள மக்கள் வெசாக்கை அனுஷ்டித்தனர். 

இதேவேளை, தமிழ், சிங்களப் புத்தாண்டு வந்தது. அரசாங்கம் எல்லோரையும் வீடுகளில் இருந்து அமைதியாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, சிங்கள மக்களும் தமிழர்களும் வீடுகளில் இருந்து கொண்டாடினார்கள். கொழும்பிலோ, நாட்டின் எப்பகுதியிலோ, சிங்களவர்களோ, தமிழர்களோ ஆடைக் கொள்வனவுக்காக முண்டியடித்ததாகவோ பெரும் ஆர்ப்பரிப்புகளோடு அத்திருநாள்களைக் கொண்டாடியதாகவோ நாம் கேள்விப்படவில்லை. 
ஆனால், கடந்த சில நாள்களாக, நோன்பு நோற்று வருகின்ற முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்காக ஆடைகளைக் கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்குச் செல்வதாக, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் மனவேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றன. 

இதில் சில செய்திகள், முஸ்லிம்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்காகப் பொய்யாகச் சித்திரிக்கப்படுகின்றன. உண்மையில், கடந்த காலங்களைப் போல், இம்முறை ஆடைக் கொள்வனவில் முஸ்லிம் சமூகம் அதீத அக்கறை காட்டவில்லை. என்றாலும், ஆங்காங்கே ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்காக, முஸ்லிம் பெண்கள் குவிவதாக வருகின்ற செய்திகள், பொய்யானவை என்று சொல்வதற்கில்லை. 

உலகத்தில் பல நாடுகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. தினமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளன. இலங்கையிலும் இன்னும் கொவிட்-19 முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. 

எனவேதான், அத்தியாவசிய தேவைக்காக மட்டும், வெளியில் செல்லுமாறு அரசாங்கம் கூறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஆடைக் கொள்வனவில் ஈடுபட்டு, சந்தோசமாக பெருநாளைக் கொண்டாடுவதற்காக வெளியுலகுக்குக் காண்பிக்க முனைவதும், சமூக இடைவெளியை மீறி நடப்பதும், படுமுட்டாள்தனமும் சமூக சிந்தனையற்ற செயற்பாடுமாகும்.

இலங்கையில் ஏனைய சமூகங்கள், தமது விசேட தினங்களைத் தியாகம் செய்துள்ளன.

முஸ்லிம்கள், இவ்வளவு காலமும் கொண்டாடிய பெருநாள்தானே. இந்த முறை மாத்திரம் கொண்டாடாமல் விட்டால் என்ன நடந்து விடப்போகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதால், கொத்துக் கொத்தாக கொவிட்-19 தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதுடன், முஸ்லிம்கள்தான் இரண்டாம் கட்டமாக, இந்த நாட்டில் இவ்வைரஸைப் பரப்பினார்கள் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளாக நேரிடும் என்பதை மறக்க வேண்டாம். 

இந்த விடயத்தில், சில அமைப்புகள், பிராந்திய உலமா சபைகள் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தக நிலையங்களை மூடுவதுடன், சட்டத்தைக் கொஞ்சம் கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும் பரவாயில்லை. 

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

VIAதமிழ்மிர்றோர்
Previous articleவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு !
Next articleகலாநிதி எம். ஏ. எம். சுக்ரியின் மரணம் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும். – M.H.A. Haleem