உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று (07) உத்தரவிட்டார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்படடுள்ளனர்.
இதேவேளை, இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆஷாத்தின் தாயார் ஆகிய 4 பேர் உட்பட 68 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 68 பேரின் வழக்குகள் நேற்று (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஏனைய 63 பேரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் 63 பேரையும் எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Akurana Today All Tamil News in One Place