பாடசாலை இஸ்லாம் பாட நூல்களை உடன் மீளப் பெற உத்தரவு

தற்போதும், பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயிலப்பெருவினால் சகல தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடநூல்கள் நேரடியாக விநியோகிக்கப்படும் பாடசாலைகளின் அதிபர்களை விழித்து அனுப்பட்டுள்ள விஷேட கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இஸ்லாம் தரம் 6 (சிங்களம்),  இஸ்லாம் தரம் 6 (தமிழ்), இஸ்லாம் தரம் 7 (சிங்களம்), இஸ்லாம் தரம் 10 (சிங்களம்), இஸ்லாம் தரம் 10 (தமிழ்) மற்றும் இஸ்லாம் தரம் 11 (தமிழ்) ஆகிய பாடநூல்களையே மீள பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளமையினால் அப்பாடநூல்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை இடைநிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், குறித்த பாடநூல்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பின் அவற்றை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்களுக்கு பதிலாக புதிய திருத்தப்பட்ட நூல்களை வழங்குவதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இஸ்லாம் பாட புத்தகங்கள் சில தொடர்பில்  விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவை திருத்தப்படவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இவ்வாறான பின்னணி ஒன்று இருந்த நிலையிலேயே, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தற்போது அனைத்து பாடசாலைகளுக்கும் குறிப்பிட்ட சில இஸ்லாம் பாட நூல்களை விநியோகிக்க வேண்டாம் எனவும், மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட அத்தகைய பாட நூல்களை மீள பெறுமாறும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(எம்.எப்.எம்.பஸீர்)வீரகேசரி– (2022-01-21 10:06:19)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page