ஒன்லைன் விளையாட்டு விபரீதம் – 10 வயது சிறுமியை கல்லால் அடித்து கொன்ற 11 வயது சிறுவன்

ஒன்லைன் விளையாட்டில் தன்னை தொடர்ந்து தோற்கடித்து வந்த 10 வயது சிறுமியை 11 வயது சிறுவன் கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்திய மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட லசூடியா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியும் “ப்ரி பயர்” Free Fire என்ற ஒன்லைன் விளையாட்டு விளையாடி வந்துள்ளனர்.

இந்த ஒன்லைன் விளையாட்டில் அந்த 11 வயது சிறுவனை வீழ்த்தி 10 வயது சிறுமியே தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். ஒரே பகுதி மற்றும் அருகருகே வீடு என்பதால் சில நேரங்களில் இந்த சிறுவன் மற்றும் சிறுமிக்கிடையே சிறுசிறு சண்டைகள் இருந்து வந்துள்ளன.

மேலும், அந்த 10 வயது சிறுவன் வளர்த்துவந்த செல்லப்பிராணியான வெள்ளைநிற எலி அண்மையில் உயிரிழந்துள்ளது. செல்லப்பிராணியின் இந்த உயிரிழப்புக்கு 10 சிறுமிதான் காரணம் என கருதிய அந்த சிறுவன் அடிக்கடி சண்டையிட்டுள்ளான். ஆனால், செல்லப்பிராணியின் உயிரிழப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த சிறுமி கூறியுள்ளார். இதானால் இருவருக்கும் இடையே சில நாட்களாக மோதல் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நண்பகல் ஒரு மணியளவில் சிறுமி தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்குவந்த அந்த 11 வயது சிறுவன் ஒன்லைன் விளையாட்டில் தன்னை தொடர்ந்து தோற்கடித்துவந்த சிறுமியிடம் மிகுந்த கோபத்தில் சண்டையிட்டுள்ளான். மேலும், அருகில் கிடந்த கற்கலைக்கொண்டு சிறுமி மீது எறிந்துள்ளான்.

இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி கல்லால் எறிந்துள்ளனர். அப்போது சிறுவன் எறிந்த ஒரு கல் ஒன்று வேகமாக தலையில் பட்டதில் சிறுமி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார்.

சிறுமி தரையில் விழுந்தபோதும் ஆத்திரமடங்காத அந்த 11 வயது சிறுவன் அந்த 10 வயது சிறுமியின் தலையில் பெரிய கற்களால் தொடர்ந்து அடித்துள்ளார். 11 வயது சிறுவனின் இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த அந்த 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் மற்றும் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டர்.

அந்த விசாரணையின்போது சிறுவனுக்கும், உயிரிழந்த சிறுமிக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிடி கெமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சியில் சிறுவன் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்த சிறுவனிடம் விசாரணை செய்ய அவனது வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர். ஆனால், அந்த சிறுவன் தனது வீட்டில் உள்ள குளியலறையில் இரத்தக்கரை படிந்திருந்த தனது சட்டையை துவைத்துக்கொண்டிருந்ததை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த சிறுவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒன்லைன் விளையாட்டில் தன்னை தொடர்ந்து தோற்கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த 10 வயது சிறுமியை கல்லால் அடித்து கொலைசெய்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து, அந்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.