கொவிட்-19 பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்

“வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது.   

வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது.   

புதிய வழமை எது, அது ஏற்படுத்தியுள்ள சட்டகங்கள், ஒழுங்குகள் எவை? அவை எம்மை எவ்வாறு பாதிக்கும், எம்மில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும்? இவை, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகில், எழுப்பப்படும் பிரதான கேள்விகளாக இருக்கும். இவற்றுக்கான பதில்களை ஆராய, இக்கட்டுரை விளைகிறது.   

“பெர்லின் சுவர்”இன் வீழ்ச்சி, “லீமன் பிரதர்ஸ்”இன் சரிவு என்பன, எவ்வாறு எதிர்பாராத மாற்றங்களை, உலக அரங்கில் ஏற்படுத்தியதோ, அதேபோலவே, இந்தப் பெருந்தொற்றும், உலகைப் புரட்டிப் போடுகிற எதிர்பாராத மாற்றங்களைச் செய்ய வல்லது.   

இவை, எவ்வாறான மாற்றங்கள் என்று, யாராலும் உறுதிபடக்கூற இயலாது. ஆனால், சில திசை வழிகளை, ஆய்வு நோக்கில் எதிர்வு கூறலாம்; எதிர்பார்க்கலாம்; கற்பனை செய்யலாம்; ஏன், கனவு கூடக் காணலாம். எல்லாம் நடக்குமென்றும் இல்லை; நடக்காதென்றும் இல்லை.   

ஒன்றை மட்டும், உறுதியாகச் சொல்லலாம். இந்தப் பெருந்தொற்று, எவ்வாறு மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து, சந்தைகளைச் சரித்து, அரசாங்கங்களின் வினைதிறனை அல்லது, வினைதிறனற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ, அதேபோல, உலகளாவிய அரசியல், பொருளாதார அதிகாரச் சமநிலையில், முடிவான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள், உடனடியாகவும் நிகழலாம்; காலம் கழித்தும் நிகழலாம்.   

கடந்த பத்தாண்டு காலமாக, உலகமயமாக்கல் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, பொருளாதார ரீதியிலான உலகமயமாக்கல் குறித்த வினாக்கள், உலகின் பிரதான அரங்காடிகளால், தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கான பதிலையும் உலகமயமாக்கலின் எதிர்காலத்தையும், இந்தப் பெருந்தொற்று தீர்மானிக்கவல்லது.   
நாடுகள் எல்லைகளை மூடி, சந்தைகளை மூடி, தனித்திருக்க முயன்றபோது, உலகமயமாக்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தன. எல்லைகளை மூடினால், சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவிக்க வேண்டிவரும் என்ற உண்மை உறைத்தபோது, உணவுப் பொருள்களுக்காக, எல்லைகள் திறக்கப்பட்டன.   

மறுபுறம், தோட்டங்களிலும் வயல்களிலும் உற்பத்தி செய்த மரக்கறிகளையும் பழங்களையும் சேகரித்து, பொதி செய்து, சந்தைக்கு அனுப்புவதற்கு உரிய தொழிலாளர்கள், வேறு நாடுகளிலிருந்து வரவேண்டி இருந்ததால், விதிமுறைகள் அவர்களுக்காகத் தளர்த்தப்பட்டு, எல்லைகள் திறக்கப்பட்டன. எல்லைகள் திறக்கப்படாத நாடுகளில், அந்தத் தோட்டங்களிலேயே மரக்கறிகளும் பழங்களும் அழுகி அழிந்தன. இப்போது அரசுகள், நீண்ட காலத்துக்குப் “பொருளாதாரத் தனித்திருத்தல்” எவ்வாறு சாத்தியமாகும் என்று, யோசிக்கத் தொடங்கி உள்ளன. இது, இனி வழமையாகலாம்.   

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை வடிவமைத்த, “பரஸ்பரம் நன்மை பயக்கும் உலகமயமாக்கல்” (mutually beneficial Globalisation) என்ற எண்ணக்கரு, முடிவுக்கு வந்துள்ளது.   

கொவிட்-19 தொற்று, மேற்குலகில் பரவத் தொடங்கியது முதல், பாதுகாப்பு உபகரணங்கள், “வென்டலேட்டர்”கள், சுவாசக் கருவிகள் போன்றவற்றுக்கு நாடுகள் முண்டியடித்தன. அவற்றை உற்பத்தி செய்து, விநியோகித்து வந்த நாடுகள், அவற்றை ஏற்றுமதி செய்யவில்லை; ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை.   

ஐரோப்பாவில், முதலில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகிய இத்தாலி, ஏனைய ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கேட்டது; யாரும் உதவவில்லை. எல்லோரும், தங்களது மருத்துவ, பாதுகாப்பு உபகரணங்களைப் போதுமானளவு சேர்த்து, சேமிப்பதிலேயே கவனம் செலுத்தினர். கைகழுவப் பயன்படுத்தப்படும் தொற்றுநீக்கித் திரவங்களை உற்பத்தி செய்த நாடுகள், அவற்றின் ஏற்றுமதியைத் தடை செய்தன.   

இந்தச் செயல்கள், எந்த அடித்தளத்தில் உலகமயமாக்கல் கட்டியெழுப்பப்பட்டுள்ளதோ, அதைக் கேள்விக்கு உள்ளாக்கின. சுதந்திர சந்தை, பொருள்களின் தடையற்ற பரிமாற்றம், அரசுகள் வர்த்தகத்தில் தலையிடாமை போன்ற அனைத்து அடிப்படைகளும் மீறப்பட்டன.   

உலகமயமாக்கல் உருவாக்க முயன்ற, பொருளாதார ஒருங்கிணைப்பும் (Economic integration), அதன்வழி, தோற்றம் பெற்ற உலகப் பொருளாதார ஆட்சியும் (Global Economic governance) முடிவுக்கு வந்துள்ளன.   

கடந்த அரைநூற்றாண்டு காலமாக, உலகமயமாக்கலை உலகெங்கும் எடுத்துச் சென்ற செயல் வீரனான அமெரிக்காவே, கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகமயமாக்கலுக்கு முடிவு கட்டியுள்ளது. கொவிட்-19 நெருக்கடியின் போது, அமெரிக்கா உலகமயமாக்கலைக் குழிதோண்டிப் புதைத்தது. இதை விளக்குவதற்கு, நன்கறிந்த இரண்டு அண்மைய உதாரணங்கள் போதுமனவையாகும்:   

1. சீனாவிடம் இருந்து முகக் கவசங்களை, பிரான்ஸ் கொள்வனவு செய்திருந்தது. அவை, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டுப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், ஓடுதளத்துக்கு வருகை தந்த அமெரிக்க அதிகாரிகள், பிரான்ஸ் வழங்கிய பெறுமதியை விட, மூன்று மடங்கு அதிக பெறுமதியைத் தருவதாகச் சொல்லி, விமானத்தை அமெரிக்காவை நோக்கிப் பயணிக்கக் கோரினர். மேலும், உடனடியாகவே உரிய தொகையை, அமெரிக்க டொலர்களில் தருவதாகச் சொல்லி, முழுத்தொகையையும் அவர்கள் வழங்கினர். இதனால், பிரான்ஸுக்குச் செல்லவிருந்த முகக்கவசங்கள், அமெரிக்காவுக்குச் சென்றன. “அமெரிக்கா, சர்வதேச உறவுகளைக் குழிதோண்டிப் புதைக்கிறது” என்று பிரான்ஸ் அதிகாரிகள் விசனப்பட்டார்கள்.  

2. ஜேர்மனியால் கொள்வனவு செய்யப்பட்ட முகக்கவசங்கள், சுவாசக்கருவிகள், கையுறைகள் ஆகியன, பெர்லின் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, தாய்லாந்து தலைநகர் பாங்ஹொக்கில் வைத்து, அமெரிக்க அதிகாரிகளால் களவாடப்பட்டன. இதனை, ஜேர்மனி பகிரங்கமாகவே, வன்மையாகக் கண்டித்தது.   

அமெரிக்கா, உலகமயமாக்கலில் இருந்து பின்வாங்கத் தொடங்கிய கடந்த சில ஆண்டுகளில், ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேக்கல், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர், உலகமயமாக்கலின் புதிய செயல் வீரர்கள் ஆகினர். ஆனால், கொவிட்-19 நெருக்கடியின் போது, இவ்விரு நாடுகளில் உற்பத்தியாகும் பொருள்கள், ஏற்றுமதி செய்யப்படுவதை அந்நாடுகள் தடை செய்தன. இதன்மூலம், உலகமயமாக்கலுக்கான இன்னொரு புதைகுழியை அவை வெட்டின.   

இந்த உதாரணங்கள், உலகமயமாக்கலை முன்தள்ளிய நாடுகள், இப்போது எத்திசையில் பயணிக்கின்றன என்பதையும் உலகமயமாக்கலைத் தக்கவைக்கத் தேவையான பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் நாடுகளிடையே இல்லை என்பதையும், எடுத்துக் காட்டுகின்றன.   

சர்வதேச கூட்டு ஒத்துழைப்பை, இதுவரை காலமும் கொஞ்சம் சாத்தியமாக்கிய அரசாங்கங்களினதும் அதன் தலைவர்களினதும் சுயஒழுக்கம், இப்போது இல்லை என்பது வெளிப்படை. தேசிய நலன்களும் பூகோள ஆதிக்கத்துக்கான அவாவும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேசங்கள் இணைந்த செயற்பாடுகள் சாத்தியமற்றவை ஆகியுள்ளன.   

இங்கே, மூன்று விடயங்களை நாம், குறிப்பாக நோக்க வேண்டும்.   
முதலாவது, தேசியவாதத்தினதும் நிறவெறியினதும் வளர்ச்சி, எவ்வாறு உலகமயமாக்கலுக்கு நெருக்கடியைக் கொடுத்தன.   

இரண்டாவது, கொவிட்-19, அரசுகளைச் சுயநலமாகச் சிந்திக்க வைத்ததன் ஊடு, உலகமயமாக்கலை எவ்வாறு புறந்தள்ளின.   

மூன்றாவது, கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கம், பூகோள அரசியல் போட்டியை அதிகரித்து, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை, எவ்வாறு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.   
இந்த மூன்றையும் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் பெருந்தொற்று எவ்வாறு உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என்று கொள்கை வகுப்பாளர்கள், நோக்குகிறார்கள் என்று பார்க்கலாம்.   

உலகநாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைவகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் இதழான Foreign Policy இதழ், தனது வசந்த கால இதழுக்கு இட்ட தலைப்பு, Is this the end of Globalisation? (இது, உலகமயமாக்கலின் முடிவா?)  

உலகமயமாக்கல், தனது மரணப் படுக்கையில் இருக்கையில், அதைச் சவப்பெட்டிக்குள் இட்டு, அதன் மீதான இறுதி ஆணியைக் கொவிட்-19 இறுக்க இருக்கிறது என்று, அவ்விதழ் தலையங்கம் எழுதியுள்ளது. பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சவுணர்வும் நிச்சயமின்மையும், உலகமயமாக்கலுக்கு எதிராக இருக்கிறது. மக்கள் விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள்; புதிய நாடுகளுக்கு, சுற்றுலா செல்வது குறித்து யோசிக்கிறார்கள்.   

சீனர்கள் மீதான வெறுப்பாகத் தொடங்கி, இத்தாலியர்கள், கொரியர்கள், ஸ்பானியர்கள் மீதானதாகப் பரவி, இன்று, அமெரிக்கர்களைக் கண்டு, அப்பால் நகர்கிற நிலையை உலகம் அடைந்துள்ளது. எதையெல்லாம், உலகமயமாக்கல் சாத்தியமாக்கியதோ, அவையனைத்தும் இப்போது இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளன.  

எல்லாம் உலகமயமாக வேண்டும் என்பதுதான், முதலாளித்துவத்தினதும் அதன்வழி தோற்றம் பெற்ற உலகமயமாக்கலினதும் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால், இவ்வாறு ஒரு தொற்று, உலகமயமாகும் என்பது, நிச்சயமாக அதன் எதிர்பார்ப்பல்ல. இன்றைய நிலையில், கொவிட்-19 தொற்று, 187 நாடுகளில் பரவியுள்ளது. இது உலகமயமாகி, உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.   

நோய்த்தொற்றுகள், பலவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் வல்லமை வாய்ந்தவை. இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. கி.மு 430இல் ஏதென்ஸ் நகரை “பிளேக்” நோய் தாக்கியது. இது, மூன்றாண்டுகள் நீடித்தது. ஏதென்ஸ் நகர சனத்தொகையில், மூன்றில் ஒரு பங்கை, இத்தொற்றுக் காவுகொண்டது. ஏதென்ஸின் முக்கியமான தலைவர்களை, இது கொன்றொழித்தது. இதில், முக்கியமானவர் இராணுவத் தளபதியாகவும் சிந்தனையாளராகவும் இருந்த பெரிகிளிஸ். பிளேக் நோயின் தாக்கத்தால், ஸ்பாட்டக்களுடனான யுத்தத்தில், ஏதென்ஸ் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது, ஏதென்ஸின் அதிகாரச் சரிவுக்கு, வழி சமைத்தது.   
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா, தனது உலகத் தலைமையைத் தக்கவைத்தாலும், உலகமயமாக்கலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது.   

மறுமுனையில், பொருளாதார ரீதியிலான தலையாய நிலைக்கு, சீனா முன்னேறியதோடு, அமெரிக்காவின் தலைமைக்குச் சவால் விடுத்த வண்ணமுள்ளது. சீனா, உலகமயமாக்கலை முன்னிறுத்தி, ஊக்குவித்து வந்துள்ளது. இதுவே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போராக மாற்றம் பெற்றது. இந்நிலையிலேயே, கொவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கியது.   
இப்போது, கேள்வி யாதெனில், கொவிட்-19இன் நிறைவில், ஏதென்ஸ் யார்? ஸ்பாட்டா யார் என்பதுதான்?  

அதுபற்றி, அடுத்தவாரம் பார்க்கலாம்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters