அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்து சட்டத்தை அமுல் படுத்துவோம் என முடிந்தால்  மக்களுக்கு உறுதியளிக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்தார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களைக் கைது செய்வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதைச் செய்யக்கூடிய நிலையில் உள்ளதா அல்லது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி சமூகத்தில் பேசப்படுகிறது என்றார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்து இன்று ஆயிரம் நாட்கள் கடந்துவிட்ட நிலையில், சஹாரானின் கும்பலின் முக்கிய சந்தேகநபரான சாரா ஜஸ்மின் புலஸ்தினி மகேந்திரனைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

சாரா இன்னும் உயிருடன் இருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவளைக் கைது செய்ய உதவுமாறு அரசாங்கம் இன்டர்போலுக்கு அறிவித்துள்ளதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என தெரிவித்தார்.

சஹாரானுக்குப் பக்கத்தில் இருந்த சாரா என்ற அந்தப் பெண்ணை பிடிக்க முடிந்தால், மூளையாக செயற்பட்டோர், ஆயுதங்கள், வெடிகுண்டுகளை வைக்க கற்று கொடுத்தவர்களை எல்லாம் கண்டு பிடிக்கலாம் என்றும் ஆனால் அந்தப் பெண்ணைப் பிடிக்கும் பணி மெதுவாக நடப்பதைக் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் காணப்பட்டன. ஆனால் எந்த இடத்திலும் சாராவின் புகைப்படம் இடம் பெறவில்லை. சாராவை பிடிப்பதை அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்க்கிறதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். -தமிழ் மிற்றோர் (2022-01-18 03:37:46)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page