காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன? காதிகளும் ஒரு காரணமா?

காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன ? காதிகளும் ஒரு காரணமா ? சமூக பொறுப்பாளர்கள் கண் திறப்பார்களா ?

அண்மைக்காலமாக காதி நீதிமன்றங்கள் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ன ஒரு ஒரு சாராரும், காதி நீதிமன்றங்கள் திருத்தப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ன இன்னொரு சாராரும் தொடர்ந்து இந்த விடயத்தில் விவாதித்து வருகின்றனர்.

காதி நீதிமன்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றியும், அது சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியும் காதி நீதிமன்றங்கள் திருத்தப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும் என பல கட்டுரைகள் மூலம் சமூகத்திற்கு வெளிப்படுத்தினேன்.

இதைத் தொடர்ந்து காதி நீதிமன்றத்தின் மூலம் பாதிக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட சில சகோதரிகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், இன்னும் சமூகத் தொண்டு புரியும் சமூக ஆதரவாளர்களும் தொடர்பு கொண்டு இவ்வாறு எழுத வேண்டாம். காதி நீதிமன்றங்களின் மூலம் அநீதி இழைக்கப்படுகின்றன. அவை ஒழித்துக் கட்டப்படல் வேண்டும் எனவும், சிலர் தங்களது ஆதங்கங்களையும் காதிகளால் நடந்த சில நியாயங்களையும் விளக்கமாக தெரிவித்தனர்.

இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் முன்னிலையில் சில சகோதர சகோதரிகளும் சென்று காதி நீதிமன்றங்களில் தமக்கு சில அசாதாரணங்கள் நடந்ததாக முறையிட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது. அவ்வாறு அங்கு சென்று முறையீடு செய்பவர்களை ஒருதலைப்பட்சமாக நாம் விமர்சித்தாலும், சம்பந்தமாக நடுத்தரமாக ஆராய்வதே பொருத்தமாகும்.

காதி நீதிமன்றங்கள் நம் மக்களாலேயே ஏன் இவ்வளவு தூரம் எதற்காக விமர்சிக்கப்படுகின்றன. என்பதை கருத்தில் கொண்டு, இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக சிறிய ஒரு ஆய்வினை மேற்கொண்டேன்.

நாடு பூராகவும் சுமார் 60 காதிகள் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 60% வீதமானவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து நீதி செலுத்தினாலும் 40% வீதமானவர்கள் மிகவும் ஈவிரக்கமற்ற, மனிதநேயமற்ற படு மோசமானவர்களாவும், லஞ்சம் வாங்க்கூடிய ஊழல்லாதிகளாகவும் காணப்படுகின்றதை அறிய முடிந்தது. சில இடங்களில் இவர்களும் மனிதர்கள் தானா என நினைக்கும் அளவுக்கு சில காதிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததை கவலையுடன் குறிப்பிடல் வேண்டும்.

இவ்வாறானவர்களால் அநீதி இழைக்கப்பட்ட சில சம்பவங்களை இச்சந்தர்ப்பத்தில் சமூகத்தின் முன் எடுத்து வைப்பது பொருத்தம் என நினைக்கின்றேன்.

1 – காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தாயிடம் வினவியபோது அவர் சொன்ன விடயங்கள்.

ஒரு வறிய குடும்பம். தன் மகளை ஒருவருக்கு கட்டிக் கொடுத்தார். ஆறு மாதங்கள் ஓடியது குடும்பத்தில் பிரச்சினை. தீர்த்துவைக்க பலர் முயற்சித்தனர் முடியவில்லை. இறுதியில் தலாக் பெறுவதற்காக காதியை நாடிய போது காதி சொன்ன விடயத்தை அந்த வறிய தாய் கண்ணீர்மல்க கூறினார்.

” இந்த விடயத்தில் இருந்து உங்கள் மகளுக்கு தலாக் பெற்று தருகிறேன். அதேவேலை என் மனைவி காலம் சென்று விட்டார். தான் தனியாக வீட்டில் இருக்கின்றேன். வீடு எனது சொந்த வீடு. ஆனால் உங்களது மகளை நான் மணந்து கொள்கின்றேன் இதற்கு விருப்ப்படுங்கள் “

என அந்தத் காதி சொன்ன செய்தியை அந்தத் தாய் தன் கண்களால் வடிந்த கண்ணீரை தன் முந்தானையால் துடைத்தவராக மிக்க மனவருத்தத்தோடு கூரினார். இத்தனைக்கும் அந்த காதி வயதானவர். பெண் பிள்ளையின் வயது சுமார் 25 குல் இருக்கும் என நினைக்கிறேன். காதியும் வேண்டாம், தலாக்கும் வேண்டாம் என வாழவேண்டிய வயதில் அந்த பெண் பிள்ளை வாழா வெட்டியாய் தற்பொழுதும் வீட்டில் இருக்கின்றார். அந்தப் பிள்ளையின் இன்னொரு வாழ்க்கைக்காக இன்னும் வழக்குக் கூட தொடரப்பட வில்லை. வேட்டை நாய்யிடம் பாதுகாப்புத் தேடி காட்டுக்கு ஓடினால் வேட்டையாடும் சிங்கம் அங்கே காத்து நின்றதாம்.

2 – காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்ட இன்னொரு குடும்பம். அக்குடும்பத்தின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. அவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். தன் மகளை மணமுடித்துக் கொடுத்தார். ஒரு பிள்ளை இருக்கின்றது. சிறிது காலம் கழிந்து ஓடியது. அவர்களுக்கிடையில் வாழ்க்கையில் பிரச்சனை. குடும்ப பிரிந்தது. அக்குடும்பத்தை சேர்த்துவைக்க நானும் பல முயற்சிகள் செய்தேன் முடியவில்லை. இறுதியில் காதி இடம் சென்று தலாக் பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்தார்கள்.

அண்மையில் அந்த தாயை சந்தித்தேன். உங்கள் மகளின் தலாக் விவகாரம் என்னவாயிற்று எனக் கேட்டேன். அதற்கு அவர், தான் காதியிடம் சென்றதாகவும். காதி வழக்கு பதிவு செய்ய பத்தாயிரம் ரூபா கேட்டதாகவும். தன்னிடம் வசதியில்லை என கூறியதற்கு இரண்டாயிரத்தை குறைத்து எட்டாயிரம் ரூபாய்கள் தரும்படி கெட்டதாகவும் கூறினார். மேலும் தன்னிடம் கொடுப்பதற்கு எட்டாயிரம் ரூபாய் இல்லாத காரணத்தினால் எட்டாயிரம் ரூபாய் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் எனவும் கூறினார்.

உடனே காதியின் தொலைபேசி இலக்கத்தை அந்தத் தாயிடம் பெற்று காதியிடம் நான் நேரடியாக கதைத்தேன். ஏன் அவர்களிம் காசு கேட்கின்றீர்கள். அவர்கள் வறியவர்கள் அவர்களிடம் அந்தளவு காசு இல்லை எனக் கூறினேன். அதற்கு காதி என்னிடம் .

“haji எங்களுக்கும் செலவுகள் செலவுகள் இருக்கின்றன கோழி குஞ்சாக இருந்தாலும் குனிஞ்சி தானே அருக்கோணும் ” எனக் கூறினார். இது இது இன்னெரு காதியின் நிலை.

3- அடுத்ததாக ஒரு காரியாலயத்தில் வேலை செய்யும் எனது குடும்ப உறவினர் ஒருவர், முடிந்தால் இந்த அனாதைகளுக்கு உதவி செய்யும்படி ஒரு காதி நீதிமன்ற விடையத்தை என்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார். அவர்களை வீட்டுக்கு அழைத்து கதைத்தேன்.

சிறுவயதிலேயே தகப்பனை இழந்து, குடும்ப உறவுகளின் ஆதரவோடு வளர்ந்த ஒரு பெண் பிள்ளை. தெஹிவளை பகுதியில் வசிப்பவர். நன்கு படித்தவர். ஒரு காரியாலயத்தில் வேலை செய்பவர். அனாதை என இறைவன் எழுதிய விதி. ஒரு துணையைத் தேடிக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டனர். குடும்பத்தினரால் ஒரு சம்பந்தம் பேசி முடித்து வைக்கப்பட்டார். தான் கட்டப்போகும் கணவன் சம்பந்தமாக மனநிறைவான தரவுகள் கிடைக்காத போதும், தான் தன் உறவினர்களுக்கு சுமையாகவும், தன் தாயின் நித்திரையை கெடுக்கும் தன் சுமை, தன் தாய் உலகில் இருந்து இறுதி மூச்சை விடும் போது நிம்மதியாக கண்ணை மூட வேண்டும் என்பதற்காக தன் குடும்பத்தினரால் பேசிய சம்பந்தத்தை ஒப்புக்கொண்டதாக கவலையுடன் கூறினார்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் ஓடின. கணவன் ஒரு சந்தேகப் பேய். காரியாலயத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தாலும் ஆயிரம் சச்சரவுகள். சேர்ந்து வாழ முடியவில்லை. வாழ்க்கையே ஒரு சதியாக உருவெடுத்தது. குடும்பத்தில் பலர் சமாதானம் பேசினர். சேர்ந்து வாழ முடிகயவில்லை. விதியை மாற்றி சதியில் வெல்ல பிரிவதே ஒரு வழியா தோன்றியது. தேடிவந்த உறவை பிரிந்து, அனாதைக்கு அன்பு காட்டும் உறவைத் தேடி விவாகரத்து பெற காதின் வழியே நாடினார்.

காதிஇடம் வழக்கை பதிவு செய்தார். உன்னை வாழவும் விடமாட்டேன், என்னை விட்டு பிரியவும் விடமாட்டேன், என கட்டிய கணவன் சபதம் இட்டார். காதி விடுதலை கொடுக்கவில்லை. அதனால் வழக்கு இரண்டரை வருடம் சென்றது. காதி கணவர் சார்பாகவே வழக்கை முன்னெடுத்தார். தன் கவலைகளை காதியிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கும் அடுத்த நிமிடமே கட்டிய கணவரிடமிருந்து அச்சுறுத்தல் வந்தன.

காதிக்கும் அவருக்கும் இடையில் அந்நியோன்யமான தொடர்பு இருப்பதை உணர்ந்தார். விடுதலை கிடைக்கவில்லை. காதி தொடர்ந்தும் கொடுங்கோலக் கணவனுடன் சேர்ந்து வாழவே வற்புறுத்தி வந்தார். தொடர்ந்தும் இப்பெண் மறுத்தே வந்தார். காதியின் கோரிக்கையை, வற்புறுத்தலை ஏற்காதினால் இரண்டரை வருடங்களின் பின் காதி வழக்கை தள்ளுபடி செய்தார். இரண்டரை வருடங்கள் விடிவுக்கா காத்து நின்றும் இன்னெரு துணையுடன் சேர்ந்து ஆசைப்பட்டாலும், வாழ விடிவு காதியிடம் கிடைக்கவில்லை.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், என்பது இஸ்லாம் மார்க்கம் அல்ல. பெண்ணடிமை தனத்திலிருந்து தனத்திலிருந்து பெண்களுக்கு அழகான சுதந்திரம் அளித்த மேலான மார்க்கம் இஸ்லாம். ஆக கடவுள் கொடுத்த வரத்தை பூசாரி தடுப்பது ஏன். தற்போது தூக்கி வளர்த்து பாதுகாத்த உறவுமில்லை. கவலையை கைதாங்க கட்டிய கணவனும் இல்லை. நிம்மதியாய் உறங்க கொடியவனிடம் இடமிருந்து விடிவும் இல்லை. காதியினால் நட்டாற்றில் விடப்பட்டார் இப் பெண். இறைவன் தன் தலைவிதியை ஒரு அனாதையாக எழுதிவிட்டான். சொல்லி அழ உறவில்லை. கண்ணீரை துடைக்க கைகள் இல்லை. அருகிலுள்ள பள்ளிவாசலில் சென்று முறையிட்டார். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மீண்டும் தொடர ஒரு சட்டத்தரணியினை நாடினார். அவர் காதி நீதிமன்ற திருத்தக் குழுவில் அங்கம் வகிப்பவர். வழக்குப் பதிவு செய்ய 15000/= கேட்டார். ஒரு தவணைக்கு 10000/= கேட்டார். அதிலும் சில தவணைகளில் 15000/= கொடுக்க வேண்டும் எனக்கேட்டார். தான் வாங்கும் ஊதியத்தில் தன் தாயையும் பராமரித்து வருவதால் அவ்வாறான தொகைகளை கொடுப்பதற்கு இவரால் முடியவில்லை.

அதனால் அதே காதியிடம் சென்று மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்தார். இருந்தாலும், இதே காதியிடம் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக நீதி கிடைக்கும் என நம்பிக்கை இழந்ததால், காதி நீதிமன்ற சட்டத்தின் படி ஒருவருக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் இந்த வழக்கை காதி சட்டத்தின் 67 சரத்துக்கு அமைவாக வேறு ஒரு காதிக்கு மாற்றித் தரும்படி காதி உட்பட காதி நீதிமன்ற ஆணையகம் அனைத்திற்கும் கடிதம் எழுதினார். காதி நீதிமன்ற ஆணையகம் தலையிட்டும் இக்காதியானவர் இதற்கான ஆதரவை அவர்களுக்கும் வழங்கவில்லை. இரண்டரை வருடம் ஆகியும் இக்காதியினால் இவரின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. உனக்கு வாழ்கையும் இல்லை, என்னில் இருந்து விடுதலையும் இல்லை என கணவர் விடுத்த சபதத்தை நிறைவேற்ற ஒரு கைக்கூலியாக காதி செயல் பாடுகின்றாரா என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இக்காதியானவர் ஒரு சட்டத்தரணி, தனது வல்லமையையும், பிழைப்புக்கான வழியையும் ஒரு அநாதைப் பெண்ணிடம் காட்டியும், எதிர்பார்த்தும் வருகிறார். இக்காதியின் விடயத்தில் முடியுமானால் இவ் அநாதை க்காக உதவும்படி அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கும் இன்னொரு காதியிடம் ஒப்படைத்தேன். அவர் தலையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

கொடிய கணவரின் பிடியில் சிக்கிய அநாதைப் பெண், விடிவைத் தேடி காதியிடம் சென்றால், காதியின் பிடியில் இருந்து தப்ப போராட வேண்டிய நிலைமை. இந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு காதியே ஒரு தடையாக உள்ளதை கவலையுடன் குறிப்பிடல் வேண்டும்.

இக் காதி சம்பந்தமாக விசாரித்துப் பார்த்த போது இவர் ஈவிரக்கமற்ற, லஞ்சம் வாங்கக் கூடிய, இவ் உத்தியோகத்திற்கு தகுதியற்ற, மிக மோசமான காதித் தொழிலை ஒரு வரப்பிரசாதமாக பயன்படுத்தும் பயங்கரமான ஒருவர் என அறிய முடிந்தது.

அண்மையில் பதுளை பகுதியில் ஒரு பெண், ஒரே நாடு ஒரே சட்டம், சர்ச்சைக்குரிய தேரர் முன்னிலையில் காதி நீதிமன்றத்தில் தனக்கு நடந்த அசாதாரணத்தை முன்வைத்தார். அதற்கு முதல் கண்டிப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வழக்கு பதிவாளர் ஒருவர், இவரின் முன்தோன்றி காதி நீதிமன்றம் சம்பந்தமான விமர்சனங்களை முன்வைத்தார்.

இவர்களின் நடவடிக்கை சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்கள் செய்தது தவறு, துரோகம் அதில் மாற்று கருத்தில்லை.

ஆனால் அவர்கள் அங்கு செல்ல காரணம் யார் ?

எமது காதிகள் நீதியாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் அவர்கள் அங்கு சென்றிருப்பார்களா? அல்லது காதிகள் செய்யும் அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் அவர்களுக்கு முறையிட முஸ்லிம் பிரிவுகள் அமைப்புக்கள் நம் சமூகத்தில் ஏற்பாடு செய்திருந்தாள் இவ்வாறு நடந்திருக்காது என்பதே உண்மை.

எமது சமூகம், சமூகத்தின் பொறுப்புதாரிகள் காதிகளை விசாரிக்கவும் கட்டுப்படுத்தவும் அவ்வாறான ஏற்பாடுகளை செய்துவிட்டு அந்நியர்களிடம் செல்கின்ற வர்களை குற்றம் சொல்வதில் நியாயம் உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு அவ்வாறான வாய்ப்புகளை வழங்காமல் அவ்வாறு குற்றம் செல்வதில் அர்த்தம் இல்லை என்பதே நியாயமானதாகும்.

எனவே காதிகளின் அநியாயங்களும் அட்டூழியங்களும் தொடருமாயின் இவ்வாறான சமூக சீரழிவுகளை தடுக்க முடியாது என்பதே உண்மை.

இவ்வாறு காதி நீதிமன்றத்தினால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்களை சந்தித்தாலும்தாலும் ஒரு சில விடயங்கள் மாத்திரமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளேன் .

ஒரு வரும் ஒன்றரை வருடம் என செலவுகள் கூட கொடுக்காத பல சமாச்சாரங்களை சந்தித்தேன். அவர்களின் நிலமை சொல்ல வார்த்தைகள் இல்லை. செலவுகளை பெற்றுக் கொடுக்க காதிக்கு அதிகாரமில்லை. செலவுகளை பெற்றுக் கொடுக்க காதி அவர்களை பொது நீதி மன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவர்களுக்கு அங்கு செல்ல வசதி இல்லை.

சில சகோதரிகளின் நிலை இரத்தக்கண்ணீரால் காவியங்கள் எழுதக் கூடியவை. காதியினால் அநியாயம் செய்யப்பட்ட ஒரு சில சகோதரிகளின் நிலையை வெளிப்படையாக எழுதுவதற்காக அவர்களிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் மறுத்தனர்.

இவ்வாறு எழுதினால் ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள எமது உரிமை பாதிக்கப்படக்கூடாது. என் வாழ்க்கைக்கு ஏதுவானாலும் என்னுடன் முடியட்டும் என தியாக உணர்வுடன் சிலர் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எனவே அனைவர்களின் மனநிலையும் ஒன்றுபோல் இல்லை என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கண்டியைச் சேர்ந்த வழக்கு பதிவாளர் தனது முறைப்பாட்டில் தான் காதி சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்றும் குறிப்பிடுவதை நாம் அவதானிக்க வேண்டும். எனவே பக்க சார்பற்ற முறையில் இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு ரீதியாக அணுகி அதற்கான தீர்வை அமைத்துக் கொடுப்பதே இதற்கான வழியாகும்.

காதி நீதிமன்றம் என்பது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை. இதில் மாற்றுக் கருத்தில்லை. இவற்றைப் பெற்றுக் கொள்ள நம் முன்னோர்கள் பல தியாகங்களை செய்தனர். காதி நீதிமன்றம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே காதிகள் என்ற போர்வையில் இதனுள் இருக்கும் சில காவாலிகள் வெளியேற்றப்பட வேண்டும். காதி பதவியை வரப்பிரசாதமாக கொண்டு வேறு வகையிலான பயன்களை அடைய முற்படுவோர் கண்டுபிடிக்கப்பட்டு இதில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

எமது உரிமைகளில் ஒன்றாகிய காதி நீதிமன்றத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுவாகும். எனவே சமூகத்தில் உள்ள பொறுப்புதாரிகள் முக்கியஸ்தர்கள் உடனடியாக இது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேலை மாறாக எமது உரிமைகளில் காலத்திற்கு ஏற்றவாறு சமூகத்தின் தேவைக்கு ஏற்றவாறு பொறுப்பானவர்கள் திருத்தங்களை செய்து, ஒரு பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு பாதகம் ஏற்படாமல் பாதுகாக்கத் தெரியாத, சமூகத்திற்கு உரிமைகள் என்ற பெயரில் அப்பாவிகளான வறிய பிள்ளைகளை பாதிக்கக்கூடிய இப்படி ஒரு வரப்பிரசாத உரிமை தேவை தானா எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

எனவே சமூகத்தின் பொறுப்புதாரிகள், ஆன்மீக தலைமைகள், இவ்வாறான சமூக சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் நிலைமைகள் சம்பந்தமாக கூடிய சீக்கிரம் இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் வரையில் அந்நியருக்கு மத்தியிலான இவ்வாறான ஏற்படும் சமூக சீரழிவுகளை தடுக்க முடியாது என்பதே உண்மை.

இவ்வாறாக இன்னும் பல சமாச்சாரங்கள் ஞானஸார தேரரிடம் செல்வதை தடுக்க முடியாது. ஆக காதி நீதி மன்றங்கள் பாது காக்கப்பட வேண்டுமாயின் முதலில் இவ்வாறான வர்களிடமிருந்தே முதலில் பாதுகாக்கப்படல் வேண்டும். பொறுப்புதாரிகள் கூடிய சீக்கிரம் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா ?

( பேருவளை ஹில்மி )