அரசியல்வாதிகளின் தேவைகளுக்கே மதுபானச்சாலைகள் மீண்டும் திறப்பு

அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே மதுபானச்சாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் முற்றிலும் தவறானது. கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது என
ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டிய போதிராஜ விகாரையில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மதுபானச்சாலைகளை திறக்குமாறு பொது மக்கள் எவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை.

அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து சேவை உள்ளிட்ட விடயங்களை மாத்திரமே முன்வைத்தார்கள். பெரும்பாலான மதுபானச்சாலைகள் அரசியல்வாதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் சொந்தமானது. இவர்களது கோரிக்கைகளுக்காகவே மதுபானச்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணப்பட்டன.ஆனால் மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை முற்றிலும் தவறான தீர்மானமாகும். மதுபோதையில் உள்ளவர்கள் எவ்வாறு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவார்கள். மதுபானசாலைகளின் முன்னிலையில் வரிசைகரமாக இருந்தவர்கள்
செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது.

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி உலக நாடுகள் பாதுகாப்பான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மிகவும் நெருக்கடியான நிலையில் மதுபானச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளமை கொரோனா வைரஸ் பரவலை தீவிரப்படுத்தும். ஆகவே மதுபானசாலைகளை மீள திறக்க அரசாங்கம்
எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

Previous articleVideo – நாடு முழுதும் 17ம் திகதி முழுமையான ஊரடங்கு
Next articleAl Jazeera – உடலை தகனம் செய்தது தொடர்பாக, ரினோஸாவின் மகன் கூறியது.